இக்காலத்தில் அனேகமாய் எல்லாருக்கும் எழுதவருகிறது. எழுதும் ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. பிரசுரம் பண்ண நிறையப் பத்திரிகைகளும் உள்ளன. ஓரளவு சன்மானமும் தரப்படுகிறது. போட்டிகள் நடத்திப் பரிசுகளும் தரப்பட்டு எழுத்தாளர்கள் பிரபலப்படுத்தப்படுகிறார்கள்.
ஓர் ஆய்வு வசதிக்காக, எழுத்தாளர்களை 'ஆண் எழுத்தாளர்கள் - பெண் எழுத்தாளர்கள்' என்று பிரித்துக்கொள்ளலாம். வேறு எந்த முறையில் பிரித்தாலும் அவ்வளவாய்ச் சரிப்பட்டு வராது. 'வர்க்கம்', 'முற்போக்கு-பிற்போக்கு' என்றெல்லாம் பிரித்தால் பிரச்சினைதான் வரும்.
என்னதான் சமத்துவம் அமைந்தாலும் தவிர்க்கவே முடியாதது 'ஆண்-பெண்' பேதமாகும்.
ஆண் எழுத்தாளர்கள் எல்லாம் அன்றாடங்காய்ச்சிகள். அதுவும் என்னைப்போல் முழுநேர எழுத்தாளர்களாக இருப்போர் சமூக அனாதைகள் ஆவர்.
ஆனால், நம் பெண் எழுத்தாளர்களைப் பொதுவாகப் பார்க்கும்போது, அவர்களும் அன்றாடங்காய்ச்சிகளாக இருந்தாலும் பர்த்தாவின் பணத்தில் ஊர் மணக்கப் பாயசம் காய்ச்சுபவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களின் எழுத்தில் சமையலும் ஜாதியும் மணக்கிறது. அதைவிடவும், பிரபலமாய் இருக்கிற பெண் எழுத்தாளர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பிரிவினராகவே இருப்பது தற்செயலானதுதானா என்று நான் யோசிப்பதுண்டு.
இந்தப் பெண் எழுத்தாளர்கள் தம் கதைகளில் எல்லாம் கருப்பைக்கோ இரைப்பைக்கோ தருகிற முக்கியத்துவம் வேறு எதற்கும் இருப்பதில்லை.
மணக்க மணக்கச் சமைப்பது, ருசிக்க ருசிக்கத் தின்பது, மாதவிலக்குத் துணி மாற்றுவது, மசக்கைக்குக் குறி காண்பது, கரு அழிப்பு, சோரம் போவது, குடிபோதைக்கு அடிமை ஆவது, ஆண்-பெண் புணர்வது போன்றவை பற்றித்தான் இவா ரொம்ப நன்னா எழுதுறா.
இந்த எழுத்துக்கலையில் பெண்களுக்குப் பயிற்சியும் மிகுந்த ஊக்கமும் தரப்படுகிறது. அனேகமாக, இந்தப் புதிய பெண் எழுத்தாளர்கள் அனைவரும் பத்திரிகை முதலாளிமார்களோடும் ஆசிரியர்களோடும் நேரடித் தொடர்பு கொண்டவர்களாகவும் சமுதாயத்தில் ஓர் அந்தஸ்தைத் தேடிக்கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
எனவே, பத்திரிகை உலகில் இவர்களுக்கென்று தனியிடமும் நல்ல வரவேற்பும் உள்ளது.
உண்மையில், பெண்களின் எழுத்து 'பெண்மை நலம்' பேணுவதாக இருத்தலே நல்லது. ஆனால், பெண்மை நலம் என்றால் என்னவென்று விவரிக்க வேண்டிய அவலம் இன்று நிலவுகிறது.
பெண் எழுத்தாளர்கள் நம் வாசகர்களை வெகுவாகக் குறைபட்டுக்கொள்கிறார்கள். அவர்கள், 'ஆண் எழுத்தாளர்கள் கண்ட கண்ட வார்த்தைகளைக் கையாண்டாலும் அதை விமர்சிக்காமல் படிக்கிறார்களாம். பெண் எழுத்தாளர்கள் அவ்வாறு எழுதிவிட்டாலோ ''மொலு மொலு'' என்று சண்டைக்கு வருகிறார்களாம்!
இது குறித்து, கையில் சிலம்பில்லாமல் ஒரு பிரபல எழுத்தாளர் கண்களில் கனல் பறக்க என்னிடம் முறையிட்டது ஒரு சுவையான நிகழ்வு.
------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்புடைய, ஜெயகாந்தனின் கட்டுரை சற்றே சுருக்கிப் பதிவிடப்பட்டுள்ளது[நூல்: 'யோசிக்கும் வேளையில்.....'].
Indiblogger முகப்புப் பக்கத்தில் இப்பதிவு இடம்பெற்றுள்ளது.
Indiblogger முகப்புப் பக்கத்தில் இப்பதிவு இடம்பெற்றுள்ளது.