பக்கங்கள்

செவ்வாய், 30 ஜூலை, 2019

எழுத்தாளர் ராஜேஷ்குமார் மன்னிப்பாராக!!!

வணக்கம் ராஜேஷ்குமார்!

தமிழில் ஆயிரக்கணக்கில் மர்மக் கதைகள் படைத்து உலகளவில் சாதனை நிகழ்த்தியவர் என்ற வகையில் தங்களைப் பெரிதும் மதிப்பவன் நான். தங்களின் கதைகளில் கணிசமானவற்றை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். மர்மக் கதைகளாயினும் அவற்றின் முடிவு[கள்] ஏதேனும் ஒரு வகையில் வாசகன் மனதில் நல்ல சிந்தனைகளை விதைப்பனவாய் அமைந்திருப்பதை மனதளவில் பாராட்டியுமிருக்கிறேன்.

ராணி வார இதழில், தொடர்ந்து வெளிவரும், வாசகர்களின் கேள்விகளுக்கான தங்களின் பதில்களை இடைவிடாமல் வாசிக்கும் வழக்கமுடையவன் நான்.

இந்த வார ராணி[28.07.2019]யில் இடம்பெற்றுள்ள தங்களின் பதில்களில் கீழ்க்காணும் ஒன்று என் மனதை உறுத்துவதாக அமைந்துள்ளது. 

கடவுள் சிலையைக் ‘கல்’ என்று தயங்காமல் சொல்பவர்களில் நானும் ஒருவன். ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் ரூபாய் நோட்டை வெறும் காகிதம் என்று நான் சொல்வதில்லை. காரணம்.....

‘ரூபாய் நோட்டு’ எனப்படும் இந்தக் காகிதம் சமுதாயத்தில் பெரிதும் மதிக்கப்படுகிற ஒன்று. இதைப் பகிர்வதன் மூலம், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலைமதிப்பிற்கேற்ப எந்தவொரு பொருளையும் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும்; விரும்பிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள இயலும். இவ்வகையில், இன்னும் பல பயன்களை இந்தக் காகிதத்தின் மூலம் நம்மால் பெற்றிட இயலும். எனவே, இதனை வெறும் காகிதம் என்று அலட்சியப்படுத்தாமல் ‘ரூபாய் நோட்டு’ என்று போற்றுகிறோம்.

நீங்கள் இந்தக் காகிதத்தையும் கடவுள் சிலையையும் ஒப்பிட்டிருக்கிறீர்கள். இந்த ஒப்பீட்டின் மூலம், ரூபாய் நோட்டை வெறும் காகிதம் என்று சொல்ல மறுப்பவர்கள் கடவுள் சிலைகளைக் கடவுளாக ஏற்காமல் ‘கல்’ என்று சொல்வது ஏன் என்று கேள்வி எழுப்பி, அவ்வாறு சொல்வது முட்டாள்தனம் என்கிறீர்கள்.

கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்திருந்தால் இவ்வாறான ஓர் ஒப்பீட்டை முன்வைத்திருக்க மாட்டீர்கள்.

ரூபாய் நோட்டு என்னும் காகிதத்தைப் பகிர்வதன் மூலம் நாம் விரும்பியதைப் பெற்றிட இயலுகிறது. அது போல.....

கல்லால் ஆன ஒரு சிலையைப்[என்னைப் பொருத்தவரை அது 100% ஒரு கல்தான்] பகிர்வதன் மூலம் நாம் விரும்புவதை பெற்றிட இயலாது என்பதைத் தாங்கள் சிந்தித்து உணர்ந்திருந்தால் மேற்கண்ட பதிலைத் தந்திருக்க மாட்டீர்கள் என்பது என் கருத்து.

இக்கருத்துரையைத் தங்களால் மறுக்க இயலுமா ராஜேஷ்குமார்?!
--------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக