சனி, 28 மார்ச், 2020

ஒரு பெண் பித்தன் ‘ஆன்மிகப்பித்தன்’ ஆன கதை!!!

அவர் பெரிய படிப்பாளி; ஆகச் சிறந்த அறிவாளியும்கூட. நானிலம் போற்றும் நல்லவர். அவரிடம் இருந்த ஒரே ஒரு குறை...அல்ல, பலவீனம்.....

உடலுறவு ஆசை. சல்லாபிக்கப் பெண்டாட்டி இல்லாமல் ஒரு நாள்கூட அவரால் தனித்திருக்க முடியாதாம். பிறந்தகத்துக்குகூட அவரை அனுப்பியதில்லை. பகலில் எப்படியோ, இரவில் வேறு எங்கு செல்லவும அனுமதிப்பதில்லை.

இது அந்த அம்மையாருக்குக் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு மன உளைச்சலைத் தந்தது.

இவர் பக்கத்தூர் சென்றிருந்த நாளில், அம்மையாரின் சகோதரன் தமக்கையைக் காண வந்திருந்தார். “நம்ம ஊர் உறவினர் வீட்டுத் திருமணத்திற்குப் போக இருக்கிறேன். நீயும் வாயேன்” என்று அழைத்தார். இதுதான் சாக்கு என்று அம்மையாரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு சகோதரனுடன் கிளம்பிவிட்டார்.

அவர்கள் புறப்பட்டுச் சென்ற சில நிமிட அவகாசத்தில் பக்கத்தூர் சென்றிருந்த  நம்மவர் ஊர் திரும்பினார். வீடு பூட்டியிருந்தது கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். அண்டை வீட்டாரிடம் விசாரிக்க, அவர்கள் நடந்ததைச் சொன்னார்கள்.

ஓட்டமும் நடையுமாக விரைந்து சென்று தன் மனைவியும் மைத்துனனும் சென்றுகொண்டிருந்த வண்டியைத் தடுத்து நிறுத்தினார் அவர்; தன்னவளைக் கண்டித்தார்.

அவரோ, இத்தனை காலமும் கட்டிக் காத்த கட்டுப்பாட்டை முற்றாக இழந்தார்; வெடித்தார்: “நீயெல்லாம் ஒரு மனுசனா? ‘அது’ இல்லாம உன்னால ஒரு நாள்கூட இருக்க முடியாதா?”

பெண்டாட்டி கொடுத்த சாட்டையடியால் நிலைகுலைந்தார் பெண்டாட்டிதாசர். ஆனாலும், அடுத்த சில நொடிகளில் அவருக்கு ஞானம் பிறந்தது. உடலுறவைத் துறந்தார்; உடன் வாழ்ந்த மனைவியைத் துறந்தார்; துறவியானார்; ஆன்மிக நெறியில் பயணிக்கலானார்.

“புணர்ச்சி செய்யாம அவர் ஒரு நாளும் இருந்ததில்லை; இருக்க முடிந்ததில்லை என்பது நம்பத்தகுந்ததாக இல்லையே?” என்று நீங்கள் கேட்க நினைக்கிறீர்களா? 

மூச்ச்ச்ச்.....

இந்தக் கதையின் கதாநாயகர் ‘துளசி ராமாயணம்’ எழுதிய துளசிதாசராக்கும்[வட இந்தியப் பகுதிகளில் ராமசரித் மானஸ்{துளசி ராமாயணம்} பெரும் புகழ்பெற்றது]

வாழ்க துளசிதாசரின் திருநாமம்!
=======================================================================
ஆதாரம்: ஸ்ரீவேணுகோபாலனின்[எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை], ‘ஆன்மிகம் வரும் வழிகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரை[குமுதம் பொங்கல் சிறப்பு மலர், சனவரி 2013]