காந்தியடிகள் நடத்திய ‘வார்தா’ ஆசிரமத்தில் எவரும் உழைக்காமல் ஒரு பிடி உணவுகூட உண்ண முடியாது. அப்படி உழைத்து உண்பதற்குச் ‘சிரமதானம்’ என்று பெயர்.
காந்தியைப் பார்ப்பதற்காக, அன்னிப்பெசண்ட் அம்மையார், பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபாய்ப் படேல், பாபு ராஜேந்திரப் பிரசாத், ஜவகர்லால் நேரு, கான் அப்துல் கபார் கான் போன்ற தேசத் தலைவர்கள் பலரும் வந்துபோவார்கள்.
அவர்களில் எவராயினும், ஆசிரமத்தில் உணவு உண்ண வேண்டுமாயின், ஏதாவது ஒரு வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்பது நடைமுறை.
ஒருமுறை காந்தியைச் சந்திக்க வந்த நேரு, பசி காரணமாக நேராக உணவருந்தும் பகுதிக்குச் சென்றுவிட்டார். “ஏதாவதொரு வேலையைச் செய்துவிட்டுத்தான் உணவுண்ண வர வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே ஐயா” என்றார் ஆசிரமப் பணியாளர் நேருவிடம்.
“அடடே, மறந்துவிட்டேனே” என்ற நேரு, ஆசிரமத்தின் பின்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த, சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களையெல்லாம் சுத்தமாகத் தேய்த்துக் கழுவி வைத்தார். அதன் பிறகே ஆசிரமத்தில் அவருக்கு உணவு வழங்கப்பட்டது.
இது, காந்தியடிகள் தாம் மேற்கொண்ட கொள்கையில் எத்தனை உறுதியாக இருந்தார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
அடுத்து.....
உழைப்பின் அருமையையும் அதன் அரிய பயனையும் வலியுறுத்தும் வகையிலான, டால்ஸ்டாய் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு.
ரஷ்ய நாட்டு அறிஞர் டால்ஸ்டாயைத் தேடி ஓர் இளைஞன் வந்தான். “நான் சுயமாகத் தொழில் செய்து பிழைக்க விரும்புகிறேன். பண உதவி செய்யுங்கள்” என்றான்.
சற்றே யோசித்த டால்ஸ்டாய், “உனக்கு நூறு ரூபிள் தருகிறேன். உனது வலது கையை வெட்டித் தர முடியுமா?” என்றார் அந்த இளைஞனிடம்.
“கையையா? ஐயோ...இது எப்படி முடியும்?” என்று அலறினான் அவன்.
“சரி, ஆயிரம் ரூபிள் தருகிறேன். உன்னுடைய ஒரு காலை மட்டுமாவது வெட்டித் தர முடியுமா?” என்றார் அறிஞர்.
“என்ன நீங்கள். கையைக் கொடு, காலைக் கொடு என்கிறீர்கள். இன்னும் அதிகம் ரூபிள் தருகிறேன், ஒரு கண்ணைக் கொடு என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே” என்று மிகுந்த பதற்றத்துடன் கேட்டான் அவன்; அங்கிருந்து மெல்ல நகரத் தலைப்பட்டான்.
அவனைத் தடுத்து நிறுத்திய டால்ஸ்டாய், “இளைஞனே, உன்னிடம் எத்தனை விலை மதிக்க முடியாத உறுப்புகள் இருக்கின்றன என்பது புரிந்ததா? இவையே நீ வாழ்க்கையில் உயர்வதற்கான அரிய மூலதனம். இவற்றை உரிய முறையில் பயன்படுத்தி உழைத்திடு. நிச்சயம் முன்னேறுவாய்” என்றார்.
========================================================================
05.01.2020 ‘ராணி’ வார இதழில், முனைவர் ‘இளசை சுந்தரம்’ அவர்கள் எழுதும் தொடரிலிருந்து எடுத்தாண்டவை இந்நிகழ்வுகள்.