காரிருளில் புதையுண்டு கிடக்கிறது அந்தப் பெரிய தென்னந்தோப்பு. ஆடிக்காற்றில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்த நெடிதுயர்ந்த மரங்களின் சலசலப்பு. ஆந்தைகளின் அலறல். திட நெஞ்சிலும் திகிலூட்டவல்ல கோட்டானின் குரல். நடுநிசியின் பிடியிலிருந்து மெல்ல நழுவிக்கொண்டிருந்தது நேரம்.
தோப்பின் நடுவில் தென்னங்கீற்றால் வேயப்பட்டுக் கூனிக் குறுகிக் கிடந்தது ஒரு குடிசை. இரண்டு மனித உருவங்கள் அந்தக் குடிசையை நோக்கி நடந்துகொண்டிருந்தன.
“சொல்லுங்க எசமா.”
“நான் அவளோட ‘இருக்க’ வர்றேன்னு அவகிட்ட சொல்லுடா.”
“சொல்லுறேனுங்க. ஆனா, கிழவனும் அந்தக் குட்டியோட இருப்பானுங்களே?”
“நான் அவனைச் சரிகட்டிட்டேன். நான் வரச்சொன்னேன்னு சொல்லு. வெளியே வந்துடுவான்.”
“கெழவனுக்குப் பெத்த பாசம் இருக்குமுங்களே?”
“காத்தம்மா சின்ன வயசிலேயே பெத்தவங்களை இழந்ததும், தூரத்துச் சொந்தமான கிழவன் அவளை வளர்த்து ஆளாக்கினதும் உனக்குத் தெரியாதா? நான் வரச்சொன்னேன்னு சொல்லு, வந்துடுவான்.”
“ஏற்கனவே ரெண்டு தடவை முயற்சி பண்ணுனீங்க. அவ இடம் குடுக்கலீங்களே?
“இந்தத் தடவை ஒரு முடிவோடதான் வந்திருக்கேன். நான் குடிசைக்குள் போனதும் தட்டிக்கதவை வெளியே பூட்டிடு. சம்மதிப்பான்னு நினைக்கிறேன். பிகு பண்ணினா பலவந்தம்தான்” என்று திடமான தன் முடிவைச் சொன்னார் தோப்பின் உரிமையாளரும் ஊர்ப் பெரியதனக்காரருமான பெரியசாமி.
அவர் எதிர்பார்த்தது நடந்தது.
கந்தனின் குரல் கேட்ட மறு வினாடியே, காத்தம்மாவின், “போகாதே தாத்தா. எனக்குப் பயமா இருக்கு” என்ற கெஞ்சலைப் புறக்கணித்து வெளியேறினான் கிழவன்.
பெரியதனக்காரர் பெரியசாமி குடிசையில் நுழைந்ததும் அதை வெளியே பூட்டினான் கந்தன்.
"காத்தம்மா...” -குரலில் தேனொழுகச் சொல்லிக்கொண்டே அவளை நெருங்கி, ஆரத் தழுவ முற்பட்டார் பெரியதனக்காரர்.
“ரொம்பத்தான் அவசரமோ?” என்று கேட்டுக்கொண்டே சற்றுப் பின்னோக்கி நகர்ந்த காத்தம்மா, தட்டிக் கதவை நெருங்கினாள்; இருட்டில் எதையோ தேடினாள்.
“கதவைத் திறந்துட்டு வெளியே ஓடிடலாம்னு பார்க்கிறியா? அது நடக்காது. நீ இப்படிச் செய்வீன்னு தெரியும். நான் உள்ளே நுழைஞ்சதும் கந்தன் வெளியே பூட்டிட்டான்” -சிரித்தார் பெரியசாமி.
“நான் ஓட நினைக்கல.” -தொடர்ந்து எதையோ தேடினாள் காத்தம்மா.
“என்ன தேடுறே?”
“இருட்டா இருக்கே. லாந்தரைப் பத்த வைக்கலாம்னு தீப்பெட்டி தேடுறேன்.” -சொல்லிக்கொண்டே ஒரு பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையைத் தட்டிக் கதவின் மீது இறைத்தாள்.
“என்ன அது சீமெண்ணை நாத்தம்?”
“கை பட்டுப் பாட்டில் எண்ணை கீழே கொட்டிடிச்சு.” -சொல்லிக்கொண்டே தீக்குச்சியை உரசித் தட்டிக்கதவின் மீது வீசினாள் காத்தம்மா.
‘குப்’பென்று பற்றிய தீ தட்டியை எரித்துக்கொண்டே ஏனைய இடங்களுக்கும் பரவியது.
கடும் அதிர்ச்சிக்குள்ளான பெரியசாமி, அலறினார்.
சுழன்று சூழ்ந்து பரவிக்கொண்டிருந்த பெரு நெருப்பிலிருந்து தப்பிக்க வழிய்ல்லை என்பதைப் புரிந்துகொண்ட அவர், “என்னோட நீயும் இந்த நெருப்புக்கு இரையாகப்போறதை மறந்துட்டியா?” என்று பதறியவாறு சொன்னார்.
“மறக்கல. நீ என்னைத் தழுவினா அதனால உண்டாகிற களங்கத்தைக் கழுவத்தான் குடிசைக்கு நெருப்பு வெச்சேன்” என்று கூறிச் சிரித்த காத்தம்மாவின் வெறிச் சிரிப்பு அந்த ராத்திரி நேரத்தில் அந்தப் பெரிய தோப்பையே அதிரவைத்தது; காற்றில் கலந்து நெடுந்தொலைவுக்குப் பரவியது.
========================================================================