வெள்ளி, 16 நவம்பர், 2018

சாமானியர்களுக்கான சாமானியனின் 'சாதனை'க் கதை!

குமுதம் வார இதழ்[23.09.2009] தரத்தில் 'நம்பர் 1' ஆக இருந்தபோது அதில் வெளியான என் கதை இது. இப்போதெல்லாம் நான் அதற்குக் கதை அனுப்புவதில்லை. மீண்டும் அது தன் தரத்தை உயர்த்திக்கொள்ளுமாயின் அனுப்ப எண்ணியுள்ளேன். ஹி...ஹி...ஹி!

தலைப்பு:                              சாதனை

''என்னோட பள்ளித் தோழர் ஒருத்தருக்குக் கலைமாமணி விருது கிடைச்சிருக்கு'' -நாளிதழ் வாசித்துக்கொண்டிருந்த வாசுதேவன் சொன்னார்.

''அப்படியா? உங்களோடு கல்லூரியில் படிச்ச யாரோ ஒருத்தருக்கு ஏதோவொரு நாவல் போட்டியில் முதல் பரிசு கிடைச்சிருக்கிறதா அன்னிக்கொரு நாள் சொன்னீங்களே?'' என்றார் வாசுதேவனின் மனைவி தேவி.

''அது போன மாசம்.  அதையும் பத்திரிகையில் பார்த்துத்தான் தெரிஞ்சிகிட்டேன். அது மட்டுமில்ல, என்னோடு படிச்ச ஒரு பொண்ணு இந்த ஆண்டு சதுரங்கத்தில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வாங்கியிருக்கு. என்னோட படிச்சவங்க எல்லாம் சாதனை நிகழ்த்துறது மகிழ்ச்சியாத்தான் இருக்கு. ஆனா, அவங்களோடு படிச்ச நான்தான் எதுவுமே சாதிக்கல.'' -மிகுந்த வருத்தத்துடன் சொன்னார் வாசுதேவன்.

''வணிகவரித் துறையில் அதிகாரியா இருக்கீங்க. நிறைய வாய்ப்பிருந்தும் பைசா லஞ்சம் வாங்குறதில்ல. இதுவும் சாதனைதான். பாராட்டையும் விருதையும் எதிர்பார்க்காத இந்தச் சாதனைதான் மற்றதுகளைக் காட்டிலும் ரொமப உசத்தியானது'' என்ற தேவியின் குரலில் பெருமிதம் பொங்கி வழிந்தது! 
========================================================================