’மனோசக்தியின் அற்புத ஆற்றல்’[ராஜி புத்தக நிலையம், நாகப்பட்டினம்; முதல் பதிப்பு: 2015] என்னும் நூலை இன்று வாசிக்க நேர்ந்தது.
மூளை நம்மை இயக்குகிறது என்பது அறிவியலாளர் ஆராய்ந்து கண்டறிந்த உண்மை. ஆன்மா, உயிர், மனம் போன்ற ஏதோ ஒன்று உடம்புக்குள் ஊடுருவியிருந்து நம்மை இயக்குகிறது என்பது இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை.
மேற்கண்ட நூலில், மனதின் ‘இருப்பு’ உண்மையானது என்றும், மனோசக்தியைப் பயன்படுத்தி நம் முன்னோர்கள்[ரிஷிகள், முனிவர்கள்] உட்கார்ந்த நிலையில் உயர உயரப் பறத்தல், மண்ணுக்குள் புதைத்தால் பல நாட்கள் கழித்து உயிருடன் மீண்டு எழுதல், உணவின்றி உணர்ச்சியின்றிப் பல நாட்கள் வாழ்ந்து காட்டுதல் போன்ற சித்து வேலைகளைச் செய்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் நூலின் ஆசிரியர் பி.சி.கணேசன்.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வையும் பதிவு செய்திருக்கிறார்.
#மேற்குறிப்பிடப்பட்டவை போன்ற அற்புதங்களை நிகழ்த்துகிற மகான்கள் இன்றும் இருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து அயல்நாடு சென்ற நம் சாது ஒருவர் அங்குள்ள மருத்துவ நிபுணர்களிடம் ஒரு சவால் விட்டார்.
சில நிமிடங்கள் இதயத் துடிப்பை என்னால் நிறுத்திக்காட்ட முடியும் என்றார் இவர். உங்கள் உயிர் போய்விடும் என்று எச்சரித்தார்கள் மருத்துவ நிபுணர்கள். அதை மறுத்த இவர் தன் இதயத் துடிப்பை நிறுத்தினார். இவர் உடம்பில் பொருத்தப்பட்ட கருவியும் அதை உறுதிப்படுத்தியது. சில நிமிடங்கள் கழித்து[எத்தனை நிமிடங்கள் என்று குறிப்பிடவில்லை], சாது தன் இதயத்தை மீண்டும் இயக்கிக் காட்டினார்#
இந்த நிகழ்வுக்கான ஆதாரம் ஏதும் இந்நூலில் இணைக்கப்படவில்லை என்பது அறியத்தக்கது. அத்துடன், இம்மாதிரியான சாதனையால் விளையும் நன்மை என்ன என்பது குறித்தான குறிப்பும் இடம்பெற்றிலது.
இம்மாதிரியான பொய்களைப் புனைந்து பொய்யான இனப்பெருமை பேசும் வழக்கம் நம்மவருக்குப் பழகிப்போன ஒன்று.
ஐம்புலன்களின் இயக்கத்தை முற்றிலுமாய்க் கட்டுப்படுத்தினால் மனதை வசப்படுத்தலாம். மனம் நம் வசப்பட்டால் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் என்கிறார் நூலாசிரியர். முன்னோர்கள் சாதித்தார்கள் என்கிறாரே தவிர, சாதித்தவர் யாரெல்லாம் என்பதற்கான பட்டியலோ, சாதனைகள் யாவை என்பன குறித்த குறிப்புகளோ தரப்பட்டவில்லை.
ஐம்புலன்களையும் முற்றிலுமாய்க் கட்டுப்படுத்துவது சாத்தியமே இல்லை. தேவையும் இல்லை. புலன்களை நன்னெறியில் செலுத்தப் பயில்வதே மகிழ்வான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதே நாம் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
இயல்பான/எதார்த்தமான வாழ்வியல் நெறிகள் குறித்து ஆராயாமல், புகழ் பெறும் ஆசையில் நடைமுறை சாத்தியமற்ற கற்பனை நிகழ்வுகளைப் புனைந்து அவற்றை மக்களிடையே பரப்புரை செய்வது மனிதகுலத்துக்குப் பெரும் தீங்கு பயக்கும் செயலாகும்.
=================================================================================
=================================================================================
தன்னைக் கொண்டு ஆசிரமம் அமைக்கக் கடவுள் உத்தரவிட்டதாகக் கூறி, சித்து வேலைகள் செய்து குவைத் வாழ் தமிழரிடம் ரூ.4.66 கோடி மோசடி செய்த போலிச் சாமியாரைச் சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவுப் போலீசார் கைது செய்துள்ளனர்[பழைய செய்தி] -நக்கீரன் இதழ்.
=================================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக