திராவகம் பட்டாற்போல் தகித்துக் கொண்டிருந்த தன் இடது கன்னத்தை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டான் பழனிச்சாமி.
அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக அறைந்துவிட்டாள் விநோதா.
அவள் போகும்போது, ''உன் காதலை நான் ஏத்துக்கலேன்னா செத்துடுவேன்னு எழுதியிருக்கியே, செத்துத் தொலை. காலேஜுக்கு ஒரு நாள் லீவு விடுவாங்க” என்று சொல்லி, அவன் தந்த கடிதத்தைக் கசக்கி அவன் முகத்தில் அடித்தாள்; அவன் இருந்த திசையில் காறி உமிழ்ந்துவிட்டுப் போனாள்.
உடைந்து சிதறிப் போனான் பழனிச்சாமி.
செத்துப் போவதென முடிவெடுத்தான்; யோசித்தான்.
’விஷம் தின்று சாகலாமா? ‘
‘எது விஷம்?’
’அதை எப்படிக் கடையில் வாங்குவது?’
ஒன்றும் புரியாததால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டான்.
'தூக்கில் தொங்கலாம்’ என்று நினைத்து, அதற்குத் தோதான இடம் அப்போது அமையாததால், அதையும் நழுவ விட்டான்.
அருகிலிருந்த சித்தர் மலையை அண்ணாந்து பார்த்த போது, அதன் உச்சியிலிருந்த செங்குத்துப் பாறை கண்ணில் பட்டது.
அங்கிருந்து குதித்தால், மிச்சம் சொச்சம் இல்லாமல் உயிர் பிரிவது நிச்சயம்.
மலை உச்சியை நோக்கிப் புறப்படத் தயாரானான் பழனிச்சாமி.
“டேய் பழனிச்சாமி, உனக்கு ஃபோன்.” -ஒரு விடுதி மாணவன் அடித் தொண்டையில் கத்தினான்.
ஊர்ந்து போய், ஃபோனை எடுத்தான் பழனிச்சாமி.
“பழனிச்சாமி, கிராமத்திலிருந்து உன் மாமா பேசுறேன். உன் அக்கா வேலம்மா தற்கொலை செஞ்சிட்டாடா. காரணம் நீதான். மூனு வருசப் படிப்பில் ஒரு பாடத்தில்கூட நீ பாஸ் பண்ணலேன்னு உன் காலேஜிலிருந்து கடிதம் வந்துது. அதைப் படிச்சிட்டு, 'அப்பா இல்லாத குடும்பத்தை அம்மாதான் தாங்குறா. கூலி வேலை செஞ்சி தம்பியையும் படிக்க வைக்கிறா. நான் அவளுக்கு ஏதோ கொஞ்சம் ஒத்தாசை பண்றேன். தம்பி நல்லா படிச்சி, வேலை தேடிச் சம்பாதிச்சி அம்மாவுக்கு உதவுவான்; முப்பது வயசான எனக்கும் கல்யாணம் கட்டி வைப்பான்னு காத்திருந்தேன். இப்போ, அந்த நம்பிக்கை சிதறிப் போச்சி. நான் செத்துப் போறேன்’னு எழுதி வெச்சுட்டுத் தூக்கில் தொங்கிட்டா. உடனே புறப்பட்டு வாடா” என்றார் மாமா.
ரிஸீவரும் கையுமாக, நீண்ட நேரம் நெடு மரமாய் நின்றுகொண்டிருந்தான் பழனிச்சாமி.
*************************************************************************************************
கதாசிரியர்?
வேறு யார்? இந்தக் 'கத்துக்குட்டிதான்'!
************************************************************************************************
இந்தக் கதை 'IndiBlogger' இன் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
நன்றி: 'IndiBlogger'.
கதாசிரியர்?
வேறு யார்? இந்தக் 'கத்துக்குட்டிதான்'!
************************************************************************************************
இந்தக் கதை 'IndiBlogger' இன் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
நன்றி: 'IndiBlogger'.
Your post "'காதலும் சாதலும்'... கட்டிளம் காளைகளுக்கான கதை!!" is on the IndiBlogger homepage.
|
பிற்பகல் 7:37 (1 மணிநேரத்திற்கு முன்பு)
| |||