வெள்ளி, 27 மார்ச், 2020

கேட்பவனைக் ‘கேனயன்’ ஆக்கும் ஞானிகளின் கதைகள் - 1

அவன் மற்ற பையன்களைப் போல்தான் வளர்ந்தான்; விளையாடினான்; பள்ளிக்குப் போனான்; படித்தான்.

ஒரு நாள் “நான்  இறந்துவிடுவேனா?” என்று பயந்தான். அடிக்கடி அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டான். விடை கிடைக்கவில்லை.

அப்புறமும் சாவு குறித்து ஆழ்ந்து... மிக ஆழ்ந்து சிந்தித்தான்.

“நான் செத்த பிறகு ‘நான்’ என்னும் உணர்வும் செத்துப்போகுமா? நான் என்பது என்ன? மற்ற உறுப்புகளைப் போல அதுவும் என் உறுப்புகளில் ஒன்றா?” என்று மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தானாம்.

இந்த நான் குறித்து, தீவிரமாக...அதிதீவிரமாகச் சிந்தித்ததன் விளைவாக, ஒரு கட்டத்தில் ‘நான்’ ஐ மறந்து வெட்ட வெளியில் அவன் சிந்தனை படர்ந்ததாம். விவரிக்க இயலாத ஏதோ ஒன்றில் அவன் மனம் லயித்ததாம். அவனுக்கு ‘ஞானம்’ பிறந்ததாம்.

இது, ஆன்மிகவாதிகள் பலராலும் பல்வேறு காலக்கட்டங்களில் சொல்லப்பட்ட கதை. இங்கே, என்னுடைய நடையில் நான் சொல்லியிருக்கிறேன்.

கதையில் இடம்பெற்றுள்ள ‘அவன்’ வேறு யாருமல்ல, ‘ரமண மகரிஷி’ எனப்படுபவர்.

மேற்கண்ட வகையில் ஞானம் பெற்று ஞானியாகத் திகழ்ந்த இவர், “நான் என்பதை அறிந்துகொள். நீ பற்றுக்களிலிருந்து விடுதலை பெறுவாய்” என்று உலகோருக்குப் போதிக்கத் தலைப்பட்டாராம்.

‘நான் என்பது நம் உடம்பில் உள்ள உறுப்புகளில் ஒன்றா? அல்ல எனின், அது என்ன? செத்துத் தொலைத்த பிறகு அதன் கதி என்ன?’ -என்றிவ்வாறான கேள்விகளில் எந்த ஒன்றுக்கும் இந்த ரமண மகரிஷி[?] விடை கண்டறியவில்லை; சொன்னதும் இல்லை.

அப்புறம் எப்படி ஞானி ஆனார்?

ஞானம்[அறிவு] உள்ளவர்கள் சிந்திக்கலாம்!