பக்கங்கள்

புதன், 25 செப்டம்பர், 2019

'பர்ர்ர்’...‘வைக்கம் முகம்மது பஷீர்’இன் அசத்தல் சிறுகதை!

அவள் என் கனவு தேவதை.

கற்பனையில் அவளுக்கொரு சிம்மாசனம் தயார் செய்து, அதில் அவளைக் குடியமர்த்தித் தினசரி ஆராதனை செய்துகொண்டிருந்தேன்.

அவளுடனான முதல் சந்திப்பின்போது.....

வெண்ணிற ஆடை உடுத்த தேவலோகக் கன்னிகையாக ஒரு பன்னீர்ச் செண்பகச் செடியின் அருகில் அவள் நின்றிருந்தாள். அதிக நீளமில்லாத தலைமுடியை விரித்துப் போட்டிருந்தாள். அழகு முகம். உருண்டு திரண்ட மார்பகங்கள். தேர்ந்தவொரு சிற்பி செதுக்கியது போன்ற உடல் வாகு.

அவளுக்குப் பத்தொன்பது அல்லது இருபது வயதிருக்கலாம்.

ஒரு பெரிய பன்னீர்ச் செண்பகப் பூவைப் பறித்தெடுத்து அதன் அழகை ரசித்த பின்னர் என்னிடம் தந்தாள். 

நான் என்னையே மறந்தேன். அவளின் ஸ்பரிசம் பட்ட பூ என் கையில். அதன் வாசம் என் நெஞ்சசில் பரவிப் பின்னர் பிரபஞ்ச வெளியெங்கும் ஊடுருவிக் கமகமத்தது.

நாட்கள் நகர்ந்தன.

அவள் குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்கும் நெருக்கம் ஏற்பட்ட நிலையில் அவளுடன் அடிக்கடி என்னால் உரையாட முடிந்தது. என் விருப்பப்படி அவளின் அழகை ரசிக்க முடிந்தது.

அந்தத் தேவலோக மங்கைக்கு அகன்ற பெரிய கண்கள். அவ்வப்போது அவளின் மேலுதட்டில் துளிர்க்கும் வேர்வைத் துணுக்குகள் என்னை உன்மத்தம் கொள்ளச் செய்யும். அவளை என்னுடையவள் ஆக்கிக்கொள்ளும் ஆசையை வளர்த்துக்கொண்டேன்.

அந்தை ஆசை நிராசை ஆகவிருப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் என்னை அலட்சியப்படுத்தியதிலிருந்து புரிந்துகொண்டேன்.

இருப்பினும் அவள் மீதான என் மயக்கம் தெளியவே இல்லை. அவளை வெறுத்தொதுக்குவதற்கான வழிவகைகளைத் தேடலானேன்.

அந்த நாளும் வந்தது.

ஒரு வெப்பம் மிகுந்த காலை நேரம்.

அவளுக்கு எதிராக ஒரு நாற்காலியில் நான் அமர்ந்திருந்தேன். 

அவள் தன் தலைமுடியை அவிழ்த்துப் போட்டிருந்தாள். அது அவளின் திணவெடுத்த ஒரு மார்பகத்தை மட்டும் கொஞ்சம் மறைத்திருந்தது. மேசை மீது முழங்கையை ஊன்றி, உள்ளங்கையில் மோவாயைத் தாங்கி ஒய்யாரமாக அமர்ந்த கோலத்தில் கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பவள் போல் அவள் காட்சியளித்தாள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.

‘பர்ர்ர்...ர்ர்ர்...ர்ர்ர்’ 

புத்தம்புதுத் துணியைக் கிழித்தால் உருவாவது போன்றதொரு ஓசை அது.

ஆமாம், ‘பர்ர்ர்...ர்ர்ர்...ர்ர்ர்’ என்னும் ஓசை. கூடவே ஒருவித நாற்றம்.

தேவலோகக் கன்னியின் குண்டியின் கீழிலிருந்து வெளிப்பட்ட ஓசைதான் அது! நாற்றம் பரவியது அங்கிருந்துதான்!! 

“சே...” என்று முகம் சுழித்த நான், மூக்கைப் பொத்தியடி எழுந்தேன்; சிரித்தேன்; வாய்விட்டுச் சிரித்தேன்.

என் முன்னாள் கனவு தேவதை காற்றுப்போன பலூன் போல முகம் சுருங்கி வெளிறிய முகத்துடன் காட்சி தந்தாள்.

அதன் பிறகு எந்தவொரு முயற்சியும் இல்லாமலே அவளை நான் மறக்க ஆரம்பித்தேன்.
========================================================================


‘உலகப் புகழ் பெற்ற மூக்கு’ என்னும் [மறைந்த]வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின் சிறுகதைத் தொகுப்பில்[காலச்சுவடு பதிப்பகம்] இடம்பெற்றது ‘பர்ர்ர்...’ சிறுகதை. பல பக்கங்கள் கொண்ட கதையின் மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்தச் சின்னஞ்சிறு கதை.

‘காலச்சுவடு’ பதிப்பகத்தார்க்கு நம் நன்றி.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக