சனி, 18 ஏப்ரல், 2020

ஆண்மை ‘எழுச்சி' பெறாமையும், சிகிச்சை முறைகளும்!!

‘ஆண்மைக் குறைவை எதிர்கொள்ளும் ஆடவரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது’ என்னும் கவலைக்குரிய[?] செய்தியை அவ்வப்போது ஊடகங்கள் வெளியிடுகின்றன.

இம்மாதிரிச் செய்தியில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உள்ளது என்பது குறித்து நான் யோசித்ததுண்டு; பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, பொழுதைக் கழிப்பதற்காக நான் சேகரித்து வைத்துள்ள பருவ இதழ்க் குப்பையைக் கிளறுவது அன்றாட வழக்கம் ஆகிவிட்டது.

குப்பைக் குவியலிலிருந்து இன்று காலையில் தேர்வு செய்து வாசித்தது, ‘மீனாட்சி மருத்துவ மலர்’[பிப்ரவரி, 2005].

ஆண்மைக் குறைவு ஆடவரிடையே அதிகரித்துவருவது உண்மையாயின், மருத்துவ மலரில் நான் வாசித்த குறிப்புகள் பாதிக்கப்பட்டோருக்குப் பயன்படக்கூடும் என்னும் நம்பிக்கையில், அவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.

ஆண்மைக்குறைவு[Vasculogenic Erectile Dysfunction] ஏன்?
ஆடவனின் மனதில் புணர்தல் வேட்கை உண்டாகும்போது, இயல்பான நிலையில் இருக்கும் ஆணுறுப்பின் ரத்த நாளங்களில் குருதி ஓட்டம் அதிகபட்ச அளவை எட்டுகிறது. அதன் விளைவாக அது எழுச்சி பெறுகிறது. உடலுறவு முடியும்வரை, அந்த எழுச்சி நீடிக்க வேண்டுமாயின் குழாய்கள் புடைக்குமளவுக்கு  நிரம்பிய ரத்தம் வடியாமல் இருத்தல் வேண்டும்.

இதற்கு மாறாக, சில ஆண்களுக்கு ஆணுறுப்புக் குழாய்களில் ரத்தம் விரைந்து பரவுவதில்லை. வேறு சிலருக்கு, ரத்தம் பரவி உறுப்பு எழுச்சி பெற்றாலும் அந்நிலை நீடிப்பதில்லை. உள்ளே பரவிய ரத்தம் அங்கேயே நிலைத்து நிற்காதது காரணம்[நரம்புத் தளர்ச்சியும் காரணமாக இருத்தல்கூடும்]  என்கிறார் மீனாட்சி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் Dr.முரளி.

சிகிச்சை முறைகள்;
1. மாத்திரைகள் மூலம் சரிசெய்தல்.
2.இண்ட்ரா கேவர்னஸல்[Intracavernosal Injections] ஊசி மருந்தைச் செலுத்துதல்.
3.வாக்குவம் பம்ப்[Vaccum Pump] முறையில் விறைப்பை உண்டுபண்ணுதல். எழுச்சி பெற்ற உறுப்பின் அடிப்பாகத்தில் ரப்பர் பேண்ட்டைப் பொருத்திக்கொள்வதன் மூலம் விரும்பும்வரை புணர்ச்சி செய்யலாமாம். ‘இது போதும்’ என்னும் நிலை வரும்போது அதை அகற்றிவிடலாம் என்கிறார்கள்.

இந்த மூன்று வகைச் சிகிச்சைகளும் பயனற்றுப் போனால்.....

*Penile Prosthesis என்னும் செயற்கை ஆணுறுப்பைப் பொருத்தி உடலுறவுக்குத் தயார் செய்கிறார்கள் மருத்துவர்கள்.

2005ஆம் ஆண்டில் இவ்வகைச் சிகிச்சை முறைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. பின்னர், இதனினும் மேம்பட்ட சிகிச்சைகள் இடம்பெற்றிருக்கக்கூடும். சம்பந்தப்பட்டவர்கள் விரும்பினால், மதுரை மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்துகொள்ளலாம்.

நலமே விளைக!
========================================================================