பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 23 செப்டம்பர், 2019

தியானமாம் தியானம்!!!

மேற்கண்ட செய்தி அதன் கீழ் இடம்பெற்றுள்ள ‘சகஜ தீபம்’ என்னும் இதழில் வெளியானது.

ஆன்மிகத்துடன் இரண்டறக் கலந்தது தியானம். ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள் தியானம் பற்றிக் குறிப்பிடத் தவறுவதே இல்லை.

அதென்ன தியானம்?

தியானம் என்னும் சொல்லை நாம் அறிந்திருக்கிறோமே தவிர, அதைச் செய்யும் முறையை ஆன்மிகர்கள் எவரும் புரியும் வகையில் சொன்னதில்லை என்பதே என் எண்ணம்.

சத்குரு[?] ஜக்கி வாசுதேவ் சொல்கிறார்.....

‘தியானம் என்பதன் நோக்கம் எது நீங்கள் இல்லையோ அவற்றிலிருந்து உங்களைத் தனியே பிரித்தெடுப்பதுதான். இந்த உடல் என்பது உணவின் குவியல், இது நீங்கள் அல்ல. எனவே தியானத்தில் அமர்ந்திருக்கும் போது, நான் உடல் அல்ல என்பதைத் தெளிவாக உணர்கிறீர்கள். மனம் என்பதும் வெளியிலிருந்து சேர்ந்த பதிவுகளின் குவியல்தான். உங்கள் குடும்பம், பெற்றோர், சென்று வந்த பள்ளி, செய்யும் வேலை என்பவற்றைப் பொறுத்தே உங்கள் மனம் இருக்கிறது. இது உங்கள் மனமல்ல. இது நீங்கள் சமூகச்சூழலின் மூலம் சேகரித்த ஒன்று. எனவே நீங்கள் மனமல்ல என்ற தெளிவான இடைவெளி[?]யைக் காண்கிறீர்கள்’

‘உடல் நீங்கள் அல்ல’ என்கிறார் வாசுதேவ். மூளையை உள்ளடக்கிய ஒட்டுமொத்த உடம்புதான் நாம். எனவே, உடம்பு வேறு; நாம் வேறல்ல என்பது தெளிவாகிறது. இது அவருக்குப் புரியாமல் போனது ஏன் என்று புரியவில்லை.

‘மனம்’ என்பது வெளியிலிருந்து சேர்ந்த பதிவுகளின் குவியல்’ என்கிறார் ஜக்கி. 

மனம் என்பது இன்றளவும் அறிவியல் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்பது மறுக்க இயலாத உண்மையாகும். நம்மை இயக்குவதும், அதன் மூலம் பெறும் அனுபவங்களைத் தன்னுள் பதிவு செய்வதும் மூளைதான்.

மனம் உங்கள் மனமல்ல என்கிறார் சத்குரு. அதாவது, உங்கள் மூளை உங்களுடையதல்ல என்கிறார். இதனை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளுதல் இயலாது.

இவரைப் போல்தான் ஏனைய ஆன்மிகவாதிகளும் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்களே தவிர தெளிவான விளக்கம் தந்தவர் எவருமில்லை.

தான் வழிபடும் கடவுளின் பெயரைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதைச் சிலர் தியானம் என்கிறார்கள். மனதைப் போலவே கடவுளும் வெறும் அனுமானம்தான் என்பதால் அதனாலும் பயன் விளைவது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதல்ல..

‘சகஜதீபம்’ காரர்.....

‘உணர்தலைக் கடந்து இருப்பு நிலைக்குத் திரும்புகிறோம்’ என்கிறார். அதென்னய்யா இருப்பு நிலை? அதிலிருந்து பின் அதுவாகவே ஆகிறோமாம். எதுவாக?

ஒரு தடவை படித்தால் புரியாது என்று பலமுறை படித்தால் நம் மண்டை காயும்; கலங்கும்; சிந்திக்கும் திறனை இழப்போம். இந்த ஆன்மிகர்கள் வற்புறுத்தும் தியானத்தின் மூலம் நாம் பெறும் பயன் இது மட்டுமே!

அமைதியான சூழலில்.....

‘இதைச் சாதிப்பேன்...சாதிப்பேன்...சாதிப்பேன்’ என்பது போல, குறிப்பிட்ட கால அவகாசத்தில்  மனத்தளவில் உறுதிமொழி எடுப்பதால் மட்டுமே பயன் விளையக்கூடும் என்பது என் நம்பிக்கை.
=======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக