ஞாயிறு, 21 அக்டோபர், 2018

பெண்ணினமே...பொறுத்தது போதும்!!!

பெண்களே.....

ஆடவரைக் காட்டிலும் நீங்கள் பக்தியில் சிறந்தவர்கள். ஆனால், எந்தவொரு கோயிலிலும் நீங்கள் அர்ச்சகராகப் பணி செய்ய அனுமதிக்கப்பட்டதில்லை. கோயில்களை நிர்வகிப்பவர்களும் ஆண்களே.

பெண்ணைத் தெய்வம் என்றார்கள். விதம் விதமான பெயர்களில் கோயில்களில் குடியேற்றினார்கள்; சிலை வைத்து வழிபட்டார்கள். ஆனால், அந்தப் பெண் தெய்வங்களுக்குப் பூசை செய்யும் உரிமைகூட உங்களுக்கு வழங்கப்பட்டதில்லை. 


இந்துக் கோயில்கள் என்றில்லை, கிறித்தவம், இஸ்லாம் போன்ற பிற மதக் கோயில்களிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள் ஆண்களே. கோயில்களைக் கூட்டிப் பெருக்கவும் பூத்தொடுத்துக் கொடுக்கவும் மட்டுமே நீங்கள் பணியமர்த்தப்பட்டீர்கள்.

கடந்த காலங்களில் கணவர்களையே கடவுளாக வழிபட்டவர்கள் நீங்கள். இப்போதும்கூட, அவர்கள் கைகாட்டும் கடவுள்களைத்தான் வழிபடுகிறீர்கள்.

ஆண்களில் நாத்திகர்கள் உண்டு. உங்களில் வலைவீசித் தேடினாலும், ''நான் கடவுள் மறுப்பாளி'' என்று சொல்லும் பெண்களைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல.

பட்டறிவு காரணமாக, பக்திமானாக இருந்து நாத்திகனாக மாறும் ஆடவரைக் காண முடியும். நீங்களோ, கணவனுக்காகவும் பெற்றெடுத்த பிள்ளைகளின் நலனுக்காகவும் கடவுளை நேர்ந்துகொள்பவராகவே காலம் கழிக்கிறீர்கள்.

பக்தியால் நீங்கள் பயன் பெறுகிறீர்களோ இல்லையோ, உண்மையில் பக்திநெறிக்குச் சிறிதும் பங்கம் நேராமல் பாதுகாப்பவர் நீங்களே. கற்பனையில் உருவாக்கப்பட்ட பல கடவுள்கள் இன்றளவும் வாழ்ந்துகொண்டிருப்பது உங்களால்தான்.

நீங்கள் இழிவுபடுத்தப்படுவதைக் கண்டுகொள்ளாத கடவுள் கடவுளே அல்ல; அந்தவொரு கடவுளை மட்டுமல்ல, இந்த அவலத்தை வேடிக்கை பார்க்கும் எந்தவொரு கடவுளும் உங்களுக்கு வேண்டாம்.
வேண்டாம்...கடவுள் வேண்டாம்...கடவுள்களும் வேண்டாம்.

''ஒழிக கடவுள்!...ஒழிக கடவுள்கள்!!'' என்று முழங்குங்கள். பருவப் பெண்களே[10 - 50].....உரத்த குரலில் முழங்குங்கள்.
=======================================================================