அமேசான் குப்பைகள்
அமேசான் ஒரு போட்டி – பென் டு பப்ளிஷ்- நடத்துகிறது. அச்செய்தியை என் இணையதளத்தில் பிரசுரித்து அதை ‘ஊக்குவிக்க’ வேண்டும் என்று ஒர் இளம் எழுத்தாளர் எழுதியிருந்தார். நான் அவருக்கு எழுதிய பதில் இது.
இந்த அமேசான் போட்டிகளை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளக்கூடாது என நினைக்கிறேன். அதை அவர்கள் நடத்துவதும் சிலர் வாசிப்பதும் பிரச்சினை இல்லை.ஆனால் இலக்கியச்சூழலில் அதை முன்வைப்பதும் கொண்டாடுவதும் பிழை. இலக்கியத்திற்கும் அழிவு கொண்டுவரும்
ஏனென்றால் அவர்கள் மிக மிக அற்பமான, நாலாந்தர எழுத்தையே தெரிவுசெய்து பரிசளிக்கவும் பாராட்டவும் செய்கிறார்கள். பொதுவாக அதற்குரிய நடுவர்களையே தெரிவுசெய்கிறார்கள். ஏனென்றால் அதுவே விற்கும் என நினைக்கிறார்கள். அது உண்மையும்கூட. நாலாந்தரம் என்றால் இன்றைய முகநூல் வாசகர்களுக்கான எழுத்து. குமுதம் வகை எழுத்தைவிடவும் பலபடிகள் கீழே இருப்பது. வாசிப்பை ஒரு கீழ்த்தரக்கேளிக்கை, பூசலிடுதல் என்று மட்டுமே நினைப்பவர்களுக்குரியது.
அது விற்பதில்கூட பிரச்சினை இல்லை, எதையாவது நம் மக்கள் படித்தால் சரி. ஆனால் அந்தப்பரிசுத்தொகை பெரிது என்பதனால் நாம் அவ்வெழுத்தை, அவ்விருதைக் கொண்டாடுவோம் என்றால், அதை எழுதுபவரை எழுத்தாளர் என அடையாளம் காண்போம் அதுவே உகந்தஎழுத்து என ஏற்பதுபோல் ஆகிவிடும். அந்த எழுத்தை உருவாக்க இளம்தலைமுறையை ஊக்குவிப்பது போல் பொருள்படும்.
எழுதுபவர்கள் அந்த பரிசுத்தொகைக்கு அதற்கு கதைகள் அனுப்புவதாக இருந்தால்கூட அவர்கள் வழக்கமாக எழுதும் பெயரில் அனுப்பாமலிருப்பது நன்று. ஏனென்றால் அந்தப்பரிசு பெறுவதே தரமில்லாத எழுத்தாளர் என்னும் அடையாளத்தை ஈட்டிவரும். அதன்பின் பிறநூல்களுக்கும் நல்ல வாசகர் அமையமாட்டார்கள். என்னைப்பொறுத்தவரை இந்த அமேஸான் போட்டியில் ஒருவர் பரிசுபெற்றார் என்றால் அவருடைய எழுத்தை அதற்குமேல் பொருட்படுத்த மாட்டேன். அதை மீறி படித்துப்பார்க்கவேண்டும் என்றால் அது மிகச்சிறந்தாதாக இருப்பதாக நல்ல விமர்சகர் எவரேனும் சொல்லவேண்டும்.
இன்றைய நிலையில் இந்த அமேசான் போட்டி எழுத்துக்கள் ஒருவகை சூழியல்மலினங்கள், அறிவார்ந்தவர் ஒதுங்கி நின்றிருக்கவேண்டியவை என மட்டுமே சொல்லவிழைகிறேன்.
ஜெ
==================================================================================நன்றி: https://www.jeyamohan.in/125980#.XfSAqGT7TDc
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக