சனி, 11 ஜூலை, 2020

அந்தரங்கங்கள் எல்லாமே ‘ஆபாசம்’ அல்ல!!!

உலகறிந்த பிரபல எழுத்தாளர் ‘பெருமாள் முருகன்’ அவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரின் ‘மாதொருபாகன்’ நாவல் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது இலக்கிய உலகம் சற்றும் எதிர்பாராததும் விரும்பத்தகாததுமான நிகழ்வாகும். அது முற்றிலுமாய் மறக்கப்படுதற்குரிய ஒன்று.

மண்மணம் கமழும் எதார்த்தமான பல படைப்புகளை வழங்கியதற்காக இந்தத் தமிழ் மண் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.

அவரின் அனுமதியின்றி[பொருட்படுத்த மாட்டார் என்பது என் நம்பிக்கை. எழுத்தாளருக்கு என் மனம் நிறைந்த நன்றி] ‘அர்த்தநாரி’ என்னும் அவரின் புதினத்தில் இடம்பெற்ற, கீழ்வரும் சின்னஞ்சிறு உரையாடல் பகுதியைப் பதிவாக்கியுள்ளேன்.  வாசித்து மகிழுங்கள்.
“நீயா ஒருநாளைக்காச்சும் என்னயக் கூப்பட மாட்டயா?” என்று ஒரு நாள் அவன் கேட்டான். 

“பொம்பள அப்பிடிக் கூப்படலாமா?” என்று திருப்பிக் கேள்வி கேட்டாள் அவள்.

“பொம்பளைக்கு மட்டும் வேணுமின்னு இருக்காதா? நீ என்ன மரக்கட்டையா? இதா என்னயக் கட்டிப் புடிக்கையில் தெரியுதே உன்னோட ஆச எவ்வளவுன்னு” என்றான் அவன்.

அதற்குப் பின் ஒரு நாள் தொண்டுப்பட்டியில், அவன் சாப்பிட்டு முடித்துக் கட்டிலில் படுத்திருந்தான். 

அவள் ‘போசி’[பாத்திரம்]யை எடுத்துக்கொண்டு, “போவட்டுமா?” என்று ஒரு மாதிரி இழுத்தாள். “போயேன்” என்று சொன்ன அவன் அவளை உற்றுப் பார்த்தான். அவள் எழுந்து வந்து அவனுடன் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள்.

அவன் அவள் முகத்தைத் தன் பக்கம் இழுத்து உதடுகளில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான்; “போவட்டுமாங்கிறதுக்கு இதுதான் அர்த்தமா?” என்று கேட்டு அவளைக் கட்டிப்பிடித்தான்.

அன்று அவள் ரொம்பவே ஆதிக்கம் செலுத்தினாள். 

எல்லாம் முடிந்து, அவள் கிறங்கிக் கிடந்தபோது, அவளை இறுக அணைத்துக்கொண்டு, அவள் காதில் மெல்ல, “இத்தனை நாளும் இத்தனை ஆசய மறச்சி வெச்சிகிட்டு இருந்தியாடி தேவடியா?” என்றான்.

அந்த வார்த்தையைக் கேட்டதும், அவன் முகத்தைத் தள்ளிவிட்டு அவள் அழ ஆரம்பித்தாள். அவன் பலவிதமாகச் சமாதானம் சொன்னான். “இந்த மாதிரி சமயத்துல சொல்ற வார்த்தைக்கெல்லாம் அப்பிடியே அர்த்தம் எடுத்துக்கலாமா? இதெல்லாம் செல்லமாச் சொல்றதுதான்” என்றான்.

“அதுக்குன்னு இப்பிடியா சொல்வாங்க?” என்று தொடர்ந்து அழுதாள் அவள்.

“ஊருல பிரசன்[புருசன்] பொண்டாட்டி சண்டை போட்டுக்கறப்ப எத்தன பேசிக்கிறாங்க. ஊர் மேயற தேவடியான்னு பிரசன் சொல்றான். ஊர் மேல போறவன் நீதாண்டான்னு பொண்டாட்டி சொல்றா. மக்கா நாள்[மறு நாள்] பாரு ரண்டு பேரும் சிரிச்சிப் பேசிட்டுப் போறாங்க. ஊரே பாக்கறாப்பல பேசுன வார்த்தைக்கே ஒரு மதிப்பும் இல்ல. ஆசையில சொன்ன வார்த்தை இது. இதுக்குப் போயி இப்பிடி மொரண்டு பண்ணலாமா?” என்று கொஞ்சினான் அவன்.

“அதுக்குன்னு நானாக் கூப்பிட்ட நாளுப் பார்த்து இப்பிடிச் சொல்லலாமா?” என்றாள் அவள்.

“எங்க பாட்டியா, சின்னப் பிள்ளைங்கள ஆசயா வாடி தட்டுவாணின்னு கூப்புடும். அது அப்பிடித்தான் தன் பிரியத்தைக் காட்டும். அது மாதிரிதான் இதுவும்” என்றான் அவன்.

அவள் வருத்தம் தணியவில்லை.

அப்புறம், அவன் ஒரு வலுவான வாதத்தைக் கையில் எடுத்தான். “மொரட்டுத் தாயோலி, உனக்கு எத்தன இருந்தாலும் பத்தாதுடா. உன் கைக்குப் பாறையில் செஞ்சு வச்சிருக்கோணும்னு அன்னிக்கி ஒரு நாளு சொன்ன. இன்னொரு நாளு, ‘மாடு தாழியில் தவுட்டை உழும்புற மாதிரி உழும்புறே’ன்னு சொன்ன. இது மாதிரி நீ சொன்னதெல்லாம் உனக்கு மறந்து போச்சா. இதுக்கெல்லாம் நான் கோவிச்சிக்கிட்டனா?” என்று கேட்டான் அவன்.

இதற்கப்புறம்தான் அவள் ஒருவாறு சமாதானத்திற்கு வந்தாள்.
=======================================================================
நாவலின் பெரிய பத்திகள் இங்கு வாசிப்பு வசதிக்காகச் சிறு சிறு பத்திகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.