அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

எனக்கு மிகமிக மிகமிக மிகமிகப் பிடித்த ஜென் கதை!!!

இந்தக் கதை என்னைவிடவும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். படிக்கத் தவறாதீர்.

ஜென் மாஸ்டர் | Tamil and Vedas
யதான ஜென் குரு அவர்.

அவருக்கு மூன்று சீடர்கள் இருந்தார்கள். ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இனி யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசித்தார்.

சீடர்களை அழைத்தார்; சொன்னார்:

“நீங்கள் மூவருமே எனக்குப் பிடித்த சீடர்கள்தான்.  மூவரில் ஒருவரிடம் ஆசிரம நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க நினைக்கிறேன். ஒரு தேர்வுக்கு இன்று உங்களை உட்படுத்த இருக்கிறேன்.

நீங்கள் மூவரும் அவரவர் விருப்பத்திற்கேற்பச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள். பயண நேரத்தில், கடவுளைப் பற்றித் தொடர்ந்து சிந்தியுங்கள். சிந்தனை மிக ஆழமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருத்தல் வேண்டும்.

இன்றே உங்களின் பயணத்தை மேற்கொள்ளுங்கள். ஓராண்டு நிறைவு பெற்றவுடன் திரும்பி வாருங்கள். வந்தவுடன், கடவுள் குறித்து நீங்கள் சிந்தித்து அறிந்தவற்றை விவரித்துச் சொல்லுதல் வேண்டும். உங்களின் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்த்து உங்களில் ஆசிரமப் பொறுப்பை ஏற்கப் போகிறவர் யார் என்பதை அறிவிப்பேன்.”

குரு சொல்லி முடித்தவுடன் மூன்று சீடர்களும் தத்தம் பயணத்தை மேற்கொண்டார்கள்.

காலச்சக்கரம் சுழல, ஓராண்டு நிறைவு பெற்றது.

மூன்று சீடர்களும் ஆசிரமம் திரும்பினார்கள்.

கடவுள் குறித்த அவர்களின் கருத்தைச் சொல்லுமாறு பணித்தார் குரு.

“குருவே, நான் கடவுளைக் கண்டேன்.  அவருக்கு உருவம் இல்லை. அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார்” என்றான் ஒரு சீடன்.

“இறைவனுக்கு உருவம் உள்ளது. ஒளி வடிவமாக அவர் இருக்கிறார் என்பதை என்னால் உறுதிபடச் சொல்ல முடியும். கண்களால் அவரைக் காண இயலாது. மனதால் மட்டுமே அது முடியும்” என்றான் இரண்டாவது சீடன்.

“குருவே எனக்குக் குழப்பமாக உள்ளது. கடவுளை ஆறறிவால் அறியவோ, மனத்தால் உணரவோ என்னால் முடியவில்லை” என்றான் மூன்றாவது சீடன்.

குரு மெலிதானதொரு புன்னகையை இதழ்களில் படரவிட்டார்; சொன்னார்: “நீ சொன்னதுதான் உண்மை. நீதான் இனி இந்த ஆசிரமத்தின் பொறுப்பாளன்.”
=======================================================================
ஆதார நூல்: அம்பிகா சிவம் அவர்களின் ‘ஞானம் தரும் ஜென் கதைகள்’