அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 21 நவம்பர், 2018

''கடவுள் இல்லை'' என்று மதவாதிகளும் விஞ்ஞானிகளும் அறிவித்தால்...?!

''தர்ம சிந்தனை புதை குழிக்குப் போக, அதர்மம் தலைவிரித்தாடும்.

திருட்டு, கொள்ளை, கொலைச் சம்பவங்கள் பெருகும்.

இளம் பெண்களைக் கடத்துவதும் கற்பழிப்பதும் அதிகரிக்கும்.
நல்லவர்களும் கெட்டவர்களாக மாற, சுய நலம் மேலோங்க, இந்த உலகமே கலவர பூமியாக மாறி, மனித இனம் போரிட்டு அழிந்து போகும்.

ஆகவே, இந்த அறிவிப்பு ஏற்கத்தக்கதல்ல; நம்பத்தக்கதும் அல்ல'' என்பார்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்.




''கடவுளுக்குப் பயந்துகொண்டு மனிதன் குற்றம் புரியாமல் இருந்ததில்லை.

ஒருவனுக்கு உரியதைப் பறிக்க, அல்லது திருட இன்னொருவன் அஞ்சுவதற்குக் காரணம், கடவுள் பயமல்ல; பொருளுக்கு உரியவனால் அல்லது அவனைச் சார்ந்தவர்களால் தாக்கப்படுவோம் என்ற முன்னெச்சரிக்கையே காரணம்.

காவலரிடம் பிடிபடுவோம்; நீதிமன்றம் தண்டிக்கும் என்று நம்புவதும் தலையாய காரணம் ஆகும்.

அகப்பட்டுக் கொள்வதற்கான சூழ்நிலை இல்லாதிருந்தும், ஒருவன் குற்றம் புரியாமல் இருப்பானாயின், அதற்கு, ‘பட்டினி கிடந்து மாய்ந்தாலும் இன்னொருவன் உழைப்பில் வந்தது நமக்கு வேண்டாம்’ என்று நினைக்கும் அவனின் மனப்பக்குவமே காரணம்.

இத்தகைய மன உறுதி ஒருவனுக்கு வாய்ப்பது, அவனுடைய சுய சிந்தனையால்; அவனைச் சார்ந்தவர்கள், சான்றோர்கள், அறிஞர்கள் ஆகியோரின் வழிப்படுத்தலால்தான்.

எல்லாம் கடவுளால் என்று சொல்வதும் வலியுறுத்துவதும் மனித இனத்துக்குச் செய்யும் துரோகம் ஆகும்; மனிதனின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் முயற்சி ஆகும்.

சிந்திப்பதும் செயல்படுவதும் மனித முயற்சியாலேயே சாத்தியப்படும் போது, கடவுளைத் துணைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை; இல்லவே இல்லை.

எனவே, 'கடவுள் இல்லை' என்னும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது'' என்பார்கள் கடவுள் மறுப்பாளர்கள்.



''இவர்களில் எவர் சொல்வது சரி'' என்று யோசித்துச் சிரமப்பட வேண்டாம். காரணம்.....

இத்தகு அறிவிப்பை, என்றேனும் ஒரு நாள் அறிவியல் அறிஞர்கள் செய்யக்கூடும்; மதவாதிகள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள், அவர்கள் பிழைப்பு நடத்துவதே கடவுளை வைத்துத்தான் என்பதால்!!!

எனவே, இருதரப்பாரும் இணைந்து இப்படியொரு அறிவிப்பைச் செய்வது சாத்தியமே இல்லை!
========================================================================

Indiblogger முகப்புப் பக்கத்தில் இப்பதிவு இடம்பெற்றுள்ளது.