ஜோதிடம் பற்றி அறிந்தவர்களில் பெரும்பாலோருக்கு, பிரபல ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலனைத் தெரிந்திருக்கும். 1999இல் வெளியான ‘தினமணி’ தீபாவளி மலரில் ‘வானியலில் வரும் நூற்றாண்டு’ என்னும் தலைப்பில் நீண்ட பெரிய கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார்.
‘இந்நூற்றாண்டு காணப்போகும் சில முக்கிய நிகழ்ச்சிகளைக் கீழே குறிப்பிட்டுள்ளோம். விஞ்ஞானப்பூர்வமாகவும், இணையற்ற பண்டைய ஜோதிட நூல்களின் துல்லிய விதிகளின்படியும் பலன்களை நாம் கணித்துள்ளதால் கண்டறியப்பட்ட முடிவுகளில்[நிகழ்வுகள்] தவறு நிகழ வாய்ப்பே இல்லை’ என்று குறிப்பிட்டு, இந்நூற்றாண்டில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளுக்கான பட்டியலைத் தந்துள்ளார்.
அவர் முக்கிய நிகழ்வுகள் என்று குறிப்பிட்டவற்றுள் எனக்கு மிக முக்கியமானவையாகத் தோன்றிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளேன்.
1.உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் தில்லி நிலநடுக்கத்தில் இடிந்துவிழும்.
2.பாகிஸ்தானில் உள்நாட்டுப் பூசல்களும், அமைதிக் குறைவும் அதிக அளவில் ஏற்பட்டுப் பாகிஸ்தான் மூன்று பகுதிகளாகப் பிளவுபடும். ஒரு பகுதி ஈரான், ஆப்கானிஸ்தான்
நாடுகளுடனும், ஒரு பகுதி சீனாவுடனும் சேர்த்துக்கொள்ளப்படும். எஞ்சிய பகுதி மட்டுமே பாகிஸ்தானாக மிஞ்சும்.
நாடுகளுடனும், ஒரு பகுதி சீனாவுடனும் சேர்த்துக்கொள்ளப்படும். எஞ்சிய பகுதி மட்டுமே பாகிஸ்தானாக மிஞ்சும்.
3.இந்தியாவில் பூசல்கள் ஏற்பட்டாலும், தியாக உள்ளம் கொண்ட வீரத்தலைவனால் சீர்பட்டு, மிகப் பலம் பெற்ற நாடாக இது விளங்கும்.
4.இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கிறிஸ்தவர்களுக்கும் ஈரான், ஈராக் ஆகிய நாடுகளின் முஸ்லிம்களுக்கும் இடையே பெரும் போர் மூளும். அமெரிக்க நகரங்களுக்குச் சேதம் உண்டாகும். ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளின் பல நகரங்கள் அழியும்.
5.மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய்க் கிணறுகள், வர்த்தகம் ஆகியவை ஐக்கிய நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
6.கச்சா எண்ணெய்க் கிணறுகளில் பெரும்பாலானவை வற்றிவிட, துபாய், சவூதி போன்ற நாடுகளின் செல்வச் செழிப்பு அடியோடு ஒழியும்.
7.சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுப்படும்.
8.மிகச் சிறந்ததொரு ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும். இது உலக அற்புதங்களில் ஒன்றாகத் திகழும்.
9. செவ்வாய்க் கிரகத்தில் மனிதனின் காலடி பதியும்.
10. இந்தியாவில் ஆன்மிகம் தழைத்தோங்கும்.
ஏ.எம்.ராஜகோபாலனின் மேற்கண்ட கணிப்புகள் பொய்க்குமா மெய்க்குமா[!] என்பது குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும், அவரிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றுண்டு. அது.....
கரோனா என்னும் கிருமியின் அதிரடித் தாக்குதலால், உலகில் பல்லாயிரவர் செத்திருக்கிறார்கள்; செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜோதிடச் சக்ரவர்த்தி அவர்கள் இதைக் குறிப்பிட்டு உலக நாடுகளை எச்சரிக்கை செய்யாதது ஏன்? ஏன்? ஏன்?
========================================================================