ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

'நீட்'டுக்கும் காதலுக்கும் வேறுபாடு தெரியாத [ராஜாதி]ராஜா!!!

படம் உதவி: 'வினவு'

தமிழ்நாட்டின் இன உணர்வுள்ள கட்சித் தலைவர்கள் பலரும், 'நீட்' தேர்வை  ரத்து செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், ‘நீட்’ மீதான அச்சத்தால் 16 மாணவ மாணவிகள்[இன்று ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்] தற்கொலை செய்துகொண்டுள்ள அவலம் நேர்ந்திருக்கிறது.

நடுவணரசு சற்றேனும் அசைந்துகொடுக்கவில்லை. இவ்வாண்டுக்கான தேர்வும் இன்று நடந்துவிட்டது.

இந்நிலையில்.....

நீட் தேர்வைத் தடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

"தமிழக மாணவர்களுக்கு நீட்டால் தொடர்ந்து பாதிப்பு வருவதை மத்திய அரசு உணர மறுக்கிறது. மரணங்களுக்கு மாநில அரசு வெறும் இரங்கல் தெரிவிக்கிறது; நீட்டுக்கே இரங்கல் தெரிவிக்க வேண்டும்" என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

“எட்டு மாதங்கள் பொறுத்திருங்கள். நடக்கவிருக்கும் தேர்தலில் வென்று. ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ‘நீட்’ தேர்வை ரத்து செய்வோம்” என்று மாணவர்களுக்கு உறுதிமொழி வழங்கியிருக்கிறார் தி.மு.க, தலைவர் மு.க.ஸ்டாலின்.

"நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே" என்று கண்டித்திருக்கிறார் கனிமொழி

''மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?" என்று மன வேதனையுடன் கேள்வி எழுப்பியிருக்கிறார் 'மக்கள் நீதி மய்யம்' கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

“இந்தத் தற்கொலைகள் எல்லாம் மத்திய, மாநில அரசுகள் கூட்டுச்சேர்ந்து செய்து முடித்த பச்சைப் படுகொலைகளாகும். தமிழர்களுக்கெதிரான மோடி அரசின் நயவஞ்சகத்தனமும், அதற்கு ஒத்திசைந்து போகும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் கையாலாகத்தனமுமே இத்தனை பேரின் உயிரைப் போக்கியிருக்கிறது" என்று சாடியதோடு, "நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் நிலைமை விபரீதமாகும் என்றும் எச்சரித்திருக்கிறார் ‘நாம் தமிழர்’கட்சித் தலைவர் சீமான்.

மாணவ-மாணவிகளின் உயிரைப் பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

"நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையே காரணம்" என்று 'வைகோ' அறிவித்துள்ளார்.

அடுக்கடுக்காய் ஒரே நாளில் 3 "நீட்" தற்கொலைகள் நிகழ்வ்துள்ளன. தேர்வை உடனே ரத்து செய்க" என்று வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

"நிலைமையின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கப்பட வேண்டும்" என்று தனது இரங்கலில்  குறிப்பிட்டுள்ளார் பா.ம.கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ்.

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு, தனது அரசுப் பள்ளி ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்த ஆசிரியர் சபரிமாலா, மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்காவுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர் நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தைத் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
           *                   *                   *                              
பல தலைவர்களின் கோரிக்கைகளுக்கும் கண்டனங்களுக்கும் இடையே, "காதல் தோல்வியிலும்கூடத் தற்கொலை செய்கிறார்கள் என்றால் காதலிப்பதற்குத் தடைச் சட்டம் போட முடியுமா?" என்று  கேட்டிருக்கிறார் நம்ம ஊர் ராஜாதி ராஜா.

தேர்வு என்பது தேவை கருதி நாமாகச் செய்துகொள்ளும் ஒரு ஏற்பாடு. அதனால் தீங்கு விளையும்போது[நீட் தேர்வைப் போல] அந்த ஏற்பாட்டை ரத்து செய்வது சாத்தியம்.  காதல்(காமம்) என்பதோ..... இயற்கையான ஓர் உணர்ச்சி. அந்த உணர்ச்சியால் தீங்கு விளைந்தாலும் அதற்குத் தடை விதிப்பது(விலக்குவது) சாத்தியமே இல்லை.

-இந்த எளிய உண்மையைக்கூட அறிந்திராத இவர் இந்த நாட்டை ஆளுகிற பெரிய கட்சியின் தேசியச் செயலாளராம்!? 

ஹ...ஹ...ஹ!!!

நான் மட்டும் சிரிக்கல. இந்த நாடு சிரிக்குது. உலகம் சிரிக்குது. அண்டசராசரமே 'கடகட'னு வாய்விட்டுக் 'கண்சிமிட்டி'ச் சிரிக்குது!!!
=====================================================================