அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 9 ஜூலை, 2020

‘அவர்’ கண்களில் கடவுளைக் கண்ட எழுத்தாளர் ஜெயகாந்தன்!!!

//“அவர் கண்களில் கடவுளைக் கண்டேன்.” -மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.

‘அவர் தமிழ்நாட்டைவிட்டு வடதிசை சென்றதால்தான் இங்கே மழையே பெய்யவில்லை என்று புரட்சித்தலைவர்[எம்.ஜி.ஆர்] கருதினார். அவரைத் திருப்பி அழைத்து வருகிற முயற்சியில் இந்த அணிலுக்கும் பங்குண்டு. அவர் தமிழ்நாட்டின் எல்லையைத் தொட்டபோது பெருமழை பெய்தது. இதற்குப் பலர் இன்னமும் வாழும் சாட்சிகளாக உள்ளனர். அவர்களில் ஒருவர் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் இராம. வீரப்பன்.’ -மறைந்த எழுத்தாளர் வலம்புரிஜான்.

‘சுவாமிகளைப் பார். கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று என் மனைவி பக்கம் திரும்பிச் சொன்னேன்.’ -வலம்புரி ஜான்//

எழுத்தாளர் ஜெயகாந்தனாலும், வலம்புரிஜான் என்பவராலும், ‘அவர்’ என்று குறிப்பிடப்படுபவர் மறைந்த, ‘காஞ்சி முனிவர்’ என்று அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி ஆவார்.

காஞ்சி பரமாச்சாரியாரின் கண்களில் கடவுளைக் கண்டதாகச் சொல்லும் ஜெயகாந்தன், அந்தக் கடவுள் எப்படி இருந்தார் என்று விவரித்துச் சொல்லியிருந்தால் ஒட்டுமொத்த உலகமும் இன்றளவும் அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கும். அவ்வாறின்றி, பொத்தாம்பொதுவாகக் கடவுளைக் கண்டேன் என்று குறிப்பிட்டு, தான் ஒரு பேதை[நல்ல எழுத்தாளன் என்பது விதிவிலக்கு] என்பதைப் பறைசாற்றிவிட்டுப் போனார் அவர்.

காஞ்சி முனிவர் தமிழ்நாடு திரும்பியதும் பெருமழை பெய்ததாகக் குறிப்பிடும் வலம்புரிஜான்.....

அவர் தமிழ்நாடு வந்ததும் மழை பெய்தது என்கிறார், அந்த நிகழ்வு உண்மையானதாகவே இருக்கட்டும். ‘அவர் இருந்தது இந்தப் பூமியில். அவர் உயிரோடு இருந்தவரை இந்தப் பூமியெங்கும்[உலகம் முழுக்க] மழை பெய்துகொண்டே இருந்திருக்க வேண்டும். பெய்ததா? அவர் இருந்தவரை தமிழ்நாட்டில் வறட்சியே ஏற்படவில்லையா?’ என்றெல்லாம் சிந்திக்கிற அறிவு கொஞ்சமேனும் ஜானுக்கு இல்லாமல் போனது ஏன் என்று புரியவில்லை.

“இவரைப் போல்தான் கடவுள் இருப்பார்” என்று சொன்ன இவர், கடவுள் எப்படி இருப்பார் என்று சொல்லாமல் சங்கராச்சாரியாரையே கடவுளாக்கியது அறிவுடைமை அல்ல.

‘சின்னம்மினி’ என்னும் தான் எழுதிய சிறுகதைக்கு ‘இலக்கியச் சிந்தனை’ என்னும் அமைப்பின் பரிசைப் பெற்றவரும், தினமணிக்கதிர், அமுதசுரபி போன்ற இதழ்களில் மிக முக்கியப் பொறுப்பாளராகப் பணியாற்றியவரும், சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவருமான ‘திருப்பூர் கிருஷ்ணன்’ 15.07.2020 குமுதம் வார இதழ் வாயிலாக ‘மேற்கண்ட’[// --- //] தகவல்களைத் தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இந்த வகையில், இவரும் மூடநம்பிக்கைத் திணிப்பில் பங்கு கொண்டவர் ஆகிறார். 

ஒரு மடாதிபதி என்ற வகையில் தனக்குரிய கடமைகளைச் சிறப்பாகச் செய்துவிட்டுப்போனவர் ‘காஞ்சி முனிவர்’ என்றழைக்கப்பட்ட சங்கராச்சாரியார். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல எனினும், தனிப்பட்ட வாழ்க்கையில் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்த நல்ல மனிதர் என்பதில் சந்தேகமில்லை. 

திருப்பூர் கிருஷ்ணன் உட்பட, ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட சிலர் இவரைத் தொடர்ந்து கடவுள் ஆக்கும் முயற்சியில் ஈடுபடுவது இந்த அறிவியல் யுகத்தில் நகைப்புக்குரிய செயலாகும்.

இச்செயல், சங்கராச்சாரியாருக்குள்ள மதிப்பைக் குறைக்குமேயன்றிக் கூட்டவே கூட்டாது.

நன்றி: குமுதம் [15.07.2020] வார இதழ்.
=======================================================================