செவ்வாய், 24 ஜூலை, 2018

ஒரு நடுவணமைச்சரின் 'நவ அநாகரிக'ப் பேட்டி!!!

ஒரு நடுவணமைச்சரின் பேட்டி இந்த வார விகடனில்[25.07.2018] வெளியாகியிருக்கிறது. நிருபர் தொடுத்த பல கேள்விகளில் இரண்டனுக்கு அமைச்சர் அளித்த பதில்கள் என் கவனத்தை ஈர்த்தன.

#கேள்வி 1:
'தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் தவறு செய்யத் துணிந்தவர்கள்' என்கிறீர்கள். சிறைச்சாலைக் கைதிகளில் பெரும்பான்மையோர் இறை நம்பிக்கை கொண்டவர்கள்தானே?

அமைச்சரின் பதில்:
தமிழகத்தில் தெய்வநம்பிக்கை இல்லாதவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று கணக்கிட்டால்[அமைச்சர் கணக்கு ஏதும் போடவில்லை; ஆதாரபூர்வமான புள்ளிவிவரப் பட்டியலும் தரவில்லை; குத்துமதிப்பாக அடித்துவிட்டிருக்கிறார்] ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே[ஒரு விழுக்காடு என்றே வைத்துக்கொள்வோம்] இருப்பார்கள். இந்த விகிதாச்சாரப்படிக் கணக்கிட்டால், தெய்வ நம்பிக்கை இல்லாத சிறைக் கைதிகளின் எண்ணிக்கை மூன்று அல்லது நான்கு விழுக்காடாக இருக்கும்[நான்கு விழுக்காடாகவே இருக்கட்டும்]. இதைச் சவால்விட்டே சொல்கிறேன். ஏனெனில் அவர்களுக்குப் பாவ புண்ணியத்தில் நம்பிக்கை கிடையாது#

இங்கே ஆதாரமில்லாத ஒரு புள்ளிவிவரத்தைத் தந்திருக்கிறார் அமைச்சர். தவறான புள்ளிவிவரம் தருவது எத்தனை பெரிய தவறு என்பது இந்தப் பெரிய மனிதருக்குப் புரியாமல் போனது ஏன் என்று புரியவில்லை. சவால் விட்டதன் தேவை என்ன என்பதும் தெரியவில்லை.

மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு மட்டுமே உள்ள நாத்திகர்களில் குற்றம் புரிந்து சிறைக்குச் சென்றவர்கள் 4 விழுக்காடு. மக்கள் தொகையில் 99 விழுக்காடாக இருக்கும் ஆத்திகர்களில் குற்றம் புரிந்து சிறையில் அடைபட்டிருப்பவர்கள் 94 விழுக்காடு[ஆத்திகர்கள் அத்தனை பேரும் உத்தமர்கள் ஆயிற்றே. குற்றம் புரிந்து இத்தனை பேர் சிறை புகுந்தது எவ்வாறு?] மட்டுமே என்பது மாண்புமிகுவின் கணக்கு.

நாத்திகரில் குற்றம் புரிவோர் அதிகம் என்பதும் ஆத்திகரில் அந்த எண்ணிக்கை குறைவு என்பதும் அமைச்சரின் வாதம்.

நிருபரின் கேள்விக்கு மிகச் சரியான விடையளிக்கும் வகையறியாமல் இப்படிச் சதவீதக் கணக்குப் போட்டுச் சொதப்பியிருக்கிறார் நடுவணமைச்சர். கொஞ்சமே கொஞ்சம் யோசித்திருந்தால்.....

''சமுதாயத்தில் உள்ள அத்தனை ஆத்திகர்களுமே பரம யோக்கியர்கள். சிறையில் இருப்பவர்கள் எல்லாம் வெளியில் நாத்திகம் பேசி வாழ்ந்த அயோக்கியர்கள். இவர்கள்  தண்டனைக்காலம் முடிவதற்குள் விடுதலை பெறும்[நன்னடத்தைக்காக] ஆசையில் ஆத்திக வேசம் போட்டு நல்லவர்களாக நடிக்கிறார்கள்'' என்று சொல்லி நிருபரின் வாயை அடைத்திருக்கலாம். ஏனோ செய்யவில்லை!

#கேள்வி 2:
எல்லாம் வல்ல இறைவனை மனிதனால் அவமானப்படுத்த முடியுமா? தெய்வத்துக்கே பரிகாரம் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்வது இறைவனை அவமானப்படுத்துவதாக ஆகாதா?

மாண்புமிகு பதில்:
அதாவது, தெய்வத்தை யாரும் அசிங்கப்படுத்த முடியாது... ஆனால், அவமானப்படுத்த முடியும். எந்த மதத்தைச் சேர்ந்த கடவுளும் 'எனக்கு மரியாதை வேண்டும்' என்று கேட்பதில்லை. ஆனாலும், அவரவர் மதத்துக்கு ஏற்றபடி தெய்வத்துக்குச் செய்யக்கூடிய மரியாதையைச் செய்து வருகிறார்கள். அந்த மரியாதையை அவமானப்படுத்தும்போது, அது தெய்வத்தையே அவமானப்படுத்திவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். அதையேதான் நானும் சொல்கிறேன்#

அசிங்கப்படுத்த முடியாது, அவமானப்படுத்த முடியும் என்கிறாரே அமைச்சர், அசிங்கப்படுத்துதலுக்கும் அவமானப்படுத்துதலுக்கும் என்னங்க வேறுபாடு? நிருபர் கேட்டிருக்கலாம் கேட்கவில்லை. நாம் கேட்கலாம். கேட்டால் பதில் வருமா?

'மரியாதையை அவமானப்படுத்தும்போது...' என்றும் சொல்லியிருக்கிறார். 

மனிதர்களை மனிதர்கள் அவமானப்படுத்தலாம். மரியாதையை அவமானப்படுத்த முடியுமா? எனக்குப் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்தால் மகிழ்ச்சி.

மாண்புமிகு நடுவணமைச்சர்[பொன்.ராதாகிருஷ்ணன்]  அவர்கள் சிறந்த பக்திமானாக வாழ்ந்து இறையருள் பெற்று வாழ்வாங்கு வாழட்டும். ஆனால், ஆத்திகம் நாத்திகம் ஆகியவை குறித்து அதிகம் அறிந்திராத நிலையில், அவை குறித்தான விமர்சனங்களை அவர் தவிர்ப்பது நல்லது. இது அறிவுரை அல்ல; இகழ்வுரையும் அல்ல; என் அன்பான பரிந்துரை.
------------------------------------------------------------------------------------------------------------------
ஆனந்த விகடனுக்கு என் நன்றி.










9 கருத்துகள்:

  1. மீன் சாப்பிடுவதால் நீண்ட காலம் உயிர் வாழலாம்
    http://www.tamilxp.com/2018/07/benefits-of-eating-fish.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு நன்றி Anand. பதிவைப் பின்னர் வாசிப்பேன்.

      நீக்கு
  2. அசிங்கத்துக்கும், அவமானத்துக்கும் உள்ள வேறுபாடு சத்தியமாக எனக்கு விளக்கவில்லை நண்பரே...

    இவர் லண்டன் யுனிவர்சிட்டியில் தமிழ் இலக்கியம் படித்தவரோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவர் லண்டன் யுனிவர்சிட்டியில் தமிழ் இலக்கியம் படித்தவரோ ?//

      இலக்கியத்தில் தத்துவம் இணைத்துப் படித்தவர்!

      நன்றி நண்பரே.

      நீக்கு
  3. UnknownJuly 24, 2018 at 8:12 AM
    ஒருவேளை கடவுள் இருப்பது உண்மையென்றாள், கடவுள் பெயரால் நடக்கும் இவ்வளவு கொடுமைகளையும்,அநியாயங்களையும் சும்மா வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு கல்(நெஞ்சு)லாக இருக்கும் கடவுளை செருப்பால் அடிக்க வேண்டுமே தவிர கோவில்களில் வைத்து போற்றக்கூடாது.

    ReplyDelete
    Replies

    'பசி'பரமசிவம்July 24, 2018 at 8:39 AM
    தங்களின் கோபம் நியாயமானதே. இருப்பினும், கடுஞ்சொல் தாக்குதல் வேண்டாம் என்பது என் பணிவான வேண்டுகோள்.

    நன்றி Unknown.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. நாகரிகம் 'நவ நாகரிகம்' ஆனதல்லவா, அது மாதிரிதான் 'நவ அநாகரிகம்' என்பதும்.

      நீக்கு
  5. கடவுள் என்ற சொல் நம்பிக்கை வாதத்தின் அடிப்படையில் எழுப்பப்பப்பட்ட ஒரு கருத்தாக்கம். சங்க காலத்தில் கடவுள் நம்பிக்கை இருந்ததா ? என்று தெரியவில்லை. இடைக்காலத்தில் தோன்றிய பக்தி இயக்கத்துக்கு பிறகு தான் தமிழ் நாட்டில் அதிகமாக தெய்வ பக்தி என்ற பழக்கம் வந்திருக்க வேண்டும்.

    பௌத்தம் பின்பற்றப்படும் ஜப்பான் நாட்டில் அநேகமாக கடவுள் என்ற சொல் எந்த பௌத்த நூலிலும் இல்லை என்று படித்திருக்கிறேன். ஜப்பானில் குற்றவாளிகள் அதிகமோ ? நாத்திக மதம் என்று கூறப்படும் சமண சமய மக்கள் அதிகம் குற்றம் செய்பவர்களா?

    பதிலளிநீக்கு