திங்கள், 19 நவம்பர், 2018

'ஹாலிவுட்' உருவானது எப்படி?!

1800களின் இறுதியில், 'ஓவியத்தையோ ஃபோட்டோ படங்களையோ அசையச் செய்திட முடியுமா? அசைந்தால் எப்படியிருக்கும்?' -அறிந்துகொள்ளும் பேரார்வம் அறிவியலில் ஈடுபாடுள்ள சிலருக்கு இருந்தது.

அவர்களில் தாமஸ் ஆல்வா எடிசனும் ஒருவர்.
வட்டவடிவமான தட்டின் நடுவில் துளையிட்டு, துளையை ஓர் ஆணியில் பொருத்தி, அந்தத் தட்டில் ஓர் உருவத்தின் சலன நிலைகளைப் பல ஓவியங்களாக வரைந்து, தட்டை உருளச்செய்து பார்த்தார் எடிசன். முதலில் மெதுவாகவும், பின்னர் வேகமாகவும், தொடர்ந்து அதி வேகமாகவும் உருளச் செய்தார்.

ஓ.....! அந்த உருவம் கைகால்களை அசைத்தது; நடந்தது!

ஓவியங்களுக்குப் பதிலாக, ஃபோட்டோக்களை ஒட்டினார் எடிசன்; உருட்டினார்; ஓட்டினார்; வெகு வேகமாக ஓட்டினார். புகைப்பட மனிதன் நகர்ந்தான்; நடந்தான்...வேகத்துடன். தொடர்ந்து மிகையான வேகத்துடன்!

ஃபோட்டோ படங்களை மேலிருந்து கீழாக உருளையில் பொருத்திச் சுழலச் செய்தார் எடிசன். 'சினிட்டாஸ் கோப்' உருவானது. இது நிகழ்ந்தது 1894இல்.

எட்வர்ட் முப்ரிஜ் என்பவர் சில மாற்றங்களுடன் உருவாக்கியது 'ஜூப்ராக்சோ ஸ்கோப்'.

இங்கிலாந்தின் வில்லியம் ஃப்ரீஸ்கிரீன் செல்லுலாய்ட் ஃபிலிமைக் கண்டுபிடித்து 'சினிமாட்ட கிராஃப்'ஐ அறிமுகப்படுத்தினார்.

ஓடும் படத்தின் ஒளியைத் திரையில் பாய்ச்சி, ஒரே சமயத்தில் பலபேர் பார்த்து ரசிக்கும் அதிசயத்தை 1895இல் ஃபிரான்ஸ் நாட்டின் லூமியர் சகோதரர்கள் கண்டுபிடித்தார்கள்.

இதுதான் சினிமா.

ஆக.....

சினிமாவைக் கண்டுபிடித்த பெருமை தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மட்டுமல்ல, வேறு பலருக்கும் உண்டு.

எந்தவொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கும் நேரிடும் பழைமையாளர்களின் பயங்கர எதிர்ப்பைச் சினிமாவும் சந்தித்தது.

''பில்லி, சூனியம் போன்று கொடுமையானது இது'' என்று மதவெறியர்களும் பிற்போக்காளர்களும் சினிமாவை எதிர்த்தனர்.

சினிமாவோடு தொடர்புடையவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஊரைவிட்டே விரட்டப்பட்டனர்.

அமெரிக்காவின் சினிமாத் தொழில்நுட்ப வல்லுனர்கள் மேற்கண்ட மூடர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி காடுகளை நோக்கி ஓடினார்கள். இவ்வகையில், ஊரைவிட்டு ஓடி ஓடி ஓடிப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒரு வனாந்தரத்தின் குறிப்பிட்ட ஓரிடத்தில் தங்கி வாழத்தொடங்கினார்கள். அந்த இடம்தான்.....

பின்னர் உலகப் புகழ் பெற்ற 'ஹாலிவுட்' ஆக உருவானதாம்!
========================================================================
'சிறுகதை'[16-31 அக்டோபர், 1993] என்னும் இதழில் அறந்தை நாராயணன் அவர்கள் எழுதிய தொடரிலிருந்து எடுத்தாண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக