சனி, 8 ஆகஸ்ட், 2020

காந்தியடிகளின் கடைசிச் சிரிப்பு!

மகாத்மா காந்தியின் இறுதி நாள் ...
அது வழிபாட்டுக்கான நேரம்.

காந்தியடிகள் வழக்கம்போல, ‘ஆபா’, ‘மனு’ ஆகிய பெண்களின் தோள்களில் கைபோட்டவாறு வழிபாடு நடக்கும் இடம் நோக்கி நடக்கலானார்.

மூன்றாம் ஜாமத்தில் அவருக்குப் பச்சை முள்ளங்கிச் சாறு பருகக் கொடுத்திருந்தாள் ஆபா. “விலங்குகள் உண்ணும் உணவை எனக்குக் கொடுத்தாய் இல்லையா?  என்னைத் தவிர வேறு யாரும் இதைச் சீந்த மாட்டார்கள். நான் மட்டுமே இதை விரும்பிக் குடிக்கிறேன்” என்று சொல்லிச் சிரித்தார் காந்தியடிகள்.

“பத்து நிமிடம் தாமதம் ஆகிவிட்டது. தங்களின் கடிகாரம், தன்னை நீங்கள் அலட்சியப்படுத்துவதாக நினைத்து வருந்தக்கூடும்” என்றாள் ஆபா.

“என்னுடைய நேரக்காப்பாளர்களாக நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள். இருந்தாலும் பத்து நிமிடத் தாமதத்துக்காக நான் வருந்துகிறேன்” என்றார் காந்தி.

“நேரக்காப்பாளர்களாகிய எங்களை நீங்கள் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லையே!” என்றாள் ஆபா.

காந்தி சிரித்தார்.

அதுவே அவரின் கடைசிச் சிரிப்பு என்பது அவர்கள் மூவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

வழிபாடு நடக்கும் மேடான இடத்தை அவர்கள் அடைந்தார்கள்.

கூட்டத்தில் அமைதி நிலவியது.

பெண்களின் தோள்களிலிருந்து காந்தி தம் கைகளை விலக்கிக்கொண்ட அதே மணித்துளிகளில் எவனோ ஒருவன், கூட்டத்தை ஊடுருவிக்கொண்டு அவரை நோக்கி வந்தான்.

தடுக்க முயன்ற மனுவை வேகமாகத் தள்ளிவிட்டு, காந்திக்கு வணக்கம் சொல்வது போல் கைகளைக் குவித்தான்; தலை தாழ்த்தி வணங்கிவிட்டு, தன் துப்பாக்கியிலிருந்த ஏழு தோட்டாக்களையும் காந்தியைக் குறி வைத்துச் செலுத்தினான்.

முதல் இரண்டு குண்டுகளும் அவரின் முதுகைத் துளைத்துக்கொண்டு வெளியேறின. மூன்றாவது அவரின் ஆடை மடிப்பில் சிக்குண்டது.

முதல் குண்டு பாய்ந்ததும், காந்தியின் தூக்கிய ஒரு கால் கீழிறங்கியது. அடுத்த இரண்டு குண்டுகள் சுடப்பட்டபோது காலைக் கீழே ஊன்றினார்; பின்னர் தரையில் சாய்ந்தார். அவருடைய வாயிலிருந்து வெளிப்பட்ட கடைசி வார்த்தைகள்.....

“ராம்.....ராம்.....”
=====================================================================
உதவி: ‘ஓம் சக்தி’ மாத இதழ்[ஜனவரி, 1998]