(முன்பிறவி, பின்பிறவி பற்றியெல்லாம் சொல்லுறவருக்கு, கடிகாரம் பார்க்காம மணி சொல்லத் தெரியாதா? மணிக்கட்டில் 'வாட்ச்' எதுக்கு?!)
கடவுள், ஆன்மா, மறுபிறவி, சொர்க்கம், நரகம் என்று அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பாடாதவை பற்றியெல்லாம் கதைவிடத் தெரிந்தவர்களைத்தான் நம் மக்கள் மகான்[ஞானி, அவதாரம் எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்] என்று புகழ்ந்து போற்றிக் கொண்டாடினார்கள்; கொண்டாடுகிறார்கள்.
இந்த மகான்களுக்கான முதல் தகுதி, தாம் கருத்துரைக்க எடுத்துக்கொண்ட எந்தவொரு பொருள் குறித்தும் மனம்போன போக்கில் பேசி, கேட்பவரின் சிந்திக்கும் திறனை மழுங்கடிப்பதுதான்.
மறைந்த ‘வேதாத்திரி மகரிஷி’ இம்மாதிரியான மகான்களின் பட்டியலில் இடம்பெற்று உலகளவில் போற்றிப் புகழப்படுபவர் ஆவார்.
இவருடைய ‘முன் பின் பிறவி’ என்னும் தலைப்பிலான ஒரு கருத்துரையைக் கீழே பதிவு செய்திருக்கிறேன். படியுங்கள். பத்தி வாரியாக அவரின் கருத்துரை குறித்த என் எண்ணங்களையும் முன்வைத்திருக்கிறேன்.
கருத்து 1:
‘ஒருமனிதனுடைய முற்பிறவிகளை அறிய வேண்டுமானால் அவன் உருவத்திற்கு மூலமான விந்துநாத தொடர்பை யூகத்தால் பற்றிக்கொண்டே பின்நோக்கிச் செல்ல வேண்டும்.’
நம் உருவத்திற்குக் காரணமான விந்து...இது எளிதாகப் புரிகிறது. ‘விந்து நாதம்’ என்கிறாரே, அது என்ன? அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, அந்தத் தாத்தாவுக்கு......என்றிப்படி நம் மூதாதையர் பற்றித் தொடர்ந்து யூகிப்பதா??
அப்படி யூகிப்பதால் முற்பிறவிகளை அறிய முடியுமாம்.
யூகியுங்கள். பலன்?
மண்டை காயும்; மதி மயங்கும்.
மண்டை காயும்; மதி மயங்கும்.
கருத்து 2:
‘அத்தொடர்பு, பல்லாயிரக்கணக்கான உருவ வேறுபாடுடைய சீவராசிகளாகக் காட்சியளிக்கும். அத்தனை சீவராசிகளின் உடலியக்கம், அறிவியக்கம் இவைகளை அடக்கமாகப் பெற்றவனே ஒவ்வொரு மனிதனும்.’
‘அத்தொடர்பு’...எத்தொடர்பு? விந்துநாதத் தொடர்புதானே?
விந்துநாதத் தொடர்பு, பல்லாயிரக்.....சீவராசிகளாகக் காட்சியளிக்குமாம். அவற்றின் இயக்கங்களை அடக்கமாகப் பெறுவானாம் மனிதன்.
புரிந்ததா? புரிந்தால் மகான் ஆவதற்கான முதல் படியை எட்டிவிட்டவர் நீங்கள்.
கருத்து 3:
‘பின்னோக்கிச் செல்லும் உருவப் பரிணாமத் தொடர்பு பல சீவராசிகளையும் தாண்டிப்போய், இறுதியாகப் பரமாணுவிலே முடிவு பெறும்.’
சீவராசிகளைத் தாண்டிப் போவதெல்லாம் வேதாத்திரி மகிரிஷிக்குத்தான் தெரியும். நமக்குத் தெரிந்தது சிறு வயதில் பச்சைக்குதிரை தாண்டுவதுதான்.
கருத்து 4;
‘ஒரு மனிதன் பின் பிறவிகளை அறிய வேண்டுமானால், அவை அவன் விந்துவின் மூலம் தோன்றும் மக்களும், அம்மக்களின் மூலம் தொடர்ந்து தோன்றும் மக்களுமேயாகும்.’
மக்கள் தோன்றுவது விந்துவின் மூலம்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். பின் பிறவி என்பது மக்களும், மக்களுக்கு மக்களும் என்கிறார். அதாவது, ஒரு மனிதனுடைய வாரிசுகள்தான் அவனுடைய பின்பிறவிகளாம். என்ன சொல்கிறார் மகரிஷி?
எனக்கு ஒரு கருமாந்திரமும் புரியல.
உங்களுக்குப் புரிந்தால் மிக்க மகிழ்ச்சி.
இவை போல், வேதாத்திரியார் உதிர்த்துச்சென்ற இன்னும் பல தத்துவ முத்துகளையும் படித்துப் புரிந்து மக்களிடயே பரப்புரை செய்யுங்கள். அவர்கள் உங்களையும் மகான் ஆக்குவார்கள்.
* * * *
வேதாத்திரி மகரிஷியின் தத்துவங்கள் நம்மை வெகுவாக மருட்டினாலும், அவர் பெயரால் இயங்குகிற அமைப்புகள், குறிப்பிடத்தக்க வகையில் ஆன்மிகப் பணி ஆற்றுகின்றன என்பது அறியத்தக்கதாகும்.
========================================================================
உதவிய நூல்: ‘அறிவுத் திருக்கோயில்’[சிறப்பு மலர்].