அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 23 நவம்பர், 2018

மகான்களும் மகன்களும் தூதுவர்களும் மறக்கப்படும் நாள்?!

நீளம், அகலம், சுற்றளவு, பரப்பளவு என்று எந்தவொரு அளவுகோலாலும் அளந்தறிய இயலாத அண்டவெளியிலுள்ள அணுக்கள், பொருள்கள், உயிர்கள் போன்றவற்றின் தோற்றத்திற்கான காரணம், தோன்றிய காலம், தோன்றிய முறை ஆகியவை[எதற்கு? எப்போது? எப்படி?] குறித்த 'உண்மை'யை முழுமையாக ஆராய்ந்து அறிவது என்பது எப்போதும் சாத்தியப்படாத ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம்[பயன் கிடைக்கிறதோ இல்லையோ, ஆராய்ந்து அறியும் முயற்சியில் மனிதகுலம் தொடர்ந்து ஈடுபடும் என்பதில் சந்தேகமில்லை].
இவ்வுண்மை அறியப்படாத நிலையில், நம் முன்னோர்கள்.....

நமக்குச் சிந்திக்கும் அறிவு வாய்த்திருப்பதால், இதற்கும் மேலான பேரறிவு வாய்க்கப்பெற்ற கடவுள் என்றொருவர் இருப்பதாக நம்பினார்கள். அவருக்கு  மட்டும் அந்தப் பேரறிவு வாய்த்தது எப்படி என்று சிந்திக்கத் தவறியதன் விளைவாக, அனைத்திற்கும் மூலகாரணமானவர் அவரே என்றும் நம்பினார்கள். அந்த நம்பிக்கை ஆழ்ந்த சிந்தனையின் விளைவாக உருவானதல்ல. காரணம்.....

ஐம்புலன்கள் மூலம், அதாவது, கண்டோ கேட்டோ சுவைத்தோ சுவாசித்தோ தொட்டோ கடவுளை அறிந்தவர் எவருமிலர்[அவர் கண்டார், இவர் கண்டார் என்பனவெல்லாம் கலப்படமில்லாத பொய்கள்].

ஐம்புலன்களால் அறிந்தவற்றை மட்டுமே ஆறாவது அறிவால் உணர்வதும் சாத்தியப்படும். எனவே, ஐம்புலன்களின் மூலம் கடவுளை அறிந்தவர் எவருமில்லை என்பதால், ஆறாம் அறிவால் அவரை உணர்ந்தவர் உளர் எனும் கூற்று ஏற்கத்தக்கதல்ல. 

கடவுளை உணர்ந்து அறிந்தவர்கள் இருந்தார்கள்...இருக்கிறார்கள். அவர்களே அவதாரங்கள்; புதல்வர்கள்; தூதுவர்கள் என்றெல்லாம் பரப்புரை செய்து, மக்களை நம்பச் செய்தவர்கள் மதவாதிகளும் ஆன்மிகவாதிகளும் ஆவர்.

பதிவின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டது போல, விடுவிக்கவே இயலாத புதிர்களை உள்ளடக்கியது இந்தப் பிரபஞ்சம் என்பதை மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் காலம் வரும்போது.....

மகான்கள், மகன்கள், தூதுவர்கள், அவதாரங்கள், நடமாடும் கடவுள்கள் எனப்படும் அனைவரும் அவர்களால் மறக்கப்படுவார்கள் என்பது உறுதி.
------------------------------------------------------------------------------------------------------------------