புதன், 5 ஆகஸ்ட், 2020

உடலுறவைத் துறந்த கைம்பெண்களின் கையறுநிலை!

அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்ட, நான் எழுதிய ‘செல்லம்மா தேவி’ என்னும்  நாவலிலிருந்து.....

“நான் சுத்திவளைச்சுப் பேசல. எங்களுக்குக் கல்யாணம் ஆயி நாலஞ்சி வருசம் ஆச்சி. வாரிசு இல்ல. உங்க சின்ன மகளை எனக்கு ரெண்டாந்தாரமா கட்டிக் குடுத்துடுங்க” என்றான் ஆறுமுகம், தன் மாமியார் பெருமாயியிடம்.

“இதத்தான் சின்னவளுக்குக் கல்யாணம் ஆவறதுக்கு முந்தியே சொன்னீங்க. இப்பவும் சொல்றீங்க. அது நடக்கும்னு நான் நெனக்கில. இன்னொரு கல்யாணம் வேண்டாம். காலம்பூரா, செத்துப்போன என் புருசன் நெனப்புலயே இருந்துடுவேன்னு திருப்பித் திருப்பி அவ  சொல்லுறா” என்றாள் பெருமாயி.

மாமியாரின் பதிலால் கடும் கோபத்துக்குள்ளான ஆறுமுகம், ‘விசுக்’கென்று எழுந்து வெளியே கிளம்பிப் போனான் ஆறுமுகம்.

அவன் புறப்பட்டுப் போன சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டின் மாடியறையில் தங்கியிருக்கும் கல்லூரிப் பேராசிரியர் கண்ணப்பன் இறங்கிவந்து இருக்கையில் அமர்ந்தார்.

“நீங்க பேசுனதெல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன். ஆறுமுகத்தையும் அங்கம்மாவையும் குழந்தை மருத்துவரைப் பார்த்துட்டுவாங்கன்னு பல தடவை சொல்லிட்டேன். கேட்கல. அவர் மனசில் என்ன நினைக்கிறார்னு தெரியல. இனி அவருக்கு ஆலோசனை சொல்லுறதில்லேன்னு முடிவு பண்ணிட்டேன். இப்போ, உங்களுக்கு ஒன்னு சொல்ல நினைக்கிறேன். தப்பா நினைச்சுடாதீங்க” என்றவர், சற்று நேரம் பெருமாயி முகபாவத்தை ஊன்றிக் கவனித்துவிட்டுத் தொடர்ந்தார்.

“உங்க சின்னப் பொண்ணு, புருசன் நினைப்பிலேயே காலங்கழிச்சுடுவேன்னு சொல்லுது. வைராக்கியத்தோடு இருந்தா அது முடியும்தான். ஆனா, இன்னிக்கான சமுதாயச் சூழ்நிலையில் அது அவ்வளவு சுலபம் இல்ல. ஆண்களோட விரசமான பார்வைகள், தீண்டல்கள், உரசல்கள், காணக் கூசும் அந்தரங்கச் சேட்டைகள்னு பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் நிறையவே இருக்கு. புருசனைப் பலி கொடுத்தவங்க நிலைமை ரொம்பப் பரிதாபம்தான்.....

உடலுறவு கொள்ளவும் வழியில்லாம உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் முடியாம மனநிலை பாதிக்கப்பட்டு, அரைப் பைத்தியமாவும், முக்கால் பைத்தியமாவும் காலம் தள்ளுற கைம்பெண்கள் நிறையவே இருக்காங்க..... 

படிப்பறிவோடு பொது அறிவையும் வளர்த்துக்கொண்ட பெண்கள் நிலைமை கொஞ்சம் தேவலாம். படிக்கிறது, எழுதுறது, அமைப்புகள்ல சேர்ந்து பொதுச்சேவையில் ஈடுபடுறதுன்னு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துறதுக்கான வழிகளைத் தேடிக்கிறாங்க. சில நேரங்களில் மனசு சலனப்பட்டாலும் அதனால அவங்க பெருசாப் பாதிக்கப்படுறதில்ல.....

இன்றைய அறிவியல் யுகத்திலும்கூட, கிராமப்புறத்துக் குடும்பங்களில் உள்ள விதவைப் பெண்கள் நிலைமை நேர் எதிர்மாறா இருக்கு. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பேய் பிடிச்சிடுச்சின்னு மந்திரிச்சித் தாயத்துக் கட்டுறது, பேய் விரட்டுறதுன்னு பல வகைகளில் சித்ரவதை செய்யப்படுறாங்க. இதனால அவங்கள்ல சிலர் செத்தும் இருக்காங்க; தற்கொலை பண்ணிகிட்டவங்களும் இருக்காங்க. அதனால், ஓரளவுக்கேனும் சீர்திருத்த எண்ணமும், பெண்டாட்டியை மதிக்கத் தெரிஞ்ச நல்ல மனமும் உள்ள ஆண்மகன் முன்வந்தா தயங்காம அவனை ஏத்துக்கிறது நல்லது. அதுக்கு வாய்ப்பே இல்லேன்னா, மனசு சோர்ந்து போயி சும்மா இருக்காம, படிப்பு, எழுத்து, பொதுத்தொண்டுன்னு திட்டமிட்டுச் செயல்படலாம்.

உங்க சின்ன மகள் செல்லம்மாவுக்கு நான் சைக்காலஜி பாடம் எடுத்திருக்கேன். புத்திசாலித்தனமா கேள்விகள் கேட்பா. இப்போ நான் சொன்னதையெல்லாம் அவகிட்டே சொல்லுங்க. புரிஞ்சுக்குவா. தனக்கு எது நல்லதுன்னு படுதோ அதன்படி நடந்துக்குவா.”

சொல்லி முடித்து, மாலை நேர நடைப்பயிற்சிக்காக வழக்கமாகச் செல்லும் அருகிலுள்ள பள்ளி மைதானத்திற்குக் கிளம்பினார் பேராசிரியர்.
=====================================================================