அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 11 மார்ச், 2020

ஆன்மாவிடம் சில கேள்விகள்![‘அறுவை’ விரும்பிகளுக்கு மட்டும்]

ஆன்மாவைப் பற்றிப் பேசாத ஆன்மிகவாதிகள் இல்லை. அவர்கள் பாட்டுக்குக் கதைகதையாகச் சொல்லி வைக்கிறார்கள். நமக்குத்தான் புரிவதில்லை. எனவே, ஆன்மிகவாதிகளைப் புறக்கணித்து ஆன்மாவிடமே விளக்கம் கேட்பது என்று முடிவெடுத்தேன். 

கேட்டேன். கேட்டவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.
.....என் ஆன்மாவே!

இப்போது நீ என் உடம்பில் குடியேறியிருக்கிறாய். இதற்கு முன்பு எத்தனை உடம்புகளுக்குள் நீ புகுந்து வெளியேறியிருக்கிறாய்? புள்ளிவிவரம் உண்டா?

கடந்த பிறவிகளில் எத்தனை தடவை ஆண் உடம்பிலும் எத்தனை முறை பெண் உடம்பிலும் சுக துக்கங்களைச் சுமந்தாய்? ‘அலி’களின் தேகத்திலும் நீ விரும்பிப் பயணித்ததுண்டா? அழகான பெண் உடம்பில் நீ விரும்பிப் புகுவது உண்டா?

எந்தவொரு உடம்பிலும் புகாமல், வெறுமனே விண்ணில் அலைந்து திரிகிறபோது உன் நிலை என்ன? அப்போதெல்லாம் நீ உணர்ச்சிவசப்பட்டதுண்டா? அதாவது, உன் மனதில் காதல் முகிழ்க்குமா? காமம் உன்னைப் பாடாய்ப் படுத்துமா?

கடவுளைப் போலவே உன்னையும் உணரத்தான் முடியுமா? உணரும் சக்தியைக் கடவுள் எமக்கு வழங்குவாரா? அவரை வசியம் செய்வது எப்படி?

ஒரு பிறவியில் வாழ்ந்து முடித்த அனுபவம் அடுத்தடுத்த பிறவிகளிலும் உன் நினைவில் தங்கியிருக்குமா?

என்னைப் பொறுத்தவரை, என் ஆன்மாவாகிய உன்னைப் பற்றிய எந்தவொரு பதிவும் என்னிடம் இல்லை. முற்பிறவி பிற்பிறவி என்று எப்பிறவி பற்றியும் எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. அப்புறம், பாவம் புண்ணியம் என்றெல்லாம் அலட்டிக் கொள்வது முட்டாள்தனம் அல்லவா?

ஒரு பிறவியில் என் உடம்பிலும், இன்னொன்றில் இனியன் உடம்பிலும், மற்றொன்றில் அமுதாவின் உடம்பிலும், அடுத்த ஒன்றில் சூர்யாவின் உடம்பிலும்...இப்படி ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொருவர் உடம்பில் புகுந்து வெளியேறுவது உன் வழக்கமாக இருந்திருக்கிறது. உண்மையில், மேற்சொன்னவர்களில் எவருக்குச் சொந்தமான ஆன்மா நீ? நீ எனக்கே எனக்கான ஆன்மா அல்லதானே?

தன்னின் ஒரு கூறான உன்னைக் கூடு விட்டுக் கூடு பாயப் பணித்து, பல பிறவிகள் எடுக்கச் செய்து, அலையவிட்டு , சொல்லொணாத துன்பங்களுக்கு உட்படுத்திக் கடவுள் உன்னைத் தண்டிப்பது ஏன்? அதற்காக அவரை நீ நொந்துகொண்டதே இல்லையா?

இதுவும் அவருடைய திருவிளையாடல்களில் ஒன்றா?

இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் மேற்கண்டவற்றிற்கு மட்டும் இப்போது  பதில் தேவை.

‘எனக்குப் பேசும் சக்தி இல்லை’ என்று சொல்லி நழுவ வேண்டாம். நீ பயணிக்கும் உடம்புக்கு ஒரு மழலை முத்தமிட்டால், அந்தப் பேரின்பத்தைத் தொடு உணர்ச்சி மூலம் உன்னால் அனுபவிக்க முடிகிறது. அவ்வாறே எதிர் நின்று ஒருவர் பேசுவதையும் உன்னால் கேட்க முடிகிறது. பார்க்க முடிகிறது; சுவைக்க முடிகிறது. ஆக, ஐம்புல நுகர்ச்சி உனக்கு உண்டு. ஆதலால், ஐயத்திற்கு இடமின்றி உன்னால் நீ குடி கொண்டிருக்கும் உடம்பின் வாய் மூலம் எம்முடன் பேச இயலும்.

இப்போது எனக்குள்ளே இருந்து நீ பேசு; மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலைச் சொல்.

என் அன்புக்குரிய ஆன்மாவே சொல்...சொல்...சொல்!
========================================================================