திங்கள், 22 அக்டோபர், 2018

'பெண்' உருவில் மூன்று பேய்கள்!!!

'தமிழ் இந்து'[22.10.2018] நாளிதழில் வெளியான ஒரு செய்தியை உள்ளது உள்ளவாறே பதிவு செய்திருக்கிறேன். பதிவின் தலைப்பு மட்டுமே என்னுடைய கைங்கரியம்!
கடந்த 2014 நவம்பரில் ஓடும் பேருந்தில் 3 இளைஞர்களை, அக்காவும் தங்கையும் அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதை யாரும் மறந்திருக்க முடியாது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதால் 3 பேரையும் அடித்துத் துவைத்ததாகச் சகோதரிகள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர்.
அந்தச் சகோதரிகள் ஹரியாணாவின் ரோட்டக் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, பூஜா. அவர்களுக்கு ‘வீரமங்கைகள்' என்று ஊடகங்கள் பட்டம் சூட்டி மகிழ்ந்தன. குடியரசு தின விழாவில் ஹரியாணா அரசு, இருவருக்கும் தலா ரூ.31,000 பரிசுத்தொகை வழங்கியது. பல்வேறு பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன. இரு மாணவிகளும் கல்லூரிக்குச் செல்ல போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ரோட்டக் சிறப்புப் புலனாய்வுப்பிரிவுப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
பேருந்துப் பயணத்தின்போது மூதாட்டி ஒருவரின் இருக்கையை ஆர்த்தியும் பூஜாவும் ஆக்கிரமித்துள்ளனர். இதை ஆட்சேபித்த கல்லூரி மாணவர்கள் தீபக், மோஹித், குல்தீப் ஆகியோர் மூதாட்டிக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். ஆத்திரமடைந்த அக்காவும் தங்கையும் 3 மாணவர்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதை செல்போனில் படம் பிடிக்குமாறு தங்கள் தோழியிடம்[இவளையும் சேர்த்ததால் பேய்கள் மூன்றாயின!] கூறியுள்ளனர். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள், 3 மாணவர்களுக்கு ஆதரவாகப் போலீஸில் வாக்குமூலம் அளித்தனர். சகோதரிகளிடமும் மாணவர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனையைப் போலீஸார் நடத்தினர். இதில் ஆர்த்தியும் பூஜாவும் அப்பட்டமாகப் பொய் கூறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ரோட்டக் நீதிமன்றம், கடந்த 2017 மார்ச்சில் 3 மாணவர்களும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி அளித்த தீர்ப்பில் 3 பேரும் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்தது.
எதிர்காலம் பாழானது
தீர்ப்பு குறித்துத் தீபக்கும் குல்தீபும் கூறியபோது, ‘‘வழக்கிலிருந்து விடுதலையாகிவிட்டோம். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டது. கல்லூரிபடிப்புக்குப் பிறகு ராணுவத்தில் சேரத் திட்டமிட்டிருந்தோம். ராணுவம், துணை ராணுவப் படைகளில் இணைய அதிகபட்ச வயது 23. இப்போது எங்களுக்கு 24 வயதாகிவிட்டதால் ராணுவத்தில் சேர முடியாது. போலிப் புகாரால் எங்கள் வாழ்க்கை பாழாகிவிட்டது’’ என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
பாலியல் வழக்கால் தீபக்கின் கல்லூரிப் படிப்பும் பாதியில் நின்றுவிட்டது.
மோஹித் கூறியபோது, ‘‘டெல்லி போலீஸ் பணியில் சேர வேண்டும் என்பது எனது சிறுவயது லட்சியம். பாலியல் புகார் வழக்கால் அது கனவாகிவிட்டது. நானும் எனது பெற்றோரும் சமுதாயத்தில் சந்தித்த அவமானங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனது தாயார் வெளியில் செல்லும்போது பர்தா அணிந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்’’ என்று தெரிவித்தார்.
ஊடகங்கள் மீது புகார்
மூன்று மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தீப் ரதி கூறியபோது, ‘‘பெரும்பாலும் பெண்களுக்கு ஆதரவாகவே செய்திகள் வெளியிடப்படுகின்றன. ரோட்டக் சகோதரிகளுக்கு ‘வீரமங்கைகள்' என்று பட்டம் சூட்டிய ஊடகங்கள், 3 மாணவர்களையும் அரக்கர்களைப் போன்று சித்தரித்தன. வீடியோ வெளியானபோது நாள்தோறும் பரபரப்பாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், 3 மாணவர்களும் விடுதலைசெய்யப்பட்ட செய்தியை யாருமே கண்டுகொள்ள இல்லை.
போலிப் புகாரால் எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கும் 3 பேரும் அப்பாவிகள் என்பதை ஊடகங்கள் உரக்க அறிவிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஒருதரப்பாகச் செய்தி வெளியிடுவதைத் தவிர்த்து இருதரப்பு நியாயத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: 'தமிழ் இந்து' நாளிதழ்.