அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 13 நவம்பர், 2018

மகா பெரியவரை மகா 'சிறியவர்' ஆக்கும் குமுதம் இதழ்!!!

தன்னைத் தரிசனம் பண்ண வந்த முன்பின் அறிமுகம் இல்லாத  ஒருவரிடம், அவர் சொல்லாமலே ''சாமியைக் கும்பிடுறதால எந்தப் பிரயோஜனமும் இல்லேன்னு தினசரி பூஜை பண்ணுறதை நிறுத்திட்டு நாத்திகனா மாறிட்டே இல்லையா?''ன்னு கேட்டு வந்தவரை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறார் மகா பெரியவா[இது வழக்கமாக அவர் நிகழ்த்தும் அதிசயமாம்].

''என் குறைகளை எந்தச் சாமியும் தீர்த்து வைக்கல. யார் யாருக்கெல்லாமோ ஓடி ஓடி உதவுற சாமிகள் எனக்கு உதவலையேங்கிற ஆத்திரத்தில் அதுகளைக் கண்டபடி திட்டிடுறேன்; பூஜை பண்ணுறதையும் நிறுத்திட்டேன்'' என்றார் பெரியவாவைத் தரிசனம் பண்ண வந்தவர்.
வதனத்தில் புன்சிரிப்பைப் படரவிட்ட நடமாடும்/நடமாடிய கடவுளான பரமாச்சாரியார், ''தலைவலி, காய்ச்சல்னு ஒரு டாக்டரைப் பார்க்கப் பல நோயாளிகள் காத்திருக்காங்க. அப்போ, பாம்பு கடிச்சிடுச்சின்னு ஒருத்தரைத் தூக்கிட்டு வர்றாங்க. அவருக்குத்தான் முதலில் சிகிச்சை பண்ணுவார் டாக்டர். அதனால, மத்தவங்களைக் கவனிக்காம விட்டுட மாட்டார். அதுமாதிரி, உன்னைவிடக் கஷ்டத்தை அனுபவிக்கிற ஒருத்தருக்கு உதவப் போயிருப்பார் பகவான். அவருடைய கடாட்சம் கொஞ்சம் தாமதமாத்தான் உனக்குக் கிடைக்கும்'' என்றாராம்

காஞ்சி மாமுனிவர் அவர்கள் இப்படிச் சொல்லிண்டிருக்கும்போதே குறைபட்டுக்கொண்டவரின் மனசிலிருந்த, சாமிகளைப் பற்றிய தப்பான அபிப்ராயமெல்லாம் கரைஞ்சி காத்தோடு கலந்திடுச்சாம். அவா கண்களிலிருந்து தாரை தாரையா கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்ததாம். உரத்த குரலில், ''ஜய ஜய சங்கர...ஹரஹர சங்கர''ன்னு அவர் கோஷம் எழுப்பினாராம்[குமுதம், 14.11.2018].

'ஒரு மருத்துவரால் ஒரு நேரத்தில் ஒரு நோயாளியை மட்டும்தான் கவனிக்க முடியும். அது போல, [அனைத்தையும் படைத்து அருள்பாலிப்பவரும், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவருமான] கடவுளால் ஒரு நேரத்தில் ஒரு பக்தனின் குறையைத்தான்  போக்க முடியும்' என்று பெரியவர் சொன்னதாகக் குறிப்பிடுகிறது குமுதம் கதை.

அதீத சக்தி வாய்ந்த கடவுளால், தான் படைத்த அத்தனை உயிர்களின் துன்பங்களையும் ஒரே நேரத்தில் போக்க முடியுமே. பட்டியலிட்டு, வரிசைப்படிதான் அருள்பாலிப்பார் என்பது பேதைமை அல்லவா?

பேரறிவுப் பெட்டகமான பெரியவா இதை உணராதவரா?

உலகம் போற்றும் 'அவதார புருஷர்' எனப்படும் அவர், தாம் நம்புகிற ஆண்டவனின் கருணைக்கு வரம்பு கட்டமாட்டார்; ஒர் அற்ப மானுடரான மருத்துவருடன் அவரை ஒப்பிடவும் மாட்டார்.

குமுதம் புத்திமான்களுக்கு இது புரியாமல் போனது ஏன்?!

இம்மாதிரிக் கதைகளை எழுதி எழுதி எழுதிப் பெரியவருக்கு இவர்கள் புகழ் சேர்க்கிறார்களா, குமுதத்தின் விற்பனையைப் பெருக்கிப் பணம் பண்ணுகிறார்களா, குலப்பெருமையைப் போற்றி வளர்க்கிறார்களா?!

எது எப்படியோ,

ஆன்மா என்று ஒன்று இருப்பது உண்மையானால்.....

'மகா பெரியவா'வின் ஆன்மா, குமுதம்காரர்களின் இந்த இழிசெயலால் மிக மிக மிக வருந்தும் என்பதில் எள்முனை அளவும் ஐயத்திற்கு இடமில்லை.
========================================================================