ஞாயிறு, 25 நவம்பர், 2018

ஐயப்பா, இந்த அம்மா சொல்றது பொய்யாப்பா?!

#....ஒரு பயிலரங்கில், ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவி கேட்டாள்: ''மாதவிலக்கு வருவதற்கு ஹார்மோன் சுரப்பு காரணம் என்றால், இந்த ஹார்மோன் சுரப்பதைத் தடுக்க வழி இல்லையா?''

மாதாந்திர உதிரப்போக்கை எதிர்கொள்ளும் எந்தப் பெண்ணும் அதை மகிழ்ச்சியாக வரவேற்பதில்லை. பெரும்பாலான பெண்கள் அதை ஒரு வலியாகவும் வேதனைக்குரிய ஒன்றாகவும்தான் பார்க்கிறார்கள். அதற்கு, அந்த நேரத்தில் ஏற்படும் உபாதைகள் மட்டுமே காரணம் அல்ல; சமூக ரீதியாக அவர்கள் எதிர்கொள்கிற 'தீண்டாமை'யும் முக்கிய காரணம்.

தனியாக உட்கார வேண்டும். தினமும் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். தலை காயாமல் நாள் முழுதும் தலை வலியுடன் அல்லல் படவேண்டும். வீட்டில் யாராவது ஆண்கள் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தால் அவர்களின் கண்ணில் படக்கூடாது.

இப்படிப்பட்ட சட்டதிட்டங்கள் ஆண்கள் மேல் விதிக்கப்பட்டிருந்தால், பெரும் புரட்சி நடத்தி அதை நீக்கியிருப்பார்கள்.

மாதாந்திர உதிரப்போக்கு, கர்ப்பம், குழந்தைப்பேறு போன்ற எந்தப் பிரத்தியேகத் தன்மையும் இல்லாத ஆணுக்குக் கிடைக்கும் மரியாதையும் அந்தஸ்தும் பெண்ணுக்குக் கிடைப்பதில்லையே, ஏன்?

ஆணும் பெண்ணும் இணைவதால் குழந்தை உருவாகிறது. எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் அமைந்த உடற்கூறுகள் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. இதில், ஒரு பாலினம் உயர்ந்தது, மற்றது தாழ்ந்தது என்று சொல்வது என்ன நியாயம்?

'தீட்டு' என்பது மனதில்தான் இருக்கிறது. ஒரு பெண் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்பதன் வெளிப்பாடுதான் மாதாந்திர உதிரப்போக்கு. ஆணுக்கு விந்தணு உற்பத்தியும் பெண்ணுக்கு மாதாந்திரச் சுழற்சியும் இல்லாவிட்டால் என்ன ஆகும்? குழந்தை பிறக்காது. இருவர் இணைப்பில் உருவாவதுதான் குழந்தைப்பேறு. இதில் ஓரினத்தை மட்டும் ஏன் குட்ட வேண்டும்?

எல்லாம் நம் பண்பாடு என்பது வெறும் பம்மாத்து. மாதவிடாய் நாட்களில் பெண்கள் காய்ச்சும் பால் திரிந்ததை யாராவது பார்த்திருக்கிறீர்களா? செடி வாடுவதைக் கண்டிருக்கிறீர்களா?

நாற்பது வருடங்களுக்கு முன்பு, எங்கள் வீட்டில் மாதாந்திர உதிரப்போக்கு நாட்களில் தனியாக உட்காரச் சொல்வார்கள். ஆனால், பால் வாங்கிவர அனுப்புவார்கள். கேட்டால், பாலுக்குத் தோசம் இல்லை என்பார்கள். இவை எல்லாமே நாமாக உருவாக்கிக்கொண்ட சட்டங்கள்தானே?

அடிநாதமாக இருப்பது ஒன்றுதான். பெண்ணை எங்கெல்லாம் ஒடுக்க முடியுமோ அங்கெல்லாம் ஒடுக்குவது; திட்டுவது. பெண் தன்னிச்சையாகச் சிந்திக்கக் கூடாது; இயங்கக் கூடாது என்பதுதான் இவர்களின் நோக்கம்.

இந்தக் கலாச்சாரம்தான் 12 வயதுச் சிறுமியைத் தனிமைப்படுத்திப் புயலில் சிக்கிச் சாகடிக்கிறது; சபரிமலைக்குப் பெண்கள் சென்றால் அடித்துத் துரத்துகிறது.

எவ்வளவு காலம்தான் பெண்கள் பொறுத்துப்போவார்கள்?

மாதவிலக்கும் வேண்டாம், கர்ப்பமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம் என்று ஒரு புரட்சி முழக்கத்தைப் பெண்கள் எழுப்ப ஆரம்பித்தால் என்ன ஆகும்?

உதிரப்போக்கு என்பது சிறுநீர், மலம், விந்து போன்றவற்றைப் போல் உடலிலிருந்து வெளிப்படும் திரவம். இப்படி அணுகப் பழகுங்கள். சிந்தனையிலும் செயலிலும் பார்வை மாறினால் எல்லாம் சரியாகும்.#
=====================================================================
நன்றி: 'தமிழ் இந்து'[25.11.2018]வுக்கும், இக்கட்டுரையின் ஆசிரியர் 'மா' அவர்களுக்கும் நன்றி.