அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 8 அக்டோபர், 2018

'சபரிமலை'...பெண்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெண்களே எதிர்ப்பது ஏன்?!

'10 - 50 வயதிலான பெண்களும் சபரிமலை சென்று ஐயப்பசாமியை வழிபடலாம்' என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஆண்கள் ஊர்வலங்கள் நடத்தியிருக்கிறார்கள் என்பது ஊடகச் செய்தி. கணிசமான அளவில் மகளிரும் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பது சுவை கூட்டும் கூடுதல் செய்தி.

பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்படுவதை இன்றளவில் மிகப் பெரும்பாலான ஆண்கள் ஆதிரிக்கிறார்கள். எனினும், குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கான சபரிமலை வழிபாட்டைப் பெரும்பாலான ஆண்கள் மட்டுமல்ல, கணிசமான அளவில் பெண்களும் ஆதரிக்கவில்லை என்பது  பெரும் புதிராக உள்ளது. அந்தப் புதிருக்கான விடை கீழே.....

ஐயப்பசாமி, சபரிமலையில் மட்டுமல்ல, வேறு பல ஊர்களிலும் குடிகொண்டிருக்கிறார்.
ஆரியங்காவில் அரசனாகவும், குளத்துப்புழையில் பாலகனாகவும், எரிமேலியில் தர்மசாஸ்தாகவும், அச்சன் கோயிலில் பூர்ணபுஷ்கலை[?] சமேதரராகவும் இருந்து அருள்பாலிக்கிறார். ஆனால், சபரிமலையில் மட்டும்  நித்திய பிரமச்சாரியாகக் காட்சியளிக்கிறார்{'இந்து தமிழ் [08.10.2018] நாளிதழில் பக்கம் 03இல், சேலம் மாநகர ப.ஜ.க. தலைவர் கோபிநாத்தும், ஐயப்ப சேவா சமாஜ தலைவர் தினேஷ்குமாரும் மற்றும் ஒருவரும் இந்து தமிழுக்கு அளித்த பேட்டியில் இடம்பெற்ற தகவல்}.

தன் பிரமச்சரியம் கலைந்துவிடுதல் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் ஐயப்பன். மடக்கிய முழங்கால்கள் இறுகக் கட்டப்பட்டுக் குந்திய நிலையில் அவர் காட்சி தரும் கோலமே அதை உறுதிப்படுத்துகிறது என்கிறார்கள் புராண இதிகாசங்களைக் கரைத்துக் குடித்தவர்கள். ஐயப்பன் கட்டை பிரமச்சாரி என்பதால்.....

குறிப்பிட்ட வயதிலான பெண்கள் அவர் முன் சென்றால் அவரின் பிரமச்சரிய விரதத்திற்குப் பங்கம் விளையும் என்பதே அவர்களுக்கான ஐயப்பன் வழிபாடு மறுக்கப்படுவதற்கான காரணம் ஆகும்.

காரணம் ஏற்கத்தக்கதே[?] என்பதால்.....

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் போராட்டங்களில் பெண்களும் பங்கு பெறுகிறார்கள் போலும்!

ஐயப்பன் ஒரு கடவுளா? கடவுள்கள் பலரா?

''ஆம்...ஆம்'' எனில், அவர்களைக் குடும்பஸ்தர்கள் என்றும் பிரமச்சாரிகள் என்று பாகுபடுத்துவது சரியா?

அதற்கும் ''ஆம்'' என்பதே பதிலாயின்.....

பருவப் பெண்கள் அவரின்[ஐயப்ப கடவுள்] பார்வையில் பட்டால் பிரமச்சரியம் பறிபோகும் என்று எண்ணுவது ஏற்புடையதா?

மோகினியாய் வடிவெடுத்த[அரக்கனை அழிக்க] விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன்[கையப்பன் என்பதே ஐயப்பன் ஆயிற்று. சிவன் மோகினியைப் புணர விரும்பிப் பின்தொடர்ந்து சென்று கையைப் பற்றியதால் மோகினியின் கையிலிருந்து பிறந்தவர் கையப்பன்] என்பது போன்ற கதைகளையும்  மேற்கண்டவை போன்ற பல தகவல்களையும் ஆன்மிகவாதிகள் பரப்புரை செய்வது நியாயமா?

மேற்கண்டவை போன்ற பல வினாக்களைத் தொடுத்து என்னிடம் அவற்றிற்கான பதில்களை எதிர்பார்க்கிறீர்களா நீங்கள்?

மன்னியுங்கள். 

பன்முகச் சிந்தனையாளரான உங்களுக்கே பதில்கள் தெரியக்கூடும். அறிவில் சிறியனும் வறியனுமான என்னை அருள்கூர்ந்து சீண்ட வேண்டாம்.

நன்றி.