அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 1 அக்டோபர், 2020

மரித்து 3ஆம் நாள் உயிர்த்தெழுவது சாத்தியமா?

#சிலுவையில் அறையப்பட்டு உயிர் மரித்த இயேசு, மூன்று நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்தது இயல்பான அனுபவமல்ல.

அவர் அவ்வாறு உயிர்த்தெழுந்தாகச் சொல்லப்படும் நூல்களில், அந்த நிகழ்வு சரித்திரபூர்வமானது என்பதற்கான ஆதாரம் தரப்படவில்லை என்பது அறியத்தக்கது. அதாவது, அந்த நிகழ்வுக்குச் சாட்சியம் ஏதுமில்லை.

இவர் உயிர்த்தெழுந்த கதை நான்கு சுவிசேஷங்களில் சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த நான்கில் இரண்டுதான் உயிர்த்தெழுந்த அபூர்வச் சம்பவத்தைக் குறித்திருக்கின்றன. 'செயின்ட் ஜான்' சுவிசேஷம் இப்படியொரு சம்பவம் நடந்ததாகச் சொல்லவில்லை. 'செயின்ட் லுயிக்' ஒரு போக்காக[மேலோட்டமாக?]க் குறிப்பிடுகிறது. இதில் சொல்லியுள்ளபடி 'செயின்ட் மாத்யூ'வில் சொல்லப்படவில்லை. 'ஆதி சுவுசேஷம்' என்று சொல்லப்படும் 'செயின்ட் மார்க்' இது பற்றிக் குறிப்பிடவே இல்லை.

ஆக, உலகப் பிரசித்திப் பெற்ற 'உயிர்த்தெழுந்த' இந்த நிகழ்வின் கதியே இதுவெனில், இது போன்ற, பிற மத...குறிப்பாக, இந்துமதப் புராணக் கதைகள் குறித்துச் சொல்லவே வேண்டாம்.

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று பிரகலாதன் சொல்ல, இரணியன் எட்டி உதைத்ததால் நரசிம்மமூர்த்தி தூணைப் பிளந்துகொண்டு வெளியேறியதாகச் சொல்லப்படுவதெல்லாம்  கற்பனைக் கதைகளே.

இப்படியான கதைகள் இன்னும் எத்தனை எத்தனையோ.

ஊமைப் பெண்ணைப் பேச வைப்பது; சாம்பலாகிப் போன பெண்ணுக்கு உயிர் கொடுப்பது; தொட்ட மாத்திரத்தில் தொழு நோயாளி குணமடைவது; சமைத்துச் சாப்பிடப்பட்ட பிள்ளை உயிர்பெற்று எழுவது; சூரியன் உதயமாவதை ஒரு கற்புக்கரசி தடுத்து நிறுத்துவது; ஆற்றைப் பெண்ணாக்கித் தலையில் சுமப்பது என்று இம்மாதிரிக் கற்பனைக் கதைகளுக்கான எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

நோய் எதுவாயினும், அதற்கான காரணம் கிருமிகளே. அது, உடம்புக்குள் ஊடுருவியிருக்கலாம், அல்லது வெளியே அலைந்து திரிவதாகவும் இருக்கலாம். ஐம்புலன்களால் அறிய இயலாத கடவுள் காரணம் அல்ல.

இரண்டு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கிப்போக, அவர்களை இரண்டு கந்தர்வர்கள் காப்பாற்றியதாகக் கிறித்தவ மார்க்கத்தில் ஒரு கதை உண்டு.

இம்மண்ணில், ஒவ்வொரு நாளும் எத்தனையோ குழந்தைகள் கிணறுகளிலும், ஆறுகளிலும், வெள்ளத்திலும் மூழ்கிச் சாகின்றன. கடவுளர்கள் கந்தர்வ வடிவத்தில் வந்து இவர்களையெல்லாம் காப்பாற்றுவதில்லையே, ஏன்?

தமக்கு வேண்டப்பட்டவர் ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டால், அது கடவுள் அருளால் என்கிறார்கள். தினம் தினம் பல்லாயிரவர் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கடவுள் கருணை காட்டாதது ஏன் என்று மக்கள் சிந்திப்பதேயில்லை.

தத்தம் கோரிக்கை நிறைவேறினால் அது தெய்வத்தால் ஆனது என்று சொல்பவர்கள், தெய்வத்தால் நிறைவேற்றப்படாத விருப்பங்கள் கோடிக்கணக்கில்[99%] இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

கடவுளைக் கற்பித்த அனைத்து மதங்களுமே இவ்வாறான கதைகளைக் கற்பித்து மக்களிடையே பரப்பியுள்ளன. இவற்றால் விளையும் பெரும் தீங்குகள் குறித்து அவை கவலைப்படுவதே இல்லை. தத்தம் மதம் பரப்புவது மட்டுமே அவற்றின் தலையாய நோக்கமாக இருப்பது மிக மிக வருந்தத்தக்கது.

சில பிராணிகள், உயிரைத் துறக்காமலே புதைக்கப்பட்ட நிலையில், அசையாமலே இருந்து பின்னர் அசையும் நிலையை அடைவதுண்டு. இதற்கு, Suspended animation என்று பெயர். இதற்கும் ஏசு உயிர்பெற்றெழுந்தற்கும் சம்பந்தம் உண்டா என்பது தெரியவில்லை.#

===============================================================

நன்றி: மா.சிங்காரவேலு அவர்களின், 'கடவுளும் பிரபஞ்சமும்' பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு; சென்னை. 7ஆம் பதிப்பு, பிப்ரவரி, 2013.