வியாழன், 30 ஜனவரி, 2020

கடவுள்களின் கடவுள் மொழி தமிழ்!!!

தஞ்சைப் பெரிய கோயிலில் தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்னும் தமிழர்களில் கோரிக்கைக்கு எதிராக, சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்னும் நபர், சமஸ்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் சார்பாக நீதிமன்றத்தில்  அவருடைய வழக்கறிஞர் வாதிடும்போது.....

“சமஸ்கிருதம் தேவமொழி என்பதால் அதில் மந்திரங்கள் ஓதித்தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இம்மாதிரியான பேர்வழிகளிடம் நாம் கேட்கும் கேள்வி, “இன்னும் எத்தனை காலத்திற்குத் தமிழர்களை முட்டாள்கள் ஆக்கும் கில்லாடி வேலையைச் செய்யப் போகிறீர்கள்?” என்பதுதான்.

உங்கள் கூற்றுப்படி, தேவன் என்று ஒருவர் இருப்பது உண்மையானால் அவர் சமஸ்கிருதத்தை எப்போது உருவாக்கினார்? [உலகிலுள்ள அத்தனை மனித இனத்தவரும் தமக்கான ஒரு மொழியைத் தாமே படைத்துக்கொண்டிருக்கும்போது, சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த இனத்தவர்களுக்கு மட்டும் தமக்கான ஒரு மொழியை உருவாக்கிக்கொள்வதற்கான அறிவு வாய்க்காமல் போனது ஏன்?]

தொடர்ந்து நீங்கள் இவ்வாறான ஒரு பொய்யைப் பரப்புரை செய்துகொண்டிருப்பீர்களேயானால், “தமிழ் தேவாதி தேவ பாஷை” என்னும் பொய்யை மனம் கூசாமல் சொல்லுவோம் என்பதை அறிவீர்களாக.

“சமஸ்கிருதம் அதிர்வலைகளைக் கொண்டது” என்று வழக்கறிஞர் கூறியிருக்கிறார்..

இப்படியொரு அதிர்வலை இருப்பதை ஏதேனும் ஒரு கருவியின் மூலம் உலகறிய நிரூபித்திருக்கிறீர்களா?

பொய் சொல்வதற்கும் ஓர் எல்லை இல்லையா?

சமஸ்கிருதத்தை உச்சரிக்கும்போது ஒருவித சக்தி பரவுவதாகவும் கதை அளந்திருக்கிறார் வழக்கறிஞர். நாம் எழுப்பும் மிக முக்கியக் கேள்வி......

அந்தச் சக்தியைக் கொண்டு நீங்கள் சாதித்தது என்ன? எத்தனை பேருடைய குறைகளைக் களைந்திருக்கிறீர்கள்? எத்தனை கெட்டவர்களை நல்லவர்கள் ஆக்கியிருக்கிறீர்கள்?

இனியும் இப்படி, சமஸ்கிருதத்தைத் தேவ பாஷை என்று பொய் சொல்லிக்கொண்டிருப்பீர்களேயானால், ஒட்டுமொத்த தமிழர்களாலும் புறக்கணிக்கப்பட்டு நீங்கள் தனிமைப்படுத்தப் படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்.
========================================================================
கிண்டிலில் ‘என் பக்கம்’[Author Page]:
amazon.com/author/haipasi