சனி, 16 மே, 2020

ஆறாம் அறிவும் தீராப் பெருங் கவலையும்!!

இருந்துகொண்டிருப்பவை அழிந்துகொண்டிருக்கையில், புதியன தோன்றி, இருந்துகொண்டிருந்து, பின்னர் அழிந்துபோவது இயற்கை நெறியாக உள்ளது.

நம் இனமும் இதற்கு விதிவிலக்கல்ல.

நமக்கு வாய்த்த ஆறாம் அறிவு, நம் ஆயுளை அதிகரிக்கவும் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவும், பிற உயிரினங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் பயன்படுகிறது. இன்ன பிற நன்மைகளையும் பெற முடிகிறது.

ஆறாவது அறிவால் பெற்ற தீமைகளும் ஏராளம். 

அவற்றுள் முதன்மையானது மரண பயம்[பிற உயிரினங்களுக்கு இல்லை].

அந்தப் பயம்தான், கண்ட கண்ட கடவுள்களை அனுமானம் செய்ய வைத்தது;  ஆன்மா என்று ஒன்று இருப்பதாகக் கற்பனை செய்ய வைத்தது; சொர்க்கம், நரகம், மறுபிறப்பு போன்றவற்றை நம்பச் செய்தது.

மரணத்திற்குப் பிறகு நம் ஆன்மா வெட்டவெளியில் அலைந்து திரியுமா? எத்தனை காலத்துக்கு? அதற்கு வாய்க்க இருப்பது சொர்க்கமா, நரகமா? பின்னர் அது மறுபடியும் பிறக்குமா? எத்தனை முறை? எது எதுவாக? -இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ சிந்தித்து மருண்டார்கள் நம்மவர்கள்; பெரிதும் கவலைப்பட்டார்கள்.

‘இவற்றிற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை. இவை வெறும் மூடநம்பிக்கைகளே’ என்று அறிவியல் அறிஞர்கள்  அழுத்தம் திருத்தமாய்ச் சொன்ன பிறகு கவலைப்படுவதிலிருந்து ஓரளவு விடுபடவும் செய்தார்கள்.

ஆனாலும், இறந்த பிறகு ஏதேனும் ஒன்று மிஞ்சுமா? உடம்பு அழிந்த பின்னர் அதன் கதி என்ன? என்றெண்ணியபோது அவர்தம் அடிமனங்களில் குடிகொண்டிருந்த  கவலை முற்றிலுமாய் விலகவில்லை என்பது புரிந்தது.

பிற பொருள்களையும் உயிர்களையும் போலவே மனித உடம்பும் அணுக்களால் ஆனதே. ஐம்புலனறிவும் ஆறாம் அறிவும் அணுக்களின் இணைப்பின் மூலம் பெற்றவையே. அணுக்கள் அழிந்துபோனால் உடம்பு இல்லை; சிந்திக்கும் அறிவு இல்லை; உயிரும் இல்லை; வேறு எதுவும் இல்லை என்று அறிவியல் அறிஞர்கள்[விஞ்ஞானிகள்] உரிய ஆதாரங்களுடன் அறிவித்த பின்னர்.....

‘உண்மைதான். வருத்தப்பட ஒன்றுமில்லை’ என்று மனிதர்கள் மனம் தேறினார்கள். கவலை கொள்வதைத் தவிர்த்தார்கள். எனினும்.....

இயற்கை நிகழ்வுகள்[ஆக்கம், அழிவு] எதுவாயினும், பொருள்களும் உயிர்களும்[ஏதேதோ வடிவங்களில்] எக்காலத்தும் இருந்துகொண்டே[புதியன தோன்றிக்கொண்டே இருப்பதால்] இருக்கும்; இயங்கிகொண்டே இருக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்ததால்.....

‘இங்கே, எவை எவையோ எப்படி எப்படியோ எப்போதும் இருந்துகொண்டும் இயங்கிக்கொண்டும்தான் இருக்கும். மரணத்திற்குப் பிறகு நாம் மட்டும் இல்லாமல் போகிறோம். இது ஏன்?’ என்று எண்ணிக் கவலைப்படவே செய்வார்கள். 

மனிதர்களுக்கான இந்தக் கவலை எக்காலத்தும் தீராத ஒன்று என்றே சொல்லத் தோன்றுகிறது.
              *                *               *
என் எண்ணங்களை இயன்றவரை புரியும் வகையில் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். புரியவில்லை எனின் பொறுத்தருள்க.
==============================================