வியாழன், 2 ஜூலை, 2020

போகிறபோக்கில் ஒரு தியானம்!

நான் தியானம் குறித்து ஏற்கனவே மூன்று பதிவுகள் எழுதியுள்ளேன்.

1. தியானமும் மயானமும் https://kadavulinkadavul.blogspot.com/2017/11/blog-post_11.html

2.கண் மூடாமல் தியானம் செய்வது எப்படி?
https://kadavulinkadavul.blogspot.com/2018/12/blog-post_5.html

3. தியானமாம் தியானம் https://kadavulinkadavul.blogspot.com/2019/09/blog-post_23.html

தியானம் செய்யும் முறை குறித்தோ, அதனால் விளையும் பயன்கள் குறித்தோ புரியும் வகையில் எவரும் சொன்னதில்லை என்பதை வலியுறுத்தவே மேற்கண்ட மூன்று பதிவுகளையும் எழுதினேன்.

பலரும் சொல்கிற தியான முறைகளால் பயன் விளைவதில்லை என்பதே இன்றுவரையிலான என் எண்ணம்.

சப்பணம் போட்டு உட்கார்ந்து, கண் மூடிக் கடவுள்களின் பெயர்களை முணுமுணுப்பது தியானம் என்றால் அதனாலும் பயனில்லை என்பது என் அசைக்க முடியாது நம்பிக்கை.

உணர்வுகளைக் கடந்து இருப்புநிலைக்குத் திரும்புவது, அப்புறம் அதுவாகவே ஆவது, உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்வது, அங்கே 12 இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரை இருப்பதாகக் கற்பனை செய்வது, அதில் நம் இஷ்ட தெய்வத்தைக் குந்த வைப்பது, அந்தத் தெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரிப்பது[எப்படியெல்லாம் மயக்குகிறார்கள்!] என்றிவைதான் தியானம் என்றால் அது நமக்கு வேண்டவே வேண்டாம். 

தியானத்தின் மூலம், நம் இன்மைத்தன்மையை உணர்ந்து ஒப்புயர்வற்ற பரம்பொருளுடன் இரண்டறக் கலக்கவும் வேண்டாம்.

அன்றாடம் இதைச் செய்ய முயன்றால் பித்துப் பிடித்துத் தெருத்தெருவாய் அலைய நேரிடும். இதற்குப் பதிலாக.....

எவ்வகைத் துயரையும் தாங்கும் வகையில், மனதைத் திடப்படுத்துவதற்கென்று சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அப்பயிற்சிக்குத் தியானம் என்று பெயரிடுதலும் தவறில்லை.

இந்தவொரு தியானப் பயிற்சிக்குக் காலம், நேரம், இடம் என்று எதுவும் தடையல்ல. மனதைத் தன்வயப்படுத்துதல் மட்டுமே தேவை.

“இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. எது வரினும் அஞ்சாமல் எதிர்கொள்வேன். மனம் தளர மாட்டேன். தோல்வி கண்டு துவள மாட்டேன். உழைப்பேன். ஓயாமல் உழைப்பேன். உயர்வேன். உச்சம் தொடுவேன்.....” என்றிப்படி, அவ்வப்போது உறுதிபட மனதுக்குள்[அருகில் எவரும் இல்லயென்றால் சத்தமாகவும் சொல்லலாம்] சொல்லலாம். அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் சொல்லலாம்.

இப்படி, எப்போது வேண்டுமானாலும் சொல்லிச் சொல்லிச் சொல்லி மன வலிமையைப் பெருக்கிக்கொள்ளலாம்.

நடைப்பயிற்சியின் போது சொல்லலாம். [எதிரில் வருவோர் மீது மோதிவிடாமல்]வாகனங்களில் பயணிக்கும்போது சொல்லலாம். அமர்ந்த கோலத்தில் சொல்லலாம். நின்றபடி சொல்லலாம். படுக்கையில் கிடந்தபடி சொல்லலாம். இதைச் சொல்லும்போது நாம் நம் மனதை நம்வயப்படுத்தியிருக்கிறோமா என்பதுதான் கவனத்தில் கொள்ளத்தக்கது.

பயிற்சி செய்து நிறையவே பயன் பெற்றிட எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.

நன்றி.
==========================================================================