எச்சரிக்கை!..... நீங்கள் எதிர்பார்ப்பது உள்ளே இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். ''தலைப்பை நம்பி மோசம் போனோமே'' என்று எவரும் என்னை ஏசாதீர்!
பயணிகளின் பயணச்சீட்டைச் சரிபார்த்து முடித்த நடத்துனர் நடராசன், ஓட்டுநர் பாட்சாவுக்குக் கேட்கும்படியாக, ''வாங்கின சீட்டுல ஒன்னு குறையுது. கேட்டைக் கடக்கிறவரைக்கும் மெதுவா உருட்டுங்க பாய்'' என்றான்.
''யார்கிட்டேயும் சொல்லிட்டுப் போனாங்களான்னு கேளுப்பா'' என்றார் பாட்சா.
ஒருமுறை முன்னிருந்து பின்னாகப் பார்வையை ஓடவிட்டான் நடராசன். கேட்கவும் செய்தான். எவரும் வாய் திறக்கவில்லை.
பின்னிருக்கை ஒன்றில் ஓரமாக அமர்ந்திருந்த அருக்காணிக் கிழவி மட்டும் ஏதோ சொல்ல மெல்ல வாய் திறந்து மூடினாள். அவளருகில் நடைபாதையை அடைத்துக்கொண்டிருந்த எவர்சில்வர் அண்டா அவளின் வாயை அடைத்தது.
'அண்டா ஐநூறு அறுநூறு ரூபாய் தேறும். மேற்கொண்டு கொஞ்சம் பித்தளைப் பாத்திரம் வாங்கினா வர்ற மாசியிலேயே மகள் பங்குசத்துக்குத் தனிக் குடித்தனம் வெச்சிடலாம்' -கிழவியின் மனதில் இப்படியொரு தப்பான ஆசை முகிழ்த்து மறைந்தது.
பேருந்து வந்து நின்றவுடனே சீட்டு வாங்கிக்கொண்டு வண்டியில் அமர்ந்துவிட்டிருந்தாள் அருக்காணிக் கிழவி. கிழவிக்கு வயது அறுபது[இந்தக் கதை நிகழ்ந்தது இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதெல்லாம் அறுபது வயதுக்காரிகள் கிழவிகளாகத்தான் தெரிந்தார்கள். அறுபதைத் தாண்டிய இக்காலக் குமரிகள் கோபிக்கக்கூடாது].
தன்னந்தனியளாக அவள் மட்டுமே வண்டியில் இருந்த நிலையில், ஒரு கொடுவாள் மீசைக்காரன் வெகு சிரமப்பட்டுத் தூக்கிவந்த அந்த எவர்சில்வர் அண்டாவை அவளருகே வைத்துவிட்டு, ''ஆயா, இதைக் கொஞ்சநேரம் பார்த்துக்கோ. ஒரு சிங்கிள் டீ குடிச்சிட்டு வந்துடுறேன்'' என்று சொல்லிவிட்டுப் போனான்.
போனவன் போனவன்தான்.
பேருந்து, நிலையத்திலிருந்து வெளிப்பட்டு, எதிரும் புதிருமாய் வந்துபோகும் வாகனங்களை ஊடுருவி மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. பத்துப் பதினைந்து நிமிடம் போல அதன் இருபக்க வாசல்படிகளையே மாறி மாறி நோட்டமிட்டாள் கிழவி. அண்டாக்காரனின் கொடுவாள் மீசையோ காதுகளில் பளிச்சிட்ட சிவப்புக்கல் கடுக்கண்களோ தென்படவே இல்லை.
கிழவியின் வதனத்தில் வெகு சன்னமாய் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்தன. கண் மூடி மானசீகமாய் அவளின் குலதெய்வமான கருப்பண்ணசாமியைக் கும்பிட்டாள்; பழனி முருகனுக்குத் தலைமுடி காணிக்கை செலுத்துவதாகவும் நேர்ந்துகொண்டாள்.
கருப்பண்ணசாமியும் கந்தவேளும் அவளின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்திருக்க வேண்டும். அடுத்த சில நிறுத்தங்களில் வண்டி நின்றபோதுகூட மீசைக்காரன் அதில் ஏறவேயில்லை.
நீண்டதொரு நிம்மதிப் பெருமூச்சு கிழவியிடமிருந்து வெளிப்பட்டது. அருகிலிருந்தவர்களை ஒருமுறை நோட்டம் விட்டுவிட்டு, அண்டாவை இழுத்துத் தனக்கும் அதற்குமான இடவெளியைக் குறைத்தாள்.
''ஆயா, அண்டா உன்னோடதுதானா?'' -சற்றும் எதிர்பாராத நிலையில் ஓங்கி ஒலித்த நடத்துநரின் கேள்வி கிழவியைச் சற்றே நிலைதடுமாற வைத்தது.
'இவனுக்கு உண்மை தெரிஞ்சிருக்குமோ?' என்று சந்தேகப்பட்டாள். ஆனாலும் அண்டாவை விட்டுக்கொடுக்க மனமில்லை. ''என்ன இப்படிக் கேட்டுட்டே? அண்டா என்னோடது இல்லேங்கிறியா?'' என்று எதிர்க்கேள்வி தொடுத்தாள்.
''சும்மா கேட்டேன். கோவிச்சுக்காதே. ஆமா, அண்டாவுக்குள்ள என்ன இருக்கு?'' எனறான் நடராசன்.
அண்டாவின் மேல் பகுதி தடித்த துணியால் சுற்றப்பட்டிருப்பதை அப்போதுதான் கவனித்தாள் கிழவி; சமாளிப்பது என்று முடிவெடுத்தாள். ''என்னவோ இருக்கு. தெரிஞ்சி என்ன பண்ணப்போறே?'' என்றாள்.
''பத்து ரூபா லக்கேஜ் சார்ஜ் குடு'' என்ற நடராசு, அவளுக்கான பயணச் சீட்டுடன் லக்கேஜுக்கான சீட்டையும் தந்தான்.
வேறொரு சமயமாக இருந்திருந்தால் அவனுடன் ஒரு பட்டிமன்றமே நடத்தியிருப்பாள் அருக்காணிக் கிழவி. பல நூறு ரூபா மதிப்புள்ள அண்டாவை வெறும் பத்து ரூபா தனக்குச் சொந்தம் ஆக்குவதால், மறு பேச்சுப் பேசாமல் பணத்தை நீட்டினாள்.
எதிர்பாராத வகையில், வழியில் காவல் துறையினரால் பேருந்து நிறுத்தப்பட்டது.
காவலர்கள் சிலர் பயணிகளிடமிருந்த பெட்டிகள், கைப்பைகள் போன்றவற்றைச் சோதித்துக்கொண்டிருக்க, கிழவியின் அருகிலிருந்த எவர்சில்வர் அண்டாவைத் தன்னிடமிருந்த பிரம்பால் 'தட் தட்' என்று தட்டினார் ஆய்வாளர்.
''அண்டா யாருது?'' -கேட்டார்.
கிழவியின் மனதில் இப்போது திகில் பரவியது. 'மீசைக்காரன் கஞ்சா அபினின்னு கடத்தல் பண்டம் எதையும் வெச்சிருப்பானோ?' என்று சந்தேகித்தாள்.
''இது யாரோடது?'' ஆய்வாளரின் அதட்டல் அருக்காணியை வாய் திறக்க வைத்தது. ''என்னோடதுதாங்க'' என்றாள்.
''உள்ளே என்ன இருக்கு?'' என்று கேட்ட ஆய்வாளர் கிழவியின் பதிலை எதிர்பாராமல் அண்டாவைச் சுற்றியிருந்த துணியை அகற்றினார்.
அடுத்து, அழுத்தமாகத் திணிக்கப்பட்டிருந்த கம்பளிப் போர்வையையும் அப்புறப்படுத்தினார். சில உல்லன் சால்வைகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. உள்ளே என்ன இருக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் அவற்றையும் நீக்கியபோது, அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பயணிகள், ''ஐயோ... பொணம்...பொணம்..... துண்டு துண்டாப் பொம்மணாட்டி பொணம்...'' என்று வாய்விட்டு அலறினார்கள்.
அருக்காணிக் கிழவி?
அவள் மயங்கிய நிலையில் இருக்கையில் சாய்ந்து கிடந்தாள்.
------------------------------------------------------------------------------------------------------------------
பழனி முருகனுக்கு முடிகாணிக்கை செலுத்துவதாக வேண்டியும் இப்படி சதிக்கலாமோ...?
பதிலளிநீக்குகுலதெய்வம் ராஜகோபாலும் மன்னிக்கவும் கருப்பண்ணசாமியும் கை விட்டுட்டாரே...
ஏழுமலையானுக்கு நேர்ந்திருந்தா அருக்காணிக் கிழவியை அவர் கைவிட்டிருக்க மாட்டார்னு தோணுது.
நீக்குநன்றி கில்லர்ஜி.
//அறுபதைத் தாண்டிய இக்காலக் குமரிகள்..//
பதிலளிநீக்குநீர் எழுபதைத் தாண்டின கிழம். உம்ம கண்ணுக்கு 60 வயசுக் கிழவிகள் குமரிகளாத் தெரியறதில் ஆச்சரியம் இல்ல!
'சில நேரங்களில்' சில எழுபதுகளே என் கண்ணுக்குக் கிளு கிளு குமரிகளாகத்தான் தெரியுதுக. ஹி...ஹி...ஹி!
நீக்குநன்றி பக்கவாத்தியம்.
கதை படிக்கும்போதே முடிவை இப்படி ஏதோ எனத்தான் எதிர்பார்த்தேன்.. நான் எதிர்பார்த்தது போதை வஸ்துவாக இருக்கும் என.. இருப்பினும் எதிர்ப்பாலாரை விட்டுப் போட்டு எம்பாலாரை வம்புக்கு இழுத்தமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:).. ஏனெனில் எதிர்ப்பாலார்தான் 50 வந்திட்டாலே வயோதிபர்போல சோகமாகத் திரிவார்கள்:) நம்பாலாரோ.. எண்பதிலும் யங் லுக் தேன் ஹா ஹா ஹா:))
பதிலளிநீக்கு//'சில நேரங்களில்' சில எழுபதுகளே என் கண்ணுக்குக் கிளு கிளு குமரிகளாகத்தான் தெரியுதுக. ஹி...ஹி...ஹி!//
நீக்குஎன் பின்னூட்டத்திலுள்ள 'சில' என்பதைப் 'மிகப் பல' என்று திருத்திக்கொள்கிறேன். கண்டனத்தைத் திரும்பப் பெறவும்!
நன்றி அதிரா.