செவ்வாய், 27 நவம்பர், 2018

காளிதாசனா, காமதாசனா?!

அதோ...வசந்தன் வருகிறான். வற்றாத இளமையின் புகலிடம் அவன். மலர் அம்புகளுடன் கரும்பு வில்லேந்தி அவன் வந்துகொண்டிருக்கிறான். அவனின் வருகை கண்டு.....

மரம், செடி, கொடிகளில் பூக்கள் மலர்ந்தன. ஓடைகளில் தாமரை மலர்கள் குலுங்கின. காற்றில் மனம் கவரும் மணம் கமகமத்தது. பகற்பொழுதுப் பெண்ணை இளவேனில் காதலன் புணர்ந்து இன்புற்றான். மனிதகுலப் பருவக் குமரிகளின் மனங்களில் காமம் முகிழ்த்தது. 
வாவி குடைந்து குதூகலிக்கும் மென்கோங்கக் கொங்கைப் பெண்களின் கூந்தலுக்கு நெய்தல் பூக்கள் கிரீடம் சூட்டி மகிழ்ந்தன. குளித்து முடித்து வெளியேறிய அவர்களின் கன்னங்கரிய கூந்தலுக்கு அசோக மலரும் மல்லிகைப் பூவும் அழகு கூட்டின. நெகிழ்ந்த ஆடைகள் அவர்களின் பூரித்த தனங்களை மறைக்கத் தவறின. 

கன்னியரின் உடம்பெங்கும் காமம் பரவியதால் வெப்பம் கூடியது. அதைத் தணிக்க, அவர்கள் தங்களின் மேலாடைகளை அகற்றிவிட்டு மேனியெங்கும் குளிர்ந்த சந்தனத்தை அப்பினார்கள். அவர்கள் அணிந்திருந்த முத்து மாலைகள் சந்தனக் குழம்புடன் ஒட்டிக்கொண்டு திரண்ட கொங்கைகளை இறுகக் கவ்வின. இடையை வருத்திக்கொண்டிருந்த ஒட்டியாணங்கள் தமக்குரிய வண்ணத்தை இழந்தன.

ஆடை உடுத்த அணங்குகள், தாமாக விரும்பி அவிழ்த்தாலொழியப் பிறரால் அவிழ்க்க முடியாத மார்புக் கச்சுகளின் முடிச்சுகள் நெகிழ்ந்து அவிழ்ந்து நழுவ, அவர்கள் வெளிப்படுத்திய பெருமூச்சால்  முந்தானைகள் இடம்பெயர்ந்து தென்றலுடன் கைகோர்த்து நர்த்தனமாடின.

குமரிகளின் ஒவ்வோர் உறுப்பையும் வசந்தன் தன்  இதழ்களால் வருடி அவர்களை விரகதாபத்துக்கு உள்ளாக்கினான். ஆற்றாமையுடன், கம்மிய குரலில் துயரம் தோய்ந்த சொற்களை உதிர்த்தார்கள் அந்த வாலைக்குமரிகள்.

மெல்லிடை சோர்ந்ததால் கனமான ஆடைகளைக் களைந்து மிக மெல்லிய ஆடைகளை உடுத்தார்கள்.

மாவின் இளம் தளிரைத் தின்று மதம் ஏறிய ஆண் குயில்கள், கட்டுக்கடங்காத காம இச்சையுடன் பெண் குயில்களை முத்தமிட்டுப் புணர்ந்தன. இக்காட்சி, தலைவனைப் பிரிந்திருந்த மலர் நிகர் கோதையரைத் தீராத துயரத்தில் ஆழ்த்தியது..........
========================================================================

மேற்கண்டது, இளவேனில் பருவத்தின்[வசந்தம்] வருகை குறித்த வடமொழிக் கவிஞன் காளிதாசனின் வருணனை ஆகும். 'இது வசந்தம்' என்னும் தலைப்பில், 'கலா மோகினி'[கலைஞன் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: 2003] என்னும் பழைய இதழ்த் தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுத்த வரிகளை இணைத்துத் தொகுக்கப்பட்டது. மொழிநடையும் சற்றே மாற்றி அமைக்கப்பட்டது.