பக்கங்கள்

திங்கள், 22 ஜூலை, 2019

அத்தி வரதரும் பக்தர்களின் மரணங்களும்!!

காஞ்சிபுரம் பெருமாள் கோயில் குளத்து நீரில் 14 ஆண்டுகள் உறைந்து கிடந்த[இதற்கென்று சுவரசியமான கதையுண்டு. ஊடகங்கள் விரிவாகப் பதிவு செய்து தம் விற்பனையைப் பெருக்கிக்கொண்டுள்ளன] அத்தி வரதப்பர் மேலே கொண்டுவரப்பட்டு, பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாடை கட்டி, தங்க வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு[!!!] பக்தகோடிகளின் தரிசனத்துக்குக் காட்சிப்பொருளாக்கப்பட்டார்.

அத்தி வரதரைத் தரிசித்தால் செத்தபிறகு சொர்க்கம் சேரலாம்; மறுபிறப்பைத் தவிர்க்கலாம் என்று ஊடகங்கள் செய்த பரப்புரையை நம்பித் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரதரைத் தரிசிக்கத் திரண்டார்கள். முட்டி மோதிக்கொண்டதில் இன்றளவும் 07 பேர் வரதராசரைத் தரிசிக்காமலே சொர்க்கம் சேர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில்.....

ஆன்மிகவாதிகளும் பக்தி நெறி வளர்க்கும் ஊடகவாதிகளும். ‘போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை’ என்று தமிழக அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

இது முறையல்ல. உண்மையில் இந்தக் குற்றத்தைச் சுமக்க வேண்டியவர்கள், கீழ்க்காணும் வகையிலான கதைகளைக் கற்பித்துப் பரப்புரைகளின் மூலம் மக்களின் மனங்களில் அவற்றை ஆழமாகப் பதிப்பித்தவர்களே.

#ஆதியில் ஸ்ருஷ்டியை மேற்கொண்ட பிரம்ம தேவன் தனது காரியங்கள் செவ்வனே நடைபெற ஒரு யாகம் மேற்கொண்டார். யாகத்திற்குச் சரஸ்வதி தேவியை அழைக்காததால், துணைவி இல்லாமல் யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதால் காயத்திரி, சாவித்திரியை வைத்து யாகத்தை முடிக்க எண்ணினார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மர் தேவர் மீது கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மனின் யாகத்தை அழிக்க வேகவதி ஆறாக உருமாறி யாகத்தை நோக்கி வந்தாள்[இன்னும் எவ்வளவு காலத்துக்கு இம்மாதிரிக் கதைகளைக் கட்டிக்காத்துப் பிழைப்பு நடத்தப்போகிறார்கள்!?]. 

பிரம்ம தேவனின் யாகத்தைக் காப்பாற்றும் பொருட்டு பெருமாள், சயனம் கொண்டு நதியைத் தடுத்தார்.

யாகத்தைக் காப்பாற்றிய திருமாளிடம் தேவர்கள் உள்ளிட்டோர் வரங்கள் கேட்டனர். அவர்கள் கேட்ட வரங்களை எல்லாம் வாரி வழங்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு வரதர் என்று பெயர் வந்தது. 

மீண்டும் ஒரு யாகத்தை நடத்திய பிரம்ம தேவர், அத்திமரத்தால் ஆன வரத ராஜப் பெருமாளை முன்னிருத்தி யாகத்தை நடத்தினார். 


அப்போது யாகத்தின் நெருப்பு பெருமாள் சிலையைப் பாதித்தது[பாதிக்கப்படுவாரா பெருமாள் என்னும் கடவுள்?!]. இதனால் செய்வதறியாமல் தவித்த பிரம்ம தேவன் பெருமாளை வேண்டினார். 

பெருமாளின் யோசனையின் படி, தன்னைக் குளிர்விக்கக் கோயிலின் சரஸ் குளத்திற்கு நடுவில் உள்ள மண்டபத்தின் அடியில் சயனத்தில் வைக்க கூறினார். 

பிரம்மனுக்குப் பெருமாள் இட்ட கட்டளையின் படி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்து நீரை வெளியே இறைத்துவிட்டுப் பெருமாளை வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன#[நன்றி: tamil.samayam.com]
40 ஆண்டுகள் குளத்துக்குள் கிடத்தி வைக்காமல், ஆண்டு முழுதும் பக்தர்களின் தரிசனத்துக்காகக் கோயிலில் வைத்திருந்தால் உயிரிழத்தல் போன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்திரா.
================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக