செவ்வாய், 14 ஜூலை, 2020

இனிது இனிது! மரணம் மிக இனியது!!

வேறு எதனையும்விட, மரணத்தை நினைந்து மனிதன் பெரிதும் அஞ்சுகிறானே, உண்மையில் அது அத்தனை துன்பமானதா?

“இல்லை” என்பதே ஆழ்ந்து சிந்தித்தால் கிடைக்கும் பதிலாகும்.

ஒரு வகையில், அந்த அனுபவம் சுகமானது என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது.

உழைத்துக் களைத்து, வயிறார உண்டு முடித்து, அயர்ச்சியுற்ற நிலையில், நல்ல எண்ணங்களுடனும் மன மகிழ்ச்சியுடனும் உறங்கத் தொடங்குகிற அந்தக் கணங்கள் எத்தனை சுகமானவையோ அத்தனை சுகமானதாக அது இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

உடம்பின் அணுக்களில் பெரும்பாலானவை அல்லது கணிசமானவை அழிவுறும் நிலையில் புதிய அணுக்கள் உருவாக அல்லது பழையவை புதுப்பிக்கப்பட, உடம்பு உறக்கத்தில் ஆழ்த்தப்படுகிறது.

‘உறக்கம்’ ஒரு தற்காலிக மரணம்[திருக்குறள் தந்த மேதையின், ‘உறங்குவது போலும் சாக்காடு...’ நினைவு கூர்க] என்பார்கள்.

அணுக்களைப் புதுப்பித்துக்கொள்ளும் அல்லது புதியனவற்றை உருவாக்கும் ஆற்றலை உடம்பு முற்றிலுமாய் இழந்துவிடும் நிலையில் எய்துவதே ‘இயற்கை மரணம்’ எனலாம்.

இயற்கை மரணத்தின்போது எவ்வகையான துன்பத்தையும் நாம் அனுபவிப்பதில்லையா? இல்லையாயின், ‘மரண வேதனை’ என்கிறார்களே, அதெல்லாம் வெறும் கற்பனைதானா?

அல்ல; அதுவும் உண்மைதான். அதற்கெனக் காரணங்கள்  சில உள்ளன.

கொடிய நோய்களின் தாக்குதல், விபத்துகளால் உறுப்புகள் சிதைதல் போன்றவை முக்கிய காரணங்கள். அப்போது உணரும் வேதனையுடன் செத்துப்போனால், அதை மரண வேதனை என்கிறோம். 

எனவே, மரண வேதனை என்று தனியாக எதுவும் இல்லை.

உடம்பை இயக்குகிற முக்கிய உறுப்புகள் வயது ஆக ஆக வலிமை குன்றி வருகின்றன; செயலாற்றும் திறனை இழக்கின்றன. இதன் விளைவாக, மனிதனின் சிந்திக்கும் ஆற்றலும் குறைந்து வருகிறது. பெருமளவில் அந்த ஆற்றல் இழக்கப்படும்போது ஒருவித மயக்கநிலை உருவாகிறது. முழு அளவில் ஆற்றலை இழக்கும்போது மயக்கநிலையைக் கடந்து மரணத்தைத் தழுவுகிறோம். உடல் நோவுக்கோ, மன வேதனைக்கோ இடமில்லை என்றாகிறது.

முழு முதுமை எய்திய நிலையில், அரிதாகச் சிலர், சில நாட்களோ பல நாட்களோ சுய நினைவு இழந்த நிலையில் உயிர் வாழ்ந்து இறந்துபோவது அறியற்பாலது. ஆக.....

மரண வேதனை குறித்த நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளாமல், உடல்நலம் பேணுவதில் முழுக் கவனம் செலுத்தினால், நமக்குச் சுகமானதொரு மரணம் வாய்க்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்துக்கு இடமில்லை.

முக்கிய குறிப்பு:
சுற்றிவளைத்து, மரணம் சுகமானது என்பதை உறுதிப்படுத்த முயன்றுள்ளேன். உண்மையில் இது சுகமானதுதானா என்பது ஏற்கனவே செத்துப்போனவர் எவரேனும் மீண்டும் உயிர் பெற்று வந்து சொன்னால்தான் தெரியும்.  ஹி...ஹி...ஹி!
**********************************************************************************************