திங்கள், 13 ஜூலை, 2020

தினமணி ‘இணைய வெளியிலே’இல் என் பதிவு!



20 நவ., 2018 - ... (மூன்றிலொருவராகப்) பெற்றிருக்கிறார். https://kadavulinkadavul.blogspot.com. 

தினமணியில்(13.07.2020) நான் எழுதிய, கீழ்க்காணும் பழைய பதிவொன்று  https://kadavulinkadavul.blogspot.com/2018/10/blog-post_12.html வெளியாகியுள்ளது[பதிவைச் சற்றே சுருக்கி வெளியிட்டிருக்கிறது].. தினமணிக்கு என் நன்றி.

இந்தத் 'தில்' கிழவனைத் தினமும் நினையுங்கள்!!!

இந்த ஆண்டு[2018], இயற்பியலுக்கான  நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆர்தர் ஆஸ்கின்' என்பவர் பெற்றிருக்கிறார். இவரின் வயது 96.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர்,  ”ஆப்டிகல் டிவீசர்ஸ்” எனப்படும் லேசர் தொழில்நுட்பத்தில் நிகழ்த்திய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெறுகிறார். பரிசுத் தொகையான 6.5 கோடி ரூபாயில்[மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது] 50 சதவிகிதத்தை இவர் பெறுகிறார்.
சதம் அடிக்க நான்கே ஆண்டுகள் உள்ள நிலையில், இப்படியொரு பரிசைப் பெற்று உலகோரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் இந்தக் கிழவர். ஆனால், இதை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லையாம்.

அவருடனான ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியும் அவரின் பதிலும்..... 

“அய்யா நீங்கள் மிகப்பெரிய உலக சாதனை புரிந்திருக்கிறீர்கள். அதற்காக உலகளவிலான அங்கீகாரமும் உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. எனவே, உங்களை நாங்கள் நேர்காணல் செய்யவேண்டும்.........”
“மன்னிக்கவும். நான் அடுத்த சாதனைக்கான ஆராய்ச்சி அலுவல்களில் மும்முரமாக இருப்பதால் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.”  

கிழவர் அப்படியென்ன செய்துவிட்டார்?  

'சிறிய பாகங்களைப் பிடித்துக்கொள்வதற்காக ஒரு இடுக்கி (ட்வீஸர்) பயன்படுத்தப்படுவதை,  நாமெல்லாம் 'வாட்ச் ரிப்பேர்', 'மொபைல் போன் ரிப்பேர்' கடைகளுக்குச் சென்றிருந்தால் பார்த்திருப்போம் இல்லையா? அதுபோல நானோ, மைக்ரோ துகள்களில் நடைபெறும் அணு ஆராய்ச்சிகளில் கண்களுக்கே புலப்படாதா ஒன்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள ஒரு உபகரணம் வேண்டுமென்பதை உணர்ந்து இவர் தொடங்கிய ஆராய்ச்சிதான் 'ஆப்டிகல் ட்வீஸர்'. லேசர்  உயர் ஒளிக்கற்றைகளைச் செலுத்தி அவை தரும் அழுத்தத்தின்மூலம் பிடித்துக்கொள்ளும் நுட்பத்தைக் கண்டுபிடித்ததுதான் இவரது சாதனை. குறிப்பாக, தற்போது 'லேசர்' மூலம் செய்யப்படும் கண் அறுவைச் சிகிச்சையின் போது பேருதவி புரியும் என்று மருத்துவத்துறை மகிழ்கிறது.
அமெரிக்காவின் பெல் ஆராய்ச்சி மையத்தில் மூத்த விஞ்ஞானியாக இருக்கும் இவர், இயற்பியலின் ஒளியியல்துறையில் மிகப்பெரிய சாதனைபுரிந்து, 96 வயதில் (இவர்தான் உலகிலேயே இதுவரை 'நோபல்' பெற்றிருப்பவர்களில் மூத்த வயதுடையவர்) 2018ஆம் ஆண்டுக்கான பரிசினை (மூன்றிலொருவராகப்) பெற்றிருக்கிறார். இவரிடம் இன்று செய்தியாளர் கேட்டபோதுதான் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
ஆமா, அப்படியென்ன அடுத்த ஆராய்ச்சி?
'சூரியசக்தியினை ஆக்கபூர்வமாக்குவது எப்படி?' என்பதாம்.'
கில்லாடிக் கிழவர்தான்!
நடுத்தர வயதைக் கடந்துவிட்டாலே, நமக்காகக் கதவு திறந்து வைத்துக் காத்திருக்கும் மரணத்தை எண்ணி மனம் கலங்குகிறோம். இந்தக் குடுகுடு கிழவருக்கு மட்டும் சாவுக்கு அஞ்சாத மனதிடமும் கொள்கைப் பிடிப்பும் வாய்த்தது எப்படி?

அது எப்படியானதாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், தினமும் ஒரு முறையாவது இந்தக் கிழவனை நினைப்போம். சாதி, மதம், சாமி, பூதம், சொர்க்கம், நரகம் என்று சொல்லித் திரியும் சுயநலவாதிகளைப் புறந்தள்ளிச் சுயசிந்தனையுடன், வாய்த்த அற்ப வாழ்நாளை அமைதியாகவும் பயனுள்ள வகையிலும் வாழ்ந்து முடிப்போம்.

நன்றி.
========================================================================
தினமணியில் வெளியாகும் கட்டுரைகளை அது நகல் எடுக்க அனுமதிப்பதில்லை.