கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், மனித நேயம் போற்றும் படைப்புகளை வெளியிடுவதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

புதன், 15 ஏப்ரல், 2020

ஒரு ‘கடு கடு’ கடவுள் கதை!!!

இறைவனும் இறைவியும், வாகனங்களின் ஓட்டத்தையும் மனித நடமாட்டத்தையும் நோட்டம் இட்டவாறு, ஒரு நகரத்தின் அகன்ற பெரிய தெருவில் அரூபமாக நடந்துகொண்டிருந்தார்கள்.

திடீரென, இறைவனைத் தன்பால் இழுத்து நிறுத்திய இறைவி, “அங்க பாருங்க” என்று குப்பைத் தொட்டியின் அருகே, சிக்குப் பிடித்த பரட்டைத் தலையும் உடம்பு முழுக்க அழுக்குத் திட்டுகளுமாக, நைந்து கிழிந்த ஆடையுடன் காட்சியளித்த ஒரு பெண் உருவத்தைச் சுட்டிக் காட்டினார்.

முகம் சுழித்த இறைவன்,  “சே, மனித நடமாட்டம் மிகுந்த தெருவில் இப்படி முக்கால் நிர்வாணமாக நிற்கிறாளே, பெண்ணா இவள்?” என்று முகம் சிவக்கக் கடுகடுத்தார்.
“பார்த்தவுடனே முழுப் பைத்தியம்கிறது அப்பட்டமா தெரியுது. பெண்ணான்னு கேட்கிறீங்களே? இவளைப் பைத்தியம் ஆக்கியது யாருன்னு கேளுங்க” என்றார் இறைவி.

அசடு வழிந்த இறைவன், “சரி, சரி. சொல்லு” என்றார்.

“உங்க ஆசீர்வாதத்தோட நாலு காலிப் பசங்கதான் இவளை இந்த நிலைக்கு ஆளாக்கினாங்க.”

வெகுண்ட இறைவன், கண்களில் கனல் தெறிக்க, "என்ன உளறுகிறாய்?” என்றார்.

“உளறவில்லை. நடந்ததைச் சொல்றேன். ஆத்திரப் படாம கேளுங்க” என்ற இறைவி, குரலில் விரக்தி தொனிக்கச் சொல்லத் தொடங்கினார்:

“இவளுக்கு அப்போ பதினாறு வயது. மக்கள் நடமாட்டம் குறைந்த தெருவில் இவள் தனியே போனபோது, நான்கு ‘காலிகள்’ இவளைக் கடத்திட்டுப் போனாங்க. தனி அறையில் அடைச்சி, அவங்களோட காம வெறிக்கு இவளை இரையாக்க முயற்சி பண்ணினாங்க..... ஐயோ........என்னைக் காப்பாத்துங்களேன்னு அலறித் துடிச்சி கூக்குரல்  எழுப்பினா இவ..... இவள் கற்பைக் காப்பாத்த யாருமே முன்வரல.....

கடவுளே....ஓ.....கடவுளே.....நீயாவது என்னைக் காப்பாத்துன்னு வெறியர்களின் பிடியிலிருந்து விடுபடப் போராடிகிட்டே, அழுது புலம்பி அபயக்குரல் எழுப்பினா....

துடிதுடிச்சி, ஓடோடிப் போயிக் காப்பாத்த வேண்டிய நீங்களும் இவளைக் காப்பாத்தல; என்னையும் தடுத்துட்டீங்க; அந்த வினாடியே மோனத்திலும் மூழ்கிட்டீங்க.....

சாதாரண மனுசங்களுக்கு இந்த மோனமும் தியானமும் தேவைப் படலாம். முழுமுதல் கடவுளான நீங்க எதுக்கு அடிக்கடி மோனத்தில் மூழ்கிக் கிடக்கிறீங்கன்னு எனக்குப் புரியல.....

அன்னிக்கி உங்க மெத்தனத்தால நடக்கக் கூடாத ஒரு கொடூரம் நடந்து முடிஞ்சி போச்சி. சூது வாது அறியாத ஒரு இளம் வயசு அப்பாவிப் பொண்ணைச் சீரழிச்சி, சித்திரவதை பண்ணி, அந்த நாலு கயவர்களும் நடுத்தெருவில் அலைய விட்டுட்டாங்க.

தனக்குக் ‘கடவுள் தந்த பரிசை’ நினைச்சி நினைச்சி எந்நேரமும் சிரிச்சிட்டே தெருத் தெருவா அலையற இந்தப் பைத்தியகாரியைப் பாருங்க; ரெண்டு கண்ணாலயும் நல்லா பார்த்து ரசிங்க” என்று குரல் தழுதழுக்க, விழிகளில் அருவியாய் நீர் வழிந்திடச் சொல்லி முடித்தார் இறைவி.

இறைவன் மவுனமாக நகரத் தொடங்கினார்.

ஒரே தாவலில் அவரை வழி மறித்த இறைவி,  “இப்படிக் கொடூரமா தண்டிக்கப்படுற அளவுக்கு இவள் செஞ்ச குற்றம்தான் என்ன? சொல்லுங்க” என்றார்.

“கடந்த பிறவிகளில் இவள் செய்த பாவம்” -உணர்ச்சியற்ற குரலில் சொன்னார் இறைவன்.

“அப்படி என்ன பெரிய பாவத்தை இவ செய்துட்டா?”

“அதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடியாது. அது ஒரு நீ.....ண்.....ட சங்கிலித் தொடர். எப்போதெல்லாமோ செய்த பாவங்களுக்கு எந்தெந்தப் பிறவியில் தண்டனை அனுபவிக்கணும்கிறது ஏற்கனவே விதிக்கப்பட்டது. கேட்கப்படுற ஒவ்வொரு கேள்விக்கும் கணக்குப் பார்த்துப் புள்ளிவிவரம் தர்றது என்னுடைய வேலை இல்லை. ஒரு விதியை வகுத்து, அதன்படியே எல்லாம் நடக்கணும்னு ஆணையிட்டிருக்கேன். இந்தப் பைத்தியக்காரி பாவம் பண்ணினவள். அதுக்கான தண்டனையை இந்தப் பிறவியில் அனுபவிக்கிறாள். அவ்வளவுதான்.”

மேலும் பேச விரும்பாதவர் போல் நடக்க ஆரம்பித்தார் இறைவன்.

“நில்லுங்க.”

இறைவியிடமிருந்து கடும் சீற்றத்துடன் வெளிப்பட்ட அந்த வார்த்தை இறைவனை மேலும் நகரவிடாமல் ஆணி அடித்தாற்போல் நிற்க வைத்தது.

“இவள் செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கிறாள், சரி. இந்தப் புத்தம் புது மலரை, நாள் கணக்கில் அனுபவிக்கிற அதிர்ஷ்டம் அந்த நாலு மனுச நாய்களுக்கும் வாய்ச்சுதே, அதுக்கு, அவங்க கடந்த பிறவிகளில் செய்த புண்ணியம் என்னய்யா?” -சீறினார் இறைவி.

இப்படியொரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத இறைவன், அதற்குப் பதில் சொல்லும் வகை அறியாமல் நின்ற இடத்திலேயே மீண்டும் மோனத்தில் புதையுண்டார்!
*************************************************************************************************
இது, 2011ஆம் ஆண்டுப் பதிவு. 2013இல் மீள் பதிவாக வெளியானது. இப்போது ‘மீள் மீள்’ பதிவாக.....!