கடவுளின் ‘இருப்பு’ குறித்து ஆராய்வதும், மூடநம்பிக்கைகளைச் சாடுவதும், மனித நேயம் போற்றும் படைப்புகளை வெளியிடுவதும் இத்தளத்தின் முதன்மை நோக்கங்கள் ஆகும்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

விரகதாபத்துக்குள்ளான மனைவியும் சாபத்துக்குள்ளான சனியும்!!!

கடவுள்கள் பற்றிய காமவிகாரக் கதைகளில் இதுவும் ஒன்று. ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கதை இது.

சூரியனின் மகனாக அவதரித்தவர் சனி[எப்போது பகவான் ஆனார் என்பது தெரியவில்லை]. சித்திர ரதர் என்பவரின் திருக்குமாரத்தி ‘ஜ்யேஷ்டை’யை மணந்தார்.

ஜ்யேஷ்டை நல்ல குணவதி; கற்புக்கரசி. ஆனாலும் ஒரு பலவீனம், கண்ட கண்ட நேரத்தில் காம உணர்ச்சிக்கு ஆளாகிறவள் அவள்.

சனி பகவானை நீங்கள் நன்கு அறிவீர்கள். சர்வ வல்லமை படைத்தவர். இவரிடமும் ஒரு பலவீனம் உண்டு. அது.....

கண்ட கண்ட நேரத்தில் முழுமுதல் கடவுளை நினைத்துத் தியானத்தில் ஆழ்ந்துவிடுவார். இந்திரலோகத்து மேனகா, ரம்பை, திலோத்தமை போன்ற அதிரூப சுந்தரிகளே வந்து கண் முன்னால் நிர்வாண கோலத்தில் காபரே ஆடினாலும் கண் திறக்க மாட்டார்.

ஒரு நாள் பட்டப்பகலில்[தேவலோகத்தில் இரவுபகல் உண்டா என்று கேட்காதீர்].....

கிஞ்சித்தும் எதிர்பாராத வகையில் அதி தீவிரக் காம இச்சையின் பிடியில் சிக்குண்டாள் ஜ்யேஷ்டை. கணவனான சனீஸ்வரனுடன் புணர்ந்து தன் விரகதாபத்தைத் தணித்துக்கொள்ள முடிவெடுத்தாள்.

கவர்ச்சிகரமான ஆடையுடுத்து, அழகழகான ஆபரணங்கள் அணிந்து கணவன் முன் நின்று, “என் அன்பரே...ஆசை நாயகரே” என்றெல்லாம் இச்சையைத் தூண்டும் வார்த்தைகளால் சனியை அழைத்தாள். அவர் இவளின் அழைப்பைக் கண்டுகொள்ளவே இல்லை.

கடும் சினத்துக்கு உள்ளானாள் ஜ்யேஷ்டை. “பெண்டாட்டியின் மனநிலையைப் புரிந்துகொள்ளாத நீர் ஆண்மகனல்ல. இப்போது முதல் பெண்ணை மருவிச் சுகம் காணும் தகுதியை நீர் இழக்கக் கடவீர்” என்று சாபம் கொடுத்தாள்.

இந்தவொரு சாபத்துக்கு உள்ளானதிலிருந்து சனியின் பார்வை எப்போதும் வக்கிரமானதாக அமைந்துவிட்டதாம். 
=============================================================

மிக முக்கிய வேண்டுகோள்:

இனி ஜோதிடம் பார்க்கப் போனால், “சனியின் வக்கிரப் பார்வை என்றால் என்ன?” என்று ஜோதிடரிடம் கேளுங்கள்.

[இந்தக் கருமாந்தரக் கதை நான் கற்பித்ததல்ல; திருநள்ளாறு தலபுராணம் சொல்லும் வரலாறாக்கும்! பிரபலமான தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்ட தீபாவளி மலரிலும் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது. தகவலை அடிப்படையாகக் கொண்டு ‘காலத்துக்கேற்ற நடை’யில் கதை சொல்லியிருக்கிறேன். நன்றி]