செவ்வாய், 16 அக்டோபர், 2018

'அந்த' எழுத்தாளர் மீது மேலும் ஒரு '#Me Too' பெண் புகார்!!!!!

சற்று முன்னர் ஊடகங்களில்  வெளியான ஒரு செய்தி.....

#ஏற்கனவே, '#Me Too' இயக்கத்தைச் சேர்ந்த பல பெண்களின் பாலியல் தொடர்பான குற்றச் சாட்டுகளால் கதி[மதி]கலங்கி நிற்பவர் 'அந்த'ப் 'பிரபல' எழுத்தாளர். இப்போது, 10 வயதுச் சிறுமி ஒருத்தியும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்#
செய்தி வெளியிட்ட ஊடகங்களில் 'இளைய தலைமுறை'யும் ஒன்று. அந்த ஊடகத்திற்கு[தொலைக்காட்சி], பிரபலத்தின் மீது குற்றம் சுமத்திய சிறுமி அளித்த பேட்டி.....

நிருபர்: உங்க பெயர்?

சிறுமி: பைந்தமிழ்க்கொடி

நிருபர்: வயசு?

சிறுமி:  பத்து

நிருபர்: பிரபல எழுத்தாளர் உங்களை வன்புணர்வு செய்ததாகச் சொல்றீங்க. அந்தத் துயரச் சம்பவம் குறித்து விவரமாகச் சொல்ல முடியுமா?

சிறுமி: அப்போ நான் ஒரு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவி.....

நிருபர்: [அதிர்ச்சியடைந்தவராக] வயசு பத்துன்னு சொன்னீங்க. இப்போ கல்லூரி மாணவின்னு......

சிறுமி: பொறுமையாக் கேளுங்க. அப்போ நான் கல்லூரி மாணவி. அந்த எழுத்தாளருடைய கவிதைகள்னா எனக்கு உசுரு. அவரை நேரில் சந்திச்சிப் பாராட்ட ஆசைப்பட்டேன். அந்த ஆசை ஒரு கட்டத்தில் வெறியாவே மாறிடிச்சு. எங்க ஊர்ப்பக்கம் அவர் வந்தா எப்படியும் சந்திச்சிப் பேசிடறதுங்கிற முடிவோட காத்திருந்தேன்.

நிருபர்: அந்த வெறி எப்போ காதலா மாறிச்சி?

சிறுமி: [கோபத்துடன்] இந்தக் குசும்புதானே வேண்டாங்கிறது. காதலெல்லாம் இல்ல. நான் அவருடைய ரசிகையா மட்டுமே இருந்தேன்..... அது வந்து அப்புறம்.....

கொஞ்சம் இடைவெளி கொடுத்துத் தொடர்ந்தார்.....

''எங்க கல்லூரி இலக்கியப் பேரவையில் சொற்பொழிவு நிகழ்த்த வந்திருந்தார் அவர். அவர் பேசி முடிச்சதும் மத்தப் பெண்களோட நானும் ஆட்டோகிராஃப் குறிப்பேட்டை நீட்டினேன். என்னைக் கொஞ்ச நேரம் ஒரு மாதிரியா உத்துப் பார்த்துட்டுக் கையெழுத்து இட்டதோட, தான் தங்கியிருந்த விடுதியின் முகவரியையும் எழுதியிருந்தார். நான் எதிர்பார்த்திருந்த வாய்ப்புக் கிடைச்ச சந்தோசத்தோடு அவர் தங்கியிருந்த அறைக்குப் போனேன். கவிதை நடையில் பேசிப் பேசியே என்னை வசியம் பண்ணிக் கெடுத்துட்டார். அவர் இப்படிப்பட்ட ஆளுன்னு எனக்குத் தெரியாம போச்சு'' என்று சொல்லி, சிறிது நேரம் தேம்பித் தேம்பி அழுதாள் சிறுமி.

ஏற்கனவே எழுப்பிய சந்தேகத்துக்குப் பதில் கிடைக்காத நிலையில் தலையைச் சொறிந்துகொண்டிருந்த நிருபர், ''இப்போ உங்களுக்கு வயசு பத்து. கல்லூரி மாணவியா இருந்தபோது அவர் உங்களைக் கெடுத்துட்டதாச் சொல்றீங்க. கனவு ஏதும் கண்டீங்களா?'' என்றார்.

''கனவல்ல; 100% நிஜம்.''

''குழப்புறீங்களே..."

''குழப்பவெல்லாம் இல்ல. இந்தச் சோகச் சம்பவம் நடந்தது என்னுடைய போன பிறவியில். அப்போ என் வயசு பதினேழு. எழுத்தாளருக்கு முப்பது வயசு[இப்போ 64] இருக்கலாம். அவருக்குத் திருமணமும் ஆகியிருந்தது. என் கற்பை இழந்த அன்னிக்கே, அவர் மீது இருந்த மரியாதை காரணமா, 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லே'ன்னு எழுதி வெச்சிட்டுத் தற்கொலை செய்துகிட்டேன். கொஞ்ச வருசங்கள் ஆவியா அலைஞ்சேன். பத்து வருசம் முன்னாடி தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் பொண்ணாப் பிறந்தேன். நேத்திக்கு முந்தைய நாள்தான் கடந்த பிறவியில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் என் நினைவுக்கு வந்திச்சி. '#Me Too' இயக்கத்தில் சேர்ந்தேன். எழுத்தாளர் எனக்குச் செய்த துரோகத்தை அம்பலப்படுத்தினேன்'' என்றாள் சிறுமி.

சிறுமிக்கு நன்றி சொன்னதோடு, விதம் விதமான 'போஸ்'களில் அவளைப் படமும் எடுத்துக்கொண்டார் 'இளைய தலைமுறை'த் தொலைக்காட்சி நிருபர்.
=======================================================================''IndiBlogger' இன் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது இப்பதிவு.