உலகம் முழுவதும் 3.7 கோடிக்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவது என்பது அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது.
ஆனாலும், ஹாங்காங், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இரண்டாவது முறையாக நோய்த்தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டடது. அவர்களுக்கு முதல் முறையைவிட நோயின் தீவிரத்தன்மை குறைவாகவே உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞருக்குக் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகையிலான எவ்வித உடல்நலப் பிரச்சனைகளோ அல்லது நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடோ இல்லை. ஆயினும், இரண்டாவது முறையாக கோவிட்-19 பாதிப்பு அவருக்கு ஏற்பட்டது. அதில் தீவிரத்தன்மை அதிகம் இருந்தது. தீவிரம் அதிகரித்ததற்கான காரணம் அறியப்படவில்லை. ஆனாலும், இரண்டாம் முறையும் கொரோனா பாதிப்பிலிருந்து அவர் மீண்டுவிட்டார்.
இவரைப் போன்று ஈக்குவேடாரில் ஒருவருக்கு இரண்டாம் தொற்றில் முந்தைய தொற்றைவிடப் பாதிப்பு அதிகமாக இருந்தது. இருப்பினும், அவருக்கு மருத்துவமனைச் சிகிச்சை தேவைப்படவில்லை.
சில நாடுகள் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருவதால், இந்த விவகாரத்தில் விரைவில் தெளிவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
கொரோனா வைரஸ் முதல் அலையின்போது மனிதர்களின் உடல், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குக் கற்றுக்கொண்டதால், இரண்டாவது அலையின்போது கோவிட்-19 பாதிப்பு குறைந்த வீரியம் கொண்டதாகவே இருக்குமென்று கருதப்படுகிறது.
கொரோனா வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்ட அனைவரும் அந்த வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுகிறார்களா? இதில் குறைந்த அளவு நோய்த்தொற்று அறிகுறிகள் கொண்டிருந்தவர்களும் அடக்கமா? ஒருவேளை இதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கிறது என்றால் அது எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்? என்றிவை உள்ளிட்ட எண்ணற்ற சிக்கலான கேள்விகளுக்கான பதில்களை அறியும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
இப்போதைய சூழ்நிலையில், நோய்த்தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், முகக் கவசத்தை அணிதல், கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
===============================================================
தகவல்: https://www.bbc.com/tamil/science-54521331, 14 அக்டோபர் 2020