அது உலகப் புகழ் பெற்ற கோயில். ஏறத்தாழ 12 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும் அங்கு தேர்த்திருவிழா நடத்தப்படுவதுண்டு.
இந்த ஆண்டும் விழா நடக்கணும்னு பக்தர்கள் விரும்பினார்கள். கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக, நீதிமன்றம் தடை விதித்தது. ரத யாத்திரையை அனுமதித்தால், “இக்கோயிலில் குடிகொண்டு அருள்பாலிக்கும் கடவுளே எங்களை மன்னிக்க மாட்டார்” என்றார்கள் நீதிபதிகள். காரணம், கொரோனாவின் வெறியாட்டத்திற்குப் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் பலியாவார்கள் என்பது. இதன் விளைவு.....
இந்த ஆண்டு விழா நடந்திடாதோ என்று, கோயில் இடம்பெற்றுள்ள ஊர் மக்கள் மட்டுமின்றி உலகமே கவலையில் மூழ்கிக் கிடந்ததாகச் சோகச் செய்தி வெளியிட்டன ஊடகங்கள்.
பின்னர் அதே நீதிபதிகள், கீழ்க்காணும் வகையிலான கொஞ்சம் கட்டுப்பாடுகளுடன் தேரோட்டம் நடத்த அனுமதி வழங்கினார்கள்
‘500 பேர் மட்டுமே வடம் பிடிக்கலாம். இவர்கள் அனைவருக்கும் கொரோனாத் தொற்றுக்கான சோதனை நடத்தப்படுதல் வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றப்படுதல் அவசியம். மக்கள், தேரோட்டத்தைத் தொலைக்காட்சிகள் மூலமே கண்டு மகிழலாம். வீட்டு வாசல் படிகளில்கூட நிற்பது கூடாது.’
உரிய நாளில், சீரிய முறையில் தேரோட்டம் நடந்து முடிந்தது.
தேரோட்டம் கண்டு கழிபேருவகை அடைந்த மக்கள், நீதிபதிகளின் மனங்களை மாற்றிய கடவுளின் கருணையை நினைந்து மெய் சிலிர்த்தார்களாம். இதுவும் ஊடகச் செய்திதான்.
தேர்த்திருவிழா நடைபெற்ற ஊர் ‘பூரி’[ஒடிசா மாநிலம்].
கடவுள்?
பூரி ஜெகன்னாதர். இவரைத்தான் ‘கடவுள்களின் கடவுள்’ என்கிறது விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஒரு ‘வார இதழ்’.
பூரி ஜெகன்னாதர்தான் கடவுளின் கடவுள்[நாம் தேடிக்கொண்டிருந்தது இவரைத்தான்!] என்பதை அறிந்துகொண்டதில் நமக்குப் பெரு மகிழ்ச்சி!!!
எத்தனை பெரிய கடவுள் இவர்! பக்தகோடிகளையும் நீதியரசர்களையும் ஆட்சியாளர்களையும் சோதிக்காமல், ஒரே ஒரு தடவை “ஒழிக கொரோனா” சொல்லியிருந்தால், கொரோனா ஓடி ஒளிந்திருக்கும், அல்லது பூண்டோடு அழிந்திருக்கும். ஏன் சொல்லவில்லை?