‘அங்குத்தர நிகாயம்’ என்பது 2000 பக்கங்கள்கொண்ட ஒரு நூல். புத்தனின் ‘பேச்சு’[நிகாயம்] முழுதும் இதில் தொகுக்கப்பட்டிருக்கிறதாம்.
இதை வாசித்த எழுத்தாளர் சாருநிவேதிதா, ‘நாம் அனுபவிக்கிற இன்பதுன்பங்கள் எல்லாம் முற்பிறப்பில் செய்த வினையின் பயன், அதாவது, கர்மவினை. இந்தப் பிறவியில் செய்கிற நல்லது கெட்டது எல்லாம் வங்கிக் கணக்கைப் போல நம் அடுத்த பிறவியில் கை கொடுக்கும், அல்லது கைவிடும்’ என்கிறார்[“டேய், தட்டானோட ரெக்கையைப் பிய்க்காதே. அடுத்த ஜென்மத்தில் நீ தட்டானாப் பொறப்பே” என்று தன் தாய் எப்போதோ சொன்னதை இங்கு நினைவுகூர்கிறார் சாரு].
தன்னுடைய குமுதம் கட்டுரையின் இறுதியில், புத்தனின் இந்தக் கருதுகோள் குறித்ததொரு ஐயத்தையும் முன்வைக்கிறார்.
இந்த நூலைப் பாலி மொழியிலிருந்து மொழியாக்கம் செய்த பிக்கு ‘போதி’ அமெரிக்காவில் வசிப்பதால், இதைப் படிக்கும் பிக்கு எவரேனும் தான் எழுப்பும் சந்தேகத்திற்குப் பதில் தர வேண்டும் என்று ஒரு வேண்டுகோளையும் அவர் வைத்திருக்கிறார்.
‘ஒரு யுத்தம் நடந்தால், அதன் காரணமாக எத்தனையோ அப்பாவி மக்கள் செத்துப்போகிறார்கள். இலங்கை யுத்தம் ஓர் உதாரணம். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் 3000 பேர் சில நொடிகளில் இறந்தார்கள்.
‘இம்மாதிரிக் கொடூர மரணங்கள் எல்லாம் முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சாருநிவேதிதா.
சாருவின் வேண்டுகோள் பிக்குகளை எட்டுமா, அவர்கள் பதில் தருவார்களா என்பது பற்றி நாம் அனுமானிக்க இயலாது.
பிறவிகள் உண்டா, ஒரு பிறவியில் செய்யும் பாவபுண்ணியங்களின் பலன்களை இன்னொரு பிறவியில் அனுபவிப்பது சாத்தியமா என்பன போன்ற கேள்விகளுக்கு அறிவுபூர்வமாக ஏற்கத்தக்க முடிவுகள் இந்நாள்வரை எட்டப்படவில்லை என்பது எழுத்தாளர் சாருநிவேதிதாவுக்குத் தெரிந்தே இருக்கும்.
இருப்பினும், புத்தனின் கருத்தியலை உண்மை எனக்கொண்டு, சாருவின் கேள்விக்கு நாம் அறிந்த பதிலை இங்குப் பதிவு செய்கிறோம்.
‘யுத்தங்களில் அப்பாவிகள் கொல்லப்படுவது முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவா?’ என்பது கேள்வி.
சாருவின் பார்வையில் அப்பாவிகள் எனப்படுவோர் நல்லவர்கள். இப்பிறவியில் அவர்கள் பாவம் செய்யாதவர்கள்; முற்பிறப்பில் புண்ணியம் செய்ததால் இப்பிறப்பில் சுகபோகமாக வாழ்வதற்குத் தகுதி பெற்றவர்கள். எனவே.....
யுத்தங்களில் அப்பாவிகள் கொல்லப்படுவது, அவர்கள் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவு அல்ல; அல்லவே அல்ல என்பது உறுதியாகிறது.
‘விதி’யே காரணம் எனில். அந்த விதியை வகுத்தவன் தண்டனைக்குரியவன் ஆகிறான்.
உலகங்களைத் தோற்றுவித்து, உயிர்களையும் படைத்து, அவற்றிற்குப் பல பிறவிகளைக் கொடுத்து, ‘கர்மவினை’[நல்வினை, தீவினை]களுக்கு உள்ளாக்கி, செய்யும் வினைகளுக்கேற்ற பலன்களையும் வழங்குபவன் என்று சொல்லப்படுகிற கடவுளே இந்த விதியை வகுத்தவன் ஆவான்.
தண்டனைக்குரியவனும் அவனே.
அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவனாம். அனைத்திற்கும் மேலானவனாம். எங்கும் நீக்கமற நிறைந்து உறைபவனாம். படைத்தவன் அவனே. படைத்தவற்றை ஆளுபவனும் அந்தக் கடவுளே.
இவ்வகையானதொரு கடவுள் இருப்பது உண்மையென்றால்.....
அவனை நம்மால் தண்டிக்க இயலாது. ஆனாலும், நாளும் நிந்திக்கலாம். வழிபடுவதைத் தவிர்க்கலாம்.
=====================================================================