ஒரு சாமானியனுக்கும் சகலமும் அறிந்தவர் எனப்படும் மகானுக்கும்[நடிகர் ரஜினி அல்ல] இடையேயான ஓர் உரையாடல் இது. படித்துப் பயன் பெறுவீர்!
*கடவுள் இருப்பது உண்மையா?
உண்மை...உண்மை... உண்மை. அவர் ஆதியும் அந்தமும் இல்லாதவர்.
*கடவுள் ஒருவர்தானா?
ஒருவர் மட்டுமே.
*பருப்பொருள்கள், நுண்பொருள்கள், உயிர்கள் என்று அனைத்தையும் படைத்தவர் அவர்தானாமே?
ஆமாம்.
*அழிப்பவரும் அவரேதானா?
ஆமாம்...ஆமாம்.
*தான் படைத்ததைத் தானே ஏன் அழிக்கிறார்?
ஒப்புமை கடந்த ஒப்புரவாளன் அவன். அவனன்றி அதற்கான காரணத்தை வேறே எவரும் அறியார்.
*மழுப்புகிறீர்கள்..... விதம் விதமாய்ப் பொருள்களையும், வகை வகையாய் உயிர்களையும் கோடி கோடியாய்ப் படைத்துத் தள்ளியிருகிறார் கடவுள். படைக்கப்பட்டவற்றின் எண்ணிக்கையை நிர்ணயித்தவரும் நிர்ணயிப்பவரும் அவரே அல்லவா?
அந்த அருளாளன் தான்
*இருப்பனவற்றை அழிக்கிறார். புதியனவற்றைப் படைக்கிறார். இவற்றின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பவரும் இந்த ஒரு கடவுள்தான், இல்லையா?
இவர் மட்டுமே.
*ஒரு பொருளைப் போல இன்னொன்று இல்லை. உயிர்களும் அவ்வாறே. இது ஓர் அதிசயம். இதை நிகழ்த்துபவரும் கடவுளே என்கிறீர்கள்?
ஆமாம்.
*உயிர்களில் சிலவற்றிற்கு மிகக் குறுகிய ஆயுள். சிலவற்றிற்கு ஆண்டுக் கணக்கில். காரணம் என்ன?
விதி.
*விதித்தவர்?
எல்லாம் வல்ல அந்த முழுமுதல் கடவுள்தான்.
*இன்பம் பெறும் உயிர்கள் துன்பத்திற்கும் உள்ளாகின்றன. ஏன்?
அவை செய்யும் பாவபுண்ணியங்களின் பலன்.
*கணக்கில் அடங்காதவையாய் உயிர்கள் உள்ளன. அவற்றிற்கான பாவ புண்ணியங்களுக்குப் பட்டியல் தயாரித்து வைப்பது எளிதான செயல் அல்லதானே?
கடவுள் எல்லாம் வல்லவர். அவரைப் பொருத்தவரை எளிதானது அரிதானது என்று எதுவும் இல்லை.
*சொர்க்கம், நரகம்?
உண்டு.
*இவற்றை நிர்வகிப்பவர்?
இதெலென்ன சந்தேகம். இதைச் செய்பவரும் அவரே.
*‘எல்லாம் அவன் செயலே’ எனின், மனிதர்களைப் படைத்து, அவர்களுக்குச் சிந்திக்கும் அறிவைக் கொடுத்ததும், தன்னைப் போற்றி வழிபடச் செய்ததும் கடவுளின் செயலே அல்லவா?
அல்ல...அல்ல. இவை, மனிதர்கள் தம் சுய விருப்பத்தின் பேரில் செய்பவை.
*எல்லாம் அவன் செயலே என்று வலியுறுத்திய உங்களின் இந்த ஒரு கேள்விக்கான பதில், இதுவரை நீங்கள் முன்வைத்த கருத்துரைக்கு முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது; நகைப்புக்குரியதாகவும் உள்ளதே?
அது வந்து...வந்து... ஹி...ஹி...ஹி...
=====================================================================
=====================================================================