பக்கங்கள்

சனி, 3 அக்டோபர், 2020

புத்திசாலி மாமியார்!!!

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மனைவி தனலட்சுமியிடம், “உன் மருமகளுக்கு ஃபோன் பண்ணிடு” என்றார் முத்துசாமி.

”எதுக்கு.”

“இங்கே வந்து ரொம்ப நாளாச்சி. பேரப் பிள்ளைகளைப் பார்க்கணும்னு தோணலையா? வந்து ஒரு மாசம் இருந்துட்டுப் போங்கன்னு சொல்லிட்டே இருக்கான் நம்ம புள்ள. நாளை  சென்னை கிளம்புவோம். விசயத்தை அவளுக்குச் சொல்லிடு” என்றார் முத்துசாமி.

“ஊருக்கு வர்றோம்னு சொன்னா பதிலே சொல்லாம ஃபோனை வெச்சுடுறா. அவனுக்குச் சொன்னா போதாதா?” என்றாள் தனலட்சுமி.

“போதாது. அவ ரோசக்காரியாச்சே. அவன் வேலைக்குப் போனதும் வீட்டைப் பூட்டிட்டுப் போயிடுவா. நாம வாசப்படியில் காத்துக் கிடக்கணும். இப்பவே ஃபோன் பண்ணிடு.”

அலைபேசியை உயிர்ப்பித்து, “நாளை கழிச்சி நானும் மாமாவும் அங்கே வர்றோம். அது வந்தும்மா... இங்கே ரெண்டு மூனு கல்யாணத்துக்கு அழைப்பு வந்திருக்கு. ரெண்டு நாள் மட்டும் தங்கிட்டு ஊர் திரும்பிடுவோம்.”

“சரிங்க அத்தை” என்றாள் மருமகள்  வினிதா.

பேசி முடித்து அலைபேசியை  அணைத்தபோது  முத்துசாமி சிரித்தார்; “கல்யாண அழைப்பு இருக்குன்னு எதுக்குப் பொய் சொன்னே?” என்று கேட்டார்.

“நாம ரெண்டு நாள்தான் இருப்போம்னு முன்கூட்டியே சொல்லிட்டா, கொஞ்சம் மரியாதை கொடுத்து உபசரிப்பா. சொல்லலேன்னா, நாள் கணக்கில் கேம்ப் போட்டுடுவோமோன்னு முகம் கொடுத்துப் பேசமாட்டா. உபசரிப்பும் படு மட்டமா இருக்கும்” என்றாள் தனலட்சுமி. 

“நீ ரொம்பத்தான் புத்திசாலி.” -மனைவியைப் பாராட்டினார் முத்துசாமி.

===============================================================