செவ்வாய், 28 ஜனவரி, 2020

‘அணுகுண்டைவிடவும் ஆபத்தானது மதவெறி!’...விஞ்ஞானிகள்.

‘மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள், மாட்டிறைச்சி உண்பவர்கள், தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள், அப்பாவிப் பொதுமக்கள் ஆகியோர் மத வெறியர்களால் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.’ 

மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்று, சென்னை கணித அறிவியல் நிறுவனம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடிகள் உட்படப் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 130 விஞ்ஞானிகளால் கையெழுத்து இடப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது - இது இன்றையப் பத்திரிகைச்[தி இந்து 29.10.2015] செய்தி.
‘பல்வேறு வகைப்பட்ட மக்களின் சமூக, கலாச்சார இழைகள் பின்னிப்பிணைந்து உருவாக்கியுள்ள ஒற்றுமை உணர்வுதான், நம் நாட்டின் நாகரிகச் சிறப்புக்குப் பெரும் வலிமை சேர்த்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பெருமைகளுக்கும் சிறப்புகளுக்கும் மத வெறியர்கள் மற்றும் அடிப்படைவாதிகளால் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. மத ரீதியாகப் பிளவுபட்ட ஒரு சமூகம் என்பது அணுகுண்டைவிடவும் ஆபத்தானது’ என்று கோரிக்கை வைப்பதற்கான காரணங்களையும் அவர்கள் விவரித்திருக்கிறார்கள்; தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

அறிவியல் அறிஞர்கள், கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது மட்டுமே தம் கடமை என்றிருந்துவி்டாமல், மதவெறி பிடித்த மூடர்களின் அடாவடித்தனங்களைக் கண்டித்திருப்பது போற்றத்தக்க செயலாகும்.

மேற்கண்ட மனு குறித்துக் குடியரசுத் தலைவர் நடுவணரசுக்குப் பரிந்துரை செய்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதாகச் செய்தி ஏதும் வெளியாகவில்லை.

இன்றளவும் மதவெறியர்களின் கட்டற்ற வெறியாட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
*************************************************************************************************