ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

விலங்குகளைவிடவும் இழிந்தவர்களா கடவுள்கள்?!?!

ஆண் சிங்கம் தனக்குப் பிடித்தமான துணை கிடைக்கும்வரை தனித்தே வாழும். பிரியத்திற்குரிய துணை கிடைத்து, குட்டிகளை ஈன்றெடுத்த பின்னரும் வேறு பெண் சிங்கங்களைத் தேடி அலைவதில்லை. இணைந்து வாழும் ஆணும் பெண்ணும் பிரிக்கப்பட்டுத் தனித் தனியே வாழும் சூழலிலும்கூட, இவை இரண்டும் வேறு துணையை நாடுவதில்லை.

சிங்கம் என்றில்லை, நரிகூட, தன் துணையைத் தவிர உடலுறவுச் சுகத்துக்காக வேறொரு நரியைத் தேடி அலையாது.

கழுகு, இன்னொரு கழுகுடன் இணை சேர்ந்த பிறகு வாழ்நாளெல்லாம் பிறிதொரு கழுகைத் தன் துணையாக்கிக் கொள்வதில்லை.

பறவைகளில் புறாவும்கூட, தன் இணையுடன் மட்டுமே கலவி புரியும்.
சங்க கால இலக்கியங்களால் பேசப்படும் ‘அன்றில்’ பறவை, தன் துணை இறந்துவிட்டால் உயர உயரப் பறந்து, ஒரு நிலையில் இறக்கைகளை அசைக்காமல் தலைகுப்புற விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் என்பது செய்தி. 

சிட்டுக்குருவிகளும்கூட ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் ஒழுக்க நெறியைப் பின்பற்றி வாழ்பவைதான்.

இவை போல, இல்லற வாழ்வில் தடம் பிறழாத இன்னும் பல விலங்குகளும் பறவைகளும் இருத்தல்கூடும்.

மேற்குறிப்பிட்ட  உயிரினங்களிடம் உள்ள இந்த ‘ஒழுக்கம்’ நம்மவர்கள் கோயில் கோயிலாகச் சென்று வழிபடும் ‘கதைக்கப்பட்ட’ பல கடவுள்களிடம் இல்லை.

சிந்திக்கவே விரும்பாத நம் மக்களில் பலரும், ஆன்மிகர்கள்[‘கடவுள் ஒருவரே’ எனப்படும் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள்] சொல்லிச்சென்ற ஆபாசக் கதைகளை அடிப்படையாகக்கொண்டு கோயில்களில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிலைகளையும், வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும் கண்டு கண்டு ரசிக்கிறார்கள்; கழிபேருவகை எய்துகிறார்கள்.

கற்பைக் கடைச்சரக்காக்கிய சாமிகளையெல்லாம் தேடிப் போய்க் குறை நேர்வதும் ஒழுக்கம் கெட்டதுகளிடம் அன்பு, கருணை போன்ற நற்பண்புகளை எதிர்பார்ப்பதும் தவறு என்பது இன்றளவும் அவர்களுக்குப் புரியவில்லை; புரிந்துகொள்ள அவர்கள் தயாராகவும் இல்லை.

ஆனால்.....

மூடர்கள் கட்டிவிட்ட கதைகளையும், மூடநம்பிக்கைகளையும் கண்டிப்பவர்களை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

அசிங்க அசிங்கமாகச் சித்திரிக்கப்பட்ட கடவுள்களைப் பட்டியலிடுவதற்கோ, அவர்களை வழிபடுபவர்களைச் சாடுவதற்கோ இப்பதிவை நான் எழுதவில்லை[இப்பணியை ஏற்கனவே பல சிந்தனையாளர்கள் செய்திருக்கிறார்கள்].

‘விலங்குகள், பறவைகள் போன்ற உயிர்களிடத்தில் உள்ள சில ஒழுக்க நெறிகள், பெரும்பான்மை மக்களால் வழிபடப்படுகிற, கற்பிக்கப்பட்ட பல கடவுள்களிடத்தில் இல்லை!!!’ என்பது மட்டுமே இதைப் பதிவிட்டதன் நோக்கம் ஆகும்.
===============================================================